கேரளாவின் கொரோனா தாக்கம் தமிழகத்தில் எதிரொலிக்கிறதா.. பாதிப்பு உயர்வு.. ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்!
சென்னை: நமது அண்டை மாநிலமான கேரளா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அதிர்ச்சியை கொடுக்கின்றன.
Recommended Video
ஓணம் பண்டிகைக்கு கொடுக்கப்பட்ட தளர்வுகளுக்கு பிறகு கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் சென்று வருகிறது.

பரிதவிக்கும் கேரளா
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 29,332 கொரோனா பாதிப்புகள் பதிவாகின. கொரோனாவுக்கு மேலும் 131 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 21,280 ஆக இருக்கிறது. கொரோனாவுக்கு 2,46,437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து 22,938 பேர் குணமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் கொரோனா நேர்மறை விகிதம்(பாசிடிவ் ரேட்) 17.91 சதவீதமாக உள்ளது. அதாவது தற்போது நாட்டில் ஏற்படும் மொத்த பாதிப்பில் சுமார் 70 சதவீத பாதிப்புகள் கேரளாவில் மட்டுமே எற்பட்டு வருகின்றன.

3 மாவட்டத்தில் அதிகரிப்பு
எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் மட்டும் தினமும் தலா 3,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கேரளாவின் கொரோனா தாக்கம் அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் கடும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக-கேரளா எல்லையான குமரி மாவட்டம் களியக்காவிளை, கொல்லங்கோடு ,கோவை மாவட்டம் வளையாறு மற்றும் நீலகிரி மாவட்ட சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இருந்தபோதிலும் அச்சுறுத்துல் தொடர்கின்றன.

கோவையில் உயர்வு
தமிழகத்தில் வியாழக்கிழமை 1,568 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இதில் 5 பேர் கேரளாவில் இருந்து திரும்பியவர்கள் ஆவார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா சற்று அதிகரித்துள்ளது. புதன்கிழமை 1,509 ஆக இருந்த பாதிப்பு, வியாழக்கிழமை 1,562 ஆக அதிகரித்து, வெள்ளிக்கிழமை 1,568 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கோயம்புத்தூர், நாமக்கல், கடலூர் மற்றும் விழுப்புரம் உட்பட சில மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்புகள் ஓரளவு அதிகரித்துள்ளது.

கடலூர், நாமக்கல்
கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் மிக அதிகமான பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. வியாழக்கிழமை 215 பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில், இது 239 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. கோவை கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டமாகும். நாமக்கல்லில் புதிய பாதிப்புகள் 47-ல் இருந்து 62 ஆக உயர்ந்தது; கடலூரில் இது 43 லிருந்து 55 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அதாவது திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், பெரம்பலூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 25-க்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கேரளர்கள் முழு தடுப்பூசி சான்றிதழ் அல்லது ஆர்டி-பிசிஆர் எதிர்மறை சான்றிதழை வழங்கினால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மும்பை
கேரளாவுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மும்பையில் தினசரி வழக்குகளின் சரிவு இருந்தபோதிலும், நேர்மறை விகிதம்(பாசிடிவ் ரேட்) அதிகரித்துள்ளது. மும்பை வெள்ளிக்கிழமை 422 புதிய பாதிப்புகளை பதிவு செய்துள்ளது, முந்தைய நாள் 441 இல் இருந்து, டிபிஆர் 1.29 சதவீதமாக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை 1.18 சதவீதமாக இருந்த மும்பையின் டிபிஆர், வெள்ளிகிழமை 1.29 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications