சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பணத்தை வாரிக்கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்! - அமெரிக்காவில் விவாதிக்கப்படும் கீழடி ஆய்வுகள்!

Google Oneindia Tamil News

சென்னை : அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக 3 லட்சம் அமெரிக்க டாலரை கொட்டிக் கொடுத்துள்ளது தமிழக அரசு. இந்திய மதிப்பில் சொன்னால் 2.50 கோடி ரூபாயை வழங்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோது திமுக ஆட்சியில் இல்லை. ஆனால், அப்போது திமுக சார்பில் ரூ 1 கோடியை நிதியாக மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் இதேபோல் தமிழ் இருக்கையை நிறுவும் முயற்சி எடுக்கப்பட்டபோதும் 10 லட்ச ரூபாயை திமுக வழங்கியது.

ஆன் தி ஸ்பாட்டில் பெர்மிஷன் கிராண்டட்! கைதட்டலை அள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்! ஆரவாரமான வரவேற்பு! ஆன் தி ஸ்பாட்டில் பெர்மிஷன் கிராண்டட்! கைதட்டலை அள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்! ஆரவாரமான வரவேற்பு!

ஸ்டாலின் அள்ளித் தந்த 2.50 கோடி

ஸ்டாலின் அள்ளித் தந்த 2.50 கோடி

உலகின் மூத்த மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சம்ஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் இருக்கைகள் உள்ளன. அதற்கு நிகராக ஒரு தமிழ் இருக்கையை இங்கு அமைப்பதற்கு ரூ.33 கோடி ரூபாய் தேவை. ஆகவேதான், உலகம் முழுவதும் நிதி திரட்டும் வேலை தொடங்கியது.

இதன்மூலம் உலகின் மிக உயர்ந்த பல்கலைக்கழகங்களான ஹார்வர்டு, டொரோன்டோ ஆகியவற்றில் தமிழுக்கு உரிய கவுரவம் உருவானது. தற்போது ஹூஸ்டனில் தமிழ் இருக்கையை ஏற்படுத்தும் பணிக்குத் தமிழக அரசு நிதி உதவியை அளித்துள்ளது.

உலகளவில் சிறந்த பல்கலைக்கழகங்களாகக் கருதப்படும் இடங்களில் தமிழ் இருக்கை அமைப்பது என்றால் என்ன? அதன்மூலம் என்ன சாதிக்க முடியும்? என்பதை அறிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரனிடம் பேசினோம்.

யோகா சர்வதேச கவனம் பெற்றது எப்படி?

யோகா சர்வதேச கவனம் பெற்றது எப்படி?

இவர் மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர். ஹார்வர்டு மற்றும் டொரன்டோ பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக தனது ஓய்வூதியப் பணத்திலிருந்து 50 லட்ச ரூபாயை வழங்கியவர் என்பது கூடுதல் செய்தி.

"இந்தியாவில் 3 ஆயிரம் ஆண்டுகளாக யோகா இருக்கிறது. ஆனால் 1960 ஆம் ஆண்டுகளில் யோகாவைப் பற்றி ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், 'இது உடலுக்கும் மனதுக்கும் மூளைக்கும் ஒருசேர ஆற்றல் விளைவிக்கும் கருவி' என்று எழுதினார்கள். இதைக் கூறியவுடன் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் யோகாவை சில துறைகளில் கட்டாயமாக்கினார்கள்.

யோகா, இந்தியாவில் 3 ஆயிரம் ஆண்டுகளாக இருந்தாலும் நாம் அதைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் உலகத்துக்கு அதன் அருமை போய்ச் சேரவில்லை. ஹார்வர்டு சொன்னதும் உலகமே அதற்கொரு முக்கியத்துவம் அளித்தது. ஹார்வர்டின் வார்த்தைக்கு அப்படியொரு வலிமை'' என்கிறார், பாலச்சந்திரன்.

தொடர்ந்து நம்மிடம் பேசியவர், ''தமிழ் ஒரு பயன்பாட்டு மொழி. 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதிய தமிழ் நடையை இன்றும் நம்மால் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஆங்கிலத்தை இன்றைக்குப் புரிந்து கொள்வது கடினம்.

தமிழ் மொழியின் தொன்மை, பெருமை எல்லாவற்றையும் ஆராய்ந்து ஹார்வர்டு போன்ற ஒரு பல்கலைக்கழகம் கூறும்போது அந்தக் கருத்து இன்னும் பல நாடுகளுக்குப் பரவலாகப் போய்ச் சேரும்.

ஹார்வர்டு மற்றும் ஹூஸ்டன் ஆகிய பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்படும்போது அது சர்வதேச அளவிலான கவனத்தையும் பெற முடியும்" என்கிறார்.

 கடல் வாணிபத்தில் கோலோச்சிய தமிழர்கள்

கடல் வாணிபத்தில் கோலோச்சிய தமிழர்கள்

"இந்து மகா சமுத்திரத்தில் மூன்று இனங்கள்தான் வணிகரீதியாக ஆட்சி செய்தன. ஒன்று, தமிழர்கள். இரண்டாவது, சீனர்கள். மூன்றாவது, பாரசீகர்கள். ஆனால், இன்று தமிழர்களின் இந்த வரலாறு குறித்து சர்வதேச அளவில் ஆய்வு நடந்துள்ளதா என்றால் இல்லை.

கடந்த காலங்களில் இந்த வணிகத்தைத் தமிழர்களால் எப்படி செய்ய முடிந்தது என்பதை நாம் தெரிந்து கொண்டால், வருங்காலத்தில் அப்படியொரு சர்வதேச வியாபாரத்தை மேற்கொள்வதற்கு என்ன மாதிரியான முயற்சிகளை எடுக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே, அதுகுறித்த ஆராய்ச்சி தேவை. அதற்குப் பல்கலைக்கழக தமிழ் இருக்கைகள் பலன் தரும் என்று நம்புகிறேன்" என்கிறார் கோ.பாலச்சந்திரன்.

இவர் ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ஆலோசகராக இருக்கிறார். அந்தவகையில், தமிழக அரசு ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு அளித்துள்ள நிதி குறித்து மேலும் சில விளக்கங்களைக் கேட்டோம்.

சர்வதேசச் சந்தையில் தமிழர் வணிகம்

சர்வதேசச் சந்தையில் தமிழர் வணிகம்

"மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு நான் சென்றிருந்தேன். அப்போது பல்கலைக்கழக டீனை சந்தித்தேன். ஹூஸ்டன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், 'பக்தி இலக்கியத்தைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்' என்பதில் ஆர்வமாக இருந்தார்கள்.

நான், 'பக்தி இலக்கியத்தை ஆய்வு செய்யுங்கள். அதனுடன் தமிழர்களின் கடல் வணிகம் குறித்து ஆய்வு செய்யுங்கள்' என்றேன். எல்லாவற்றுக்கும் பொருளாதாரம்தான் அடிப்படை. வள்ளுவர், 'அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு' என்கிறார்.

இதில், அருளிலார்க்கு என்பதைப் பலரும் பேசுகிறார்கள். அதில் வரும் பொருளில்லார்க்கு என்பதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆகவே, பொருளாதாரம் மிக முக்கியம். எனவே, தமிழர்கள் அந்தக் காலத்தில் பொருளாதாரத்தில் எப்படி செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்' என்றேன்.

இந்தக் கருத்தை பல்கலைக்கழக டீன் ஆமோதித்துவிட்டார். ஆகவே, 'கடல்சார்ந்த வணிகத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் எவ்வாறு வெற்றி கண்டார்கள்? அந்த அனுபவ அறிவைக் கொண்டு எதிர்காலத்தில் தமிழர்கள் சர்வதேச வர்த்தகத்தை எப்படி உருவாக்க வேண்டும்?' என்பதை இந்த இருக்கை மூலம் ஆய்வு செய்வார்கள்.

அன்றைக்கு மிளகு என்பது தமிழர்களின் உலக வர்த்தகமாக இருந்தது. மிளகைக் கொடுத்து எடைக்கு எடை தங்கத்தைப் பெற்றார்கள். முத்து, மிளகு, மயில் தோகை, அரிசி, தேக்கு என பலவற்றை தமிழர்கள் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்தனர். இன்றைக்கு அதைப்போல், 'எதை நாம் சர்வதேச சந்தைக்குக் கொண்டு போக வேண்டும்? நம்மிடம் உள்ளவற்றில் வெளிநாட்டவருக்கு என்ன தேவை?' என்பதைக் கண்டுபிடித்து ஆய்வு செய்யலாம்' என்றேன். இதை ஹூஸ்டன் தமிழ் இருக்கை குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது" என்கிறார்.

அடுத்து, போலந்தில் உள்ள வார்சா பல்கலைக்கழக (University of Warsaw) தமிழ் இருக்கையில் பணிசெய்து அனுபவம் பெற்ற எழுத்தாளர் தமிழவனிடம் பேசினோம்.

"1968 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு அண்ணா சென்றிருந்தார். அப்போது அங்கே உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஒரு வாரகாலம் 'சப் ஃபெல்லோ' எனும் அந்தஸ்து அண்ணாவுக்கு வழங்கப்பட்டது. யேல் பல்கலைக்கழகத்தின் திமோதி டுவைட் கல்லூரி மாணவர்களுக்குத் திருக்குறள் பற்றி அண்ணா வகுப்பும் நடத்தினார். திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றின் பிரதிகள் சிலவற்றை அக்கல்லூரிக்கு வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெகு பிரபலம்.

வெளிநாடுகளில் தமிழ் இருக்கைகள்

வெளிநாடுகளில் தமிழ் இருக்கைகள்

ஆக, அண்ணா காலத்திலிருந்தே திமுகவுக்கு சர்வதேச கல்விச் சாலைகளில் தொடர்புகள் உண்டு. அண்ணா சென்ற அதே பல்கலைக்கழகத்துக்கு நானும் சென்றுள்ளேன். அங்கே பணி செய்த பெர்னாட் பேட், 'திராவிட மேடைப் பேச்சுக்கள்' குறித்து ஆய்வு செய்தவர். அவரை நான் சந்தித்தேன். அவரும் அண்ணாவின் வருகை குறித்து என்னுடன் பேசியுள்ளார். தங்களுடைய பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இருக்கை' அமைக்க உள்ளதாக பல ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்தார்.

ஜார்ஜ் எல்.ஹார்ட் பணியாற்றும் 'தமிழ் இருக்கை' அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கும் நான் சென்றுள்ளேன். போலந்தில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கையில் பணி செய்திருக்கிறேன். சிகாகோவில் ஏ.கே.ராமானுஜன் பணியிலிருந்த காலத்தில்தான் சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலக அளவில் பிரபலமாகக் காரணமாக இருந்தார்.

அந்தவகையில், சர்வதேச மாணவர்களின் கல்விப்புலம் குறித்து எனக்குத் தெரியும். அங்கே உள்ள மாணவர்கள் இதைப் படித்தால் வேலை கிடைக்கும் எனப் படிப்பதில்லை. 'ஒரு மொழியை அறிந்து கொள்கிறேன். அது நமது அறிவுக்குத் தேவை' என்றே படிக்கிறார்கள்.

இப்படி சர்வதேச அளவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கொண்டு செல்வதற்கு அரசு எடுக்கும் முயற்சிகள் முக்கியமானது. அதன்மூலம், சர்வதேச வெளிச்சம் நம் மீது விழும். அந்தக் கவனம் நமக்குத் தேவை. அதேநேரத்தில் தமிழ் இருக்கைகள் எந்தளவுக்குச் சரியாக பணியாற்றுகின்றன என்பதையும் தமிழக அரசு கவனிக்க வேண்டும்.

ஏனெனில், இந்தி மொழியை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக பல கோடி ரூபாய்களை மத்திய அரசு செலவழிக்கிறது. இன்று உலக அளவில் 4 ஆவது மொழியாக இந்தி வளர்ச்சியடைந்துள்ளது" என்கிறார்.

ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைவதற்கான 2.50 கோடி ரூபாய்க்கான காசோலையை, அதன் தலைவர் சொக்கலிங்கம் சாம்கண்ணப்பன், செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகிய இருவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக, மேலதிக தகவல்களை அறிய பெருமாள் அண்ணாமலையிடம் பேசினோம்.

ஹூஸ்டனில் கீழடி ஆய்வு

ஹூஸ்டனில் கீழடி ஆய்வு

"தமிழ்நாட்டில் நடைபெற்ற 'நெடுவாசல்', 'ஜல்லிக்கட்டு' ஆகிய போராட்டங்களில் எனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்துள்ளேன். அதேபோல, இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகளைத் தடுப்பதற்காகப் பல விழிப்புணர்வுகளை எங்களது குழு செய்துள்ளது.

தொடர்ந்து, வாழ்க்கை முழுவதும் போராட்டம் சார்ந்தே இருக்கிறதே, ஏதாவது நேர்மறையான செயல்களில் கவனத்தைச் செலுத்துவோம் என யோசித்த வேளையில், ஹார்வர்டு பலகலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பான வேலைகளில் எங்களது கவனம் சென்றது. அதில், நேரடியாக நாங்கள் ஈடுபடவில்லை. பின்புலமாக நின்று விழிப்புணர்வு சார்ந்த வேலைகளுக்கு உதவினோம்.

இதே காலகட்டத்தில்தான் கீழடியில் அகழ்வாய்வு சார்ந்த வேலைகள் தொடங்கி, அதன் அறிக்கைகள் வெளிவந்தன. ஆகவே, இந்த இருக்கை மூலம் கீழடியை முன்வைத்து தமிழர் நாகரிகம், கலைப் பண்பாடு ஆகியவை குறித்து ஆய்வு நடத்தலாமா என முயன்றோம்.

ஆனால், அங்கு அதற்கான வசதிகள் இல்லை எனத் தெரிந்தது. ஆகவே, அதற்காக ஒரு இருக்கை அமைப்பது என முயற்சி செய்தோம். அதன் அடையாளமாகத்தான் 'ஹூஸ்டன்' பல்கலைக்கழக தமிழ் இருக்கை மீது எங்களது கவனம் திரும்பியது.

ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு முதலில் 3 மில்லியன் டாலர் தொகை என்று கூறினார்கள். பின்னர், 2 மில்லியன் டாலர் எனக் குறைத்துவிட்டனர். அதாவது, இந்திய மதிப்பில் 4 கோடி ரூபாய் தேவை. இதை முதல் பகுதி, இரண்டாம் பகுதி எனப் பிரித்து நிதி திரட்ட ஆரம்பித்தனர். முதலில் 1 மில்லியனை திரட்ட முயன்ற காலகட்டத்தில் கொரோனா வந்து உலகையே முடக்கிவிட்டது.

ஹார்வர்டு தமிழ் இருக்கை போல, இதுபற்றிய விழிப்புணர்வை பரவலாக கொண்டு போக முடியவில்லை. பின்னர், கடுமையாக முயன்று 1 மில்லியன் டாலரை திரட்டினோம். தமிழக அரசு தற்போது 3 லட்சம் அமெரிக்க டாலர் தொகையைத் தந்து உதவியுள்ளது.

இது இந்திய ரூபாயின் மதிப்பில் 2 கோடியே 50 லட்ச ரூபாய். இன்னும் மீதம் உள்ள தொகையைத் திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளோம். அடுத்த மாதம் இந்தப் பணிகள் முடிந்து இருக்கை அமைய உள்ளது.

இந்த இருக்கை மூலம் தமிழர் நாகரிகம், பண்பாடு குறித்த ஆய்வுகள் தொடங்க உள்ளன. தமிழ் இருக்கைக்கு சரியான தருணத்தில் தொகையைக் கொடுத்து உதவிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம்" என்கிறார் பெருமாள் அண்ணாமலை.

English summary
Tamil Nadu Chief Minister M. K. Stalin has given 2.50 crore rupees to set up a Tamil seat in the University of Houston in US. Studies on Tamil civilization and culture are being started through this seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X