"பச்சை துரோகம்".. எஸ்சி/எஸ்டி பிரிவினரை பௌத்தர்களாக அறிவியுங்கள்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்
திருமாவளவன் மக்களவையில் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்
சென்னை: "பட்டியலின, பழங்குடி மக்கள் மதமும், சாதியுமில்லாத மண்ணின் மைந்தர்கள், ஆனால், இந்து பெரும்பான்மை என காட்டுவதற்காக அவர்களை இந்து பட்டியலில் இணைத்து, சான்றிதழ் வழங்கி வருகிறோம். இதுவே அவர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம்.. எனவே, இவர்கள் அனைவரையும் பூர்வ பவுத்தர்கள் என அறிவிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியின மக்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் இதுகுறித்து பேசியதாவது:

திருமாவளவன்
எஸ்சி, எஸ்டி மக்கள் மதமில்லா மண்ணின் மைந்தர்கள்.. இவர்களுக்கு எந்த மதமும் இல்லை.. எந்த சாதியும் இல்லை... ஆனால் இந்துக்கள் பெரும்பான்மை என்பதற்காக இவர்களுக்கு இந்துக்கள் என சான்றிதழ் வழங்கி வருகிறோம்... இதுவே அந்த மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். பொருளாதாரம், கல்வி,வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்த, காலம் காலமாக இழைக்கப்படும் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் துளியும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதை சுதந்திர இந்தியா நமக்கு உணர்த்தியுள்ளது.

அம்பேத்கர்
எனவே, அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் விரும்பியபடி இவர்கள் இந்துக்கள் இல்லை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும் அல்லது இவர்கள் அனைவரையும் பூர்வ பவுத்தர்கள் என அறிவிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

பழங்குடியினர்
அதேபோல, பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெறுவதிலும் நிறைய நெருக்கடிகளை இவர்கள் எதிர்கொள்கிறார்கள்.. தமிழ்நாட்டில் இருளர், குரும்பர்கள் கல்வி பயில, வேலைவாய்ப்புக்கு சாதிச் சான்றிதழ் பெற முடியாத சூழல் இன்னமும் இருக்கிறது.. இதனால், வீட்டு மனைப் பட்டா பெறுவதற்கு கூட முடியாத சூழல் உள்ளது... அவர்களுக்கு சாதி சான்றிதழ் எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்..

பௌத்தர்கள்
காலம் காலமாக நீர்நிலையோரத்தில் இந்த மக்கள் வசிக்க வேண்டியதாயிற்று.. இதையே காரணம் காட்டி, "நீங்கள் நீர்நிலைகள் அருகே வசிக்கிறீர்கள், பட்டா தர முடியாது" என்று மறுத்துவிடுகிறார்கள்.. அதனால், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சாதிச் சான்றிதழை இலகுவாக வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
