சம்பா ரவை சாப்பிடுபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. 6 மடங்கு ரசாயனம் இருக்கிறதாம்
சென்னை: நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் சம்பா ரவை மற்றும் அரிசி மாவுகளில் 6 மடங்குக்கும் மேலாக ரசாயனம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ள நிலையில், இதனைத் தடை செய்யாமலிருக்க பல்வேறு தரப்பினரும் முயற்சிகள் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் சம்பா ரவைக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஈசியாகவும் சட்டென்றும் சமைக்க முடியும் என்கிற அதே நேரத்தில், சிறந்த டயட் ரெசிபியாகவும் கூறப்படுவதால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

சம்பா ரவை உப்புமா, சம்பா ரவை பிரியாணி என பல்வேறு வகைகளில் இதனை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் இதன் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் சம்பா ரவை தயாரிக்கும் நிறுவனங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் இந்த நிறுவனங்களில் தயார் செய்யப்படும் சம்பா ரவையை ஆய்வகத்து அனுப்பி பரிசோதனை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பரிசோதனையில், சம்பா ரவையில் இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 6 மடங்கு ரசாயனம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்ததுள்ளது.
உணவுப் பொருள்கள் கெட்டுப் போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் குளோர்பிரிபோஸ் ரசாயனம் 6 மடங்கு அதிகமாக சம்பா ரவையில் சேர்க்கப்பட்டுள்ள தெரியவந்துள்ளது. இது சாப்பிடுவதற்கு தகுதியற்ற பொருள் என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.
இதனை சாப்பிடுவதால் நுரையீரல் பிரச்னை ஏற்படுவதோடு, குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. மேலும், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சம்பா ரவையில் பூச்சிக்கொல்லி அதிகம் உள்ளதாகக் கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் சிலர் கூறுகையில், பொதுவாக சம்பா கோதுமையை குறிப்பிட்ட நேரம் ஊறவைத்து, உடைக்கப்படும். அவ்வாறு ஊறவைக்கும்போது ரசாயனம் கலக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது. ஏனெனில் குறிப்பிட்ட சில முக்கிய பிராண்டுகளின் சம்பா ரவையில் மட்டும்தான் இதுபோல அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு அந்த நிறுவனங்களின் தரப்பில் பஞ்சாப்பில் விளையும் சம்பா கோதுமையில் அதிக அளவில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள்தான் காரணம் என கூறுகின்றனர்.
ஆனால், அதே பகுதியில் உள்ள மற்ற நிறுவனங்களின் சம்பா ரவையை ஆய்வு செய்ததில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பூச்சிக்கொல்லி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவதால் மூன்று மாதங்களில் பூச்சி வரும் உணவு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பாக கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதால் சில நிறுவனங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தெரிந்தும்கூட நடவடிக்கை எடுக்காமல் சிலர் பேரம் பேசி வருகின்றனர். இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை கோவை மாவட்ட நியமன அலுவலர் கு.தமிழ்செல்வன் கூறுகையில், சம்பா ரவை நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் சில நிறுவனங்களில் குளோர்பிரிபோஸ் ரசாயனம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் அதனை மறுத்து வருகின்றனர். அவர்கள் மேற்கொண்டு அப்பீல் செய்வதற்கு 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கை மேற்கொண்டால் மற்றுமொரு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். அப்போதும், அதிக அளவிலான பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும் என்றார்.












Click it and Unblock the Notifications