ஒரு கூட்டு கிளியாக.. சமூக வலைதளங்களில் முடிவுக்கு வந்த மோதல்! ‘இந்திய’பிரதமர் மோடி! நெகிழ்ந்த பாஜக!
சென்னை : கடந்த முறை போல் அல்லாமல் பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதோடு மேடையிலும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசிய நிலையில் சமூக வலைதளங்களில் பாஜக திமுகவினர் இடையேயான மோதல் போக்கு குறைந்து பாஜகவினர் முதல்வர் ஸ்டாலினையும் பாராட்டி வருகின்றனர்.
Recommended Video
சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கிய 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த 1400க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது.
போட்டி தொடக்க விழா நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் மெய்ய நாதன் தனது உரையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பேசியதோடு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியும் முதல்வர் ஸ்டாலின் உற்சாகமாக பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வரின் தோளைத் தொட்டு உற்சாகமாக பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலினும் நன்றி தெரிவித்தார். பிறகு நினைவுப் பரிசு மற்றும் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மாலை வரை பிரதமர் மோடியின் படங்கள் பதாகைகள் மற்றும் விளம்பரங்களில் இடம்பெற வேண்டும் என பாஜக குற்றம் சாட்டி வந்த நிலையில் நிகழ்ச்சியின் போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தான் நேரில் அழைக்க முடியாவிட்டாலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என பெருந்தன்மையுடன் தெரிவித்ததாகவும் இருபதாயிரம் வீரர்களைக் கொண்டு செஸ் போட்டியை நடத்தியவர் மோடி என புகழாரம் சூட்டினார்.

கோ பேக் மோடி
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தமிழகத்தின் விருந்தோம்பலையும் தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்தும் நெகிழ்ந்து பேசினார். இப்படி பல சுவாரஸ்ய நிகழ்வுகள் செஸ் ஒலிம்பியாட் மேடையில் அரங்கேறின. அதிமுக ஆட்சிக்காலத்தின் போதும் சரி கடந்த ஆண்டுகளிலும் சரி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும் போதெல்லாம் 'கோ பேக் மோடி' என சமூக வலைதளங்களில் கருப்பு பலூன்களை பறக்க விட்டும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று சில திமுகவினர் கோ பேக் மோடி என பதிவிட்டு இருந்தாலும் கடந்த முறை பதிவிட்டு இருந்த பலர் தற்போது நீண்ட அமைதி காத்தனர்.

முதல்வரை புகழும் பாஜக
மேடையில் வழக்கமாக ஒன்றிய அரசு என்று பேசும் முதல்வர் ஸ்டாலின் நேற்று இந்திய பிரதமர் என குறிப்பிட்டார். மேலும் நிகழ்ச்சி முடிந்தவுடன் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்த தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது சென்னையில் பிரதமர் தங்கி இருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக விழாவிலும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட தற்போது சமூக வலைதளங்களில் பாஜகவினருக்கும் திமுகவினருக்கும் இடையேயான மோதல் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
