இதுதான் மாற்றமா? வெளிநாட்டு பயணம் முடிந்து வந்தும் பத்திரிகையாளர்களை சந்திக்காத முதல்வர் விஜய்!
சென்னை: முதலமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்க பயணம் செய்து திரும்பியதும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், முதல்வர் ஜோசப் விஜய் லண்டன் சென்று இன்று காலை சென்னை திரும்பிய நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்திக்காதது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
முதலமைச்சர் வெளிநாட்டுக்குச் செல்லும்போது, என்ன நோக்கத்திற்காக வெளிநாடு செல்கிறோம் என்பது குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவது வாடிக்கை. ஆனால், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக அப்படி விரிவான அறிக்கை எதையும் தமிழக அரசு வெளியிடவில்லை.

மேலும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் பயணம் மேற்கொள்வதாகச் சொல்லப்பட்ட நிலையில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா உடன் செல்லவில்லை. தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் செல்லவில்லை. ஆதவ் அர்ஜுனா மற்றும் சில அதிகாரிகளே உடன் சென்றனர்.
லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் விஜய், நடிகரும், கார் ரேஸ் வீரருமான அஜித் குமார் கலந்துகொண்ட கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். இந்த கார் ரேஸின் போது நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் வெளியாகின.
அதன்பிறகு, முதலீடுகள் தொடர்பாக சில சந்திப்புகளை மேற்கொண்டார் முதல்வர் விஜய். இந்த பயணத்தில் பல்வேறு புதிய தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 15,300 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் விஜய் லண்டன் பயணத்தை நிறைவு செய்துவிட்டு இன்று நாடு திரும்பியுள்ளார்.
வழக்கமாக, வெளி நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாகச் செல்லும் முதலமைச்சர்கள், நாடு திரும்பியதும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், லண்டன் பயணம் முடிந்து இன்று சென்னைக்கு திரும்பிய முதல்வர் விஜய், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. வந்ததுமே காரில் ஏறி வீட்டுக்குச் சென்றார். வரும் நாட்களில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து திமுக ஐடி விங் மாநில செயலாளரும், முன்னாள் தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முதல்வர் இன்று நாடு திரும்பியதும், நிச்சயமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன்னுடைய லண்டன் பயணத்தின் முழு விவரங்களை தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக விளக்குவார் என்று நம்புகிறோம்.
குறிப்பாக, ரூ. 15,300 கோடி முதலீடு என்று அறிவிக்கப்பட்டதில், இந்த பயணத்தில் புதிதாக ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு? தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களுடைய விரிவாக்கம் எவ்வளவு? முந்தைய திமுக ஆட்சியிலேயே பேச்சுவார்த்தை துவங்கி, தொடர்ந்து Guidance Tamil Nadu மூலம் பணிகள் நடைபெற்ற திட்டங்கள் எவை?
ரூ. 3,000 கோடி மதிப்பிலான, பெயர் வெளியிடப்படாத நிறுவனத்தின் Letter of Intent, உறுதி செய்யப்பட்ட முதலீடாகக் கணக்கிடப்பட்டுள்ளதா? ஒவ்வொரு நிறுவனத்துடனும் எப்போது பேச்சுவார்த்தை துவங்கியது. எப்போது முதலீடு, எங்கு செயல்பாட்டுக்கு வரும்? எப்போது அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்? என்பவை குறித்து முதல்வர் பதிலளிப்பார் என எதிர்பார்ப்பதாக டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களின் போது, புறப்படுவதற்கு முன்பும், நாடு திரும்பிய பிறகும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பயணத்தின் நோக்கம், ஈர்க்கப்பட்ட முதலீடுகள், MoU-க்கள், வேலைவாய்ப்புகள், அவற்றின் செயலாக்க நிலை ஆகியவை குறித்து மக்களுக்கு விளக்கம் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எனவே, முதல்வரின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம் என தனது பதிவில் தெரிவித்துள்ளார் டி.ஆர்.பி. ராஜா.


Click it and Unblock the Notifications
