பதவி நீட்டிப்பை எதிர்த்து அப்பீலுக்கு போகிறது தமிழக அரசு.. மீண்டும் வெல்வாரா பொன். மாணிக்கவேல்
பொன்.மாணிக்க வேல் பதவி நீட்டிப்பு குறித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.
சென்னை: ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கமும் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்து நீதிபதிகள் தீர்ப்பு சொன்னார்கள்.
அதன்படி, சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

ஓராண்டு நீட்டிப்பு
அதோடு அன்றைய தினம் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையில், மேலும் ஓராண்டு காலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக அவரே நீடிப்பார் என்றும் புதிய ஆணை பிறப்பித்தது. மேலும் நியமன ஆணையை அரசு உடனே வெளியிடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழக அரசு எதிர்ப்பு
இந்நிலையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 30-ம் தேதியே ஓய்வு பெற்றவருக்கு ஐகோர்ட் எப்படி பணி நீட்டிப்பு செய்யலாம் என அரசு தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்து அறநிலையத்துறை
எனவே இந்த காரணத்தை முன்வைத்தே தமிழக அரசு மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஐஜி.யின் பதவியை நீட்டிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்பதை மேல்முறையீட்டில் வலியுறுத்தப்பட உள்ளது. தமிழக அரசுடன் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் சங்கமும் இணைந்து மேல்முறையீடு செய்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அரசு அப்பீல்
பொன்.மாணிக்கவேலு தமிழக அரசுக்கு இனி விளக்கம் அளிக்க தேவையில்லை, எதுவானாலும் கோர்ட்டுக்கு பதில் சொன்னால் போதும் என்ற நிலையில், தற்போது தமிழக அரசு அப்பீலுக்கு போகவுள்ளது.












Click it and Unblock the Notifications