ஒருவருக்கு ரத்தம் கொட்டுது.. ரயிலில் முதலுதவி பெட்டிகூட இல்ல! கோபமா வருது - பயணி ராஜலட்சுமி ஆதங்கம்
சென்னை: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலுதவி பெட்டி கூட வைக்கப்படவில்லை என ரயிலில் பயணித்து உயிர்தப்பிய தமிழகத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் தெரிவித்து இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், "ஒரு 7 மணிக்கு ரயில் ஆட ஆரம்பித்தது. போகபோக ஆட்டம் அதிகம் இருந்தது. அனைவரும் பயந்துவிட்டோம். அதன் பின் ரயில் விளக்குகள் பற்றி பற்றி அணைய தொடங்கியது. சிறிது நேரத்தில் கருகும் வாடை அடித்தது. தீ விபத்து ஏற்பட போகிறதோ என்று அஞ்சினேன்.

உடைந்து விழும் சத்தம் கேட்டது. அதன் பின் ரயில் தடம் புரண்டதை நான் அறிந்தேன். என்னோடு இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்து ரத்தம் வந்தது. பலருக்கும் காயங்கள் ஏற்பட்டன. நான் பி8 பெட்டியில் வந்தேன். அது AC 3A வகை. ஆனால், நாங்கள் 7.15 மணி வரை உள்ளேதான் இருந்தோம்.
ரயில் முழுவதுமாக நின்றவுடன் யாருக்காவது காயங்கள் ஏற்பட்டதா என்று நான் போய் பார்த்தேன். அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். சிலருக்கு உள்காயங்களும், சிலருக்கு ரத்த காயங்களும் ஏற்பட்டன. அவர்களை மட்டும் முதலுதவிக்கு அழைத்து சென்று விட்டோம். முதலில் என்ன பயம் என்றால், மின்சார கம்பிகள் அருந்து விழுந்ததால் ஒரு வேளை மின்சாரம் தாக்கிவிடுமோ என்று அஞ்சினோம்.
எனவே அனைவரையும் கொஞ்சம் பாதுகாப்பாக அமர வைத்தோம். 7.15 மணியளவுக்குதான் கீழே இறங்கினோம். அதுவரை தடம் புரண்டதாகவே நாங்கள் நினைத்தோம். பி6 பெட்டியில் இருந்து கடைசி பெட்டி வரை ஓரளவு பாதுகாப்பாக இருந்தது. பி5 பெட்டி மொத்தமாக புரண்டு கிடந்தது. எஞ்சினிலிருந்து அதன் பின்னால் உள்ள பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று கிடந்தன.
எல்லா தண்டவாளங்களும் சேதமடைந்தன. ஒரு பெட்டி எஞ்சினுக்கு மேலே இருந்தது. மற்றொரு பெட்டி பாதியாக உடைந்து கிடந்தது. சுத்தமாக வெளிச்சம் இல்லை. வீடியோ கூட எடுக்க முடியவில்லை. விபத்து ஏற்பட்ட பகுதி மக்கள் உடனே வந்து உதவ தொடங்கிவிட்டார்கள். மீட்பு பணியில் அவர்கள் இறங்கினார்கள். அனைவருக்கும் தண்ணீர் கொடுத்தார்கள்.
போன் செய்து ஆம்புலன்சை அழைத்தனர். 7 மணிக்கு விபத்து ஏற்பட்டது. 7.20க்கு மேல் ஆம்புலன்ஸுகள் வந்தன. நாங்கள் பின்னால் இருந்ததால் எதுவுமே தெரியவில்லை. 4 பெட்டியை தாண்டி சென்றபோதுதான் ரத்தமெல்லாம் தெறித்து கிடந்தது. ஒருவர் உள்ளே சொருகிக்கொண்டு இருந்தார். இதையெல்லாம் பார்த்து மிகவும் கஷ்டமாக இருந்தது.
நான் முதலுதவிக்கு சிலரை அழைத்து சென்றேன். விபத்தில் தப்பியவர்களுக்கும் எதுவுமே தெரியவில்லை. ஒரு மணி நேரம் அங்கேயே எதுவும் தெரியாமல் அமர்ந்து இருந்தோம். கிட்டத்தட்ட 10 மணிக்கு மேல்தான் பேருந்து வந்தது. பேருந்து வந்த பின் புவனேஷ்வர் சென்று நண்பர்கள், கல்லூரி பேராசிரியர் பணம் கொடுத்து விமானத்தில் நான் வந்தேன்.
தமிழ் மக்கள் அதிகம் இல்லை. மிகவும் குறைவுதான். நான் மிகவும் கோபமடைந்த விசயம் என்னவென்றால், ரயில் ஆடுகிறது, கண்டிப்பாக ஏதாவது சேதம் இருக்கும் என்று நினைத்தேன். உடனே முதலுதவி பெட்டி எங்கு இருக்கிறது என்று தேடினேன். என் கண்முன் ஒருவருக்கு ரத்தம் வருகிறது. 70 பேர் செல்லும் ரயில்பெட்டியில் மருத்துவ பெட்டி இல்லை என்பது ஏமாற்றத்தையும் கோபத்தையும் உண்டாக்கியது." என்றார்.












Click it and Unblock the Notifications