காங்கிரசிடம் திமுக கை கட்டி வாய் பொத்தி காவடி தூக்கியதும் தெரியும்..முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக பதில்
சென்னை: டெல்லியில் காங்கிரஸிடம் திமுக கை கட்டி வாய் பொத்தி காவடி தூக்கிய எப்படி என்பதும் தெரியும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக பதில் அளித்துள்ளது.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

டெல்லி பயணம்
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ங்கே ஆசிரியர் (கி.வீரமணி) பேசும்போது, நேரமில்லாத காரணத்தால் சூசகமாக, சுருக்கத்தோடு டெல்லிக்கு பயணம் மேற்கொள்வது பற்றி குறிப்பிட்டார். நான் காவடி தூக்கவா போறேன்? கை கட்டி வாய் பொத்தி உத்தரவு என்ன என? கேட்பதற்கா போகிறேன். கலைஞர் பிள்ளை நான்.. உறவுக்குக் கை கொடுப்போம்.. உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பதை மனதிலே நிலை நிறுத்திக் கொண்டிருப்பவன் நான்.

கை தட்டி வரவேற்பு
ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையிலே, ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்துக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களைப் பெற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆகவே, ஒன்றிய- மாநில அரசுகளுக்கு இடையே உறவு இருக்கிறதே தவிர திமுகவுக்கும் பாஜகவுக்கும் அல்ல. திமுக கொள்கைக்கும் பாஜகவின் கொள்கைக்கும் எந்த உறவுமே கிடையாது என திட்டவட்டமாக கூறினார்.முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு அரங்கில் இருந்த ஒட்டுமொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆர்ப்பரித்து வரவேற்றது. மேடையில் இருந்த திருமாவளவன் உள்ளிட்டோரும் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றனர்.

பாஜக பதில்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக பதில் தந்துள்ளது. தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: திமுக தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும். பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் குறைந்தபட்ச சமரசத்தைக் கூட திமுக செய்துகொள்ளாது. டெல்லிக்கு காவடி தூக்கவா செல்கிறேன்?கை கட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்?கலைஞர் பிள்ளை நான் - தி மு க தலைவர் @mkstalin

காங். உடன் சமரசம்
எங்கும் ஊழல் எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் தி மு க உறுதியாக இருக்கும் என்பதும் அறிவோம். ஊழலற்ற, நேர்மையான, தேசிய சிந்தனை கொண்ட பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள தி மு க வால் இயலாது என்பதும் அறிவோம். தமிழினத்தை கொன்று குவிக்க உதவிய போது டெல்லி காங்கிரசிடம் தி மு க, கை கட்டி, வாய் பொத்தி காவடி தூக்கியது எப்படி என்பதும் தெரியும். இந்திரா காந்தி அவர்களை புடவை கட்டிய ஹிட்லர் என்று கூறி விட்டு, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன் நீங்கள் என்பதும் தெரியும். இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications