மாணவி கூறிய இருவர் மீதும் நடவடிக்கை தேவை...மாணவர்களைக் காக்கும் பொறுப்பு ஆசிரியருக்கு உள்ளது - வைகோ
கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் தருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியரும், பள்ளி முதல்வரும் கைதாகியுள்ள நிலையில், மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற இருவரும் கைது செய்யப்படவேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பது தெரியவந்தது.

மாணவிக்கு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில் மாணவியின் கடிதம் சிக்கியது. அதன் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். வருகின்ற 21ம் தேதி வரை ஆசிரியர் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது. மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சின்மயா பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மாணவி தற்கொலை குறித்து கருத்து கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியரும், பள்ளி முதல்வரும் கைதாகியுள்ள நிலையில், மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற இருவரும் கைது செய்யப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது எனவும் வைகோ கூறியுள்ளார்.
இதனிடையே கோவையில் மாணவி தற்கொலை தொடர்பாக துண்டு சீட்டில் இடம் பெற்றுள்ள பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக துணை கமிஷனர் ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை வடக்கு சரக துணை கமிஷனர் ஜெயசந்திரன், "மாணவி தற்கொலை தொடர்பான வழக்கில் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு ஆசிரியர் நீதிமன்றம் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜெயச்சந்திரன், மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்ததா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கைப்படுத்தப்பட்டு உள்ள துண்டு சீட்டு, தகவல்கள், ஆவணங்கள் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாணவி பாதிக்கப்பட்டு இருந்தது தெரிந்தவுடன் பள்ளி நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மாணவி தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்தி சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். துண்டு சீட்டை மாணவி வீட்டில் இருந்து ஒருவர் எடுத்து கொடுத்தார். அதில் உள்ள பெயர்கள் மற்றும் விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications