வன்முறையை தூண்டும் நோக்கில் ஆளுநர் செயல்படுகிறார்.. வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் என்பவர் வெறும் போஸ்ட் மாஸ்டர்தான் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக சட்ட சபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த திங்கட்கிழமை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது.
ஆளுநர் உரை தொடங்கியதும் 'தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று அழைக்க வேண்டும்' என்று கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தேசியகீதம் இசைத்த பின்னர்தான்
தொடர்ந்து உரையை தொடங்கிய ஆளுநர் தனது உரையில் சில வார்த்தைகளை படிக்காமலும், சில வார்த்தைகளை கூடுதலாக சேர்த்தும் பேசினார். இது ஆளும் திமுக அரசுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்தது. இதையடுத்து, சில பகுதிகளை பேசாமல் தவிர்த்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி, தீர்மானம் நிறைவேற்றியதால் அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். தேசியகீதம் இசைத்த பின்னர்தான் ஆளுநர் சட்டசபையை விட்டு செல்வது வழக்கம்.

ஆளுநரை கண்டிக்கும் விதமாக போஸ்டர்
ஆனால் ஆளுநர் திடீரென புறப்பட்டு சென்றது சட்டசபை கூட்ட வரலாற்றிலேயே இதுவரை நடக்காத ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆளுநருக்கு எதிராக சமூக வலைத்தளங்களிலும் ஹேஷ்டெக்குகள் டிரெண்ட் ஆகின #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. அதேபோல், ஆளுநரை கண்டிக்கும் விதமாக போஸ்டர்களும் அடித்து ஒட்டப்பட்டு இருந்தன. இதையடுத்து, நேற்று நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், சட்டசபையில் நடைபெற்ற சம்பவத்தை அப்படியே விட்டுவிடுங்கள்.. தொகுதி பிரச்சினைகளை பற்றி பேசுங்கள்.

சட்டப்பூர்வமாக எப்படி அணுகலாம்
ஆளுநரை பற்றி சட்ட சபையில் தாக்கி பேச வேண்டாம். மக்கள் பிரச்சினைகளை பேசுங்கள். ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பூர்வமாக எப்படி அணுகலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறோம். ஆளுநரை கண்டித்து சுவரொட்டி ஒட்டவோ பேனர் வைக்கவோ வேண்டாம்" என அறிவுறுத்தியிருந்தார். ஆளுநரின் செயல் அரசியல் அமைப்பு விதிகளை மீறும் வகையில் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர்
விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநருக்கு எதிராக முற்றுகை போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் டிகே சத்ய சீலன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; -

குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்
அண்ணல் அம்பேத்கரின் பெயரைக் கூட ஆளுநர் உச்சரிக்க மறுத்தது கண்டித்தக்கது. ஆளுநரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் என்பவர் வெறும் போஸ்ட் மாஸ்டர்தான். தற்போது ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் எனக்குறிப்பிட்டு குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார். ஆளுநர் பொதுமக்களின் பிரதிநிதியாக பொதுநலன் கருதி செயல்பட வேண்டுமேயன்றி, ஒருதலைபட்சமாகவோ அல்லது பாஜகவின் ஊதுகுழலாகவோ செயல்படக்கூடாது. எனவே, ஆளுநரின் செயலை கண்டிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications