மாவட்ட கவுன்சிலர் பதவி... அதிமுகவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்.. கொண்டாட்டத்தில் கதர்ச்சட்டையினர்..!
சென்னை: மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கான போட்டியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த படியாக 3 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
9 மாவட்டங்களிலும் மொத்தம் உள்ள 140 இடங்களில் அதிமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொன் விழா
அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அக்கட்சி பொன்விழா கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி அடைந்துள்ள தோல்வி படுதோல்வியாகவே பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலிலாவது கவுரவமான தோல்வியை தழுவியிருந்தது அதிமுக. ஆனால் இந்த முறை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை காட்டிலும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் குறைந்த இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.

2 இடங்களில்
செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதனிடையே திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 மாவட்ட கவுன்சிலர்களை பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக விடுதலை சிறுத்தைகள் 3 மாவட்ட கவுன்சிலர்களை பெற்றிருக்கிறது. பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஒருவர் கூட மாவட்ட கவுன்சிலராக வெற்றிபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பின்னுக்கு தள்ளும்
அதிமுகவை காங்கிரஸ் பின்னுக்கு தள்ளும் என அரசியல் நோக்கர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. எதுவும் எப்போதும் நிகழலாம் என்பது தானே அரசியல். அதன்படி தாங்கள் அடைந்துள்ள வெற்றியை நேற்று முதல் கொண்டாடி வருகின்றனர் கதர்ச்சட்டையினர். இதேபோல் ஒன்றியக் கவுன்சிலர் பதவியிடங்களுக்கான போட்டியில் காங்கிரஸ் 3-வது இடத்தை பிடித்திருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் தவிர்க்க முடியாதது என்பதை அக்கட்சி நிருபித்துள்ளது.

செல்வாக்கு சரிவு
இதனிடையே அதிமுகவால் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பே இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் சரிந்து வருவதையே இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications