ரேஷனில் பாமாயில், பருப்பு விநியோகம் திடீர் நிறுத்தமா? இதென்ன புதுஸ்ஸா? தமிழக அரசு மறுப்பு - வார்னிங்
சென்னை: ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விநியோகத்தை அரசு நிறுத்தப் போவதாக திடீரென தகவல் வெளியாகி, குடும்ப அட்டைதாரர்களுக்கு கலக்கத்தை தந்துவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு இதுகுறித்து விளக்க அறிக்கை வெளியிட்டு, கடும் எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ துவரம் பருப்பு, ரூ.30க்கும், ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ.30க்கும், பாமாயில் ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டு உளுத்தம் பருப்பு வினியோகம் நிறுத்தப்பட்டது. எனினும், கனடா மஞ்சள் பருப்பு அல்லது துவரம் பருப்பை தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்தது.
கொள்முதல்: இதற்கு பிறகு, மாதம் 20000 டன் துவரம் பருப்பு, 2 கோடி லிட்டர் பாமாயில் தேவைப்பட்ட நிலையில், அது டெண்டர் கோரி தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயிலுக்கான டெண்டர் தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதாக புகார்கள் கிளம்பின.. ஆனால், தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி ரேஷன் பொருள் வாங்க ஆணை என்று தலைப்பிட்டு வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விளக்கம் தந்திருந்தார்.
நியாய விலைக்கடைகள்: அதேபோல, கடந்த நவம்பர் மாதத்தில், பெரும்பான்மையான நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை, சென்னையில் மட்டுமின்றி சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகளில் பருப்பு விநியோகிக்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால், இதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "2025 ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வரை துவரம் பருப்ப, பாமாயில் விநியோகம் சீராக நடைபெறுவதற்காக அந்த 3 மாதங்களின் தேவையான 6 கோடி கிலோ துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயிலுக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்று விளக்கம் தந்திருந்தார்.
பாமாயில், பருப்பு: இந்நிலையில், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விநியோகத்தை அரசு நிறுத்தப்போவதாக திடீர் தகவல் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால், ரேஷனில் பருப்பு, பாமாயில் விநியோகத்தை அரசு நிறுத்தப் போவதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில், "கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது" என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் பொய்யான செய்தி. இச்செய்தி கடந்தாண்டு ஜனவரி மாதம் வெளியானது. ஆனால், தற்போதுவரை ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் நடைபெற்றே வருகிறது.
வதந்தி பரப்பாதீர்: அரசாணையின்படி ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டமானது நீட்டிக்கப்படும். தற்போது 30.6.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பருப்பு, பாமாயில் விநியோகம் நிறுத்தப் போவதாகப் பரவும் தகவல் பொய்யானவை என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது. வதந்தியைப் பரப்பாதீர்!" என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications