சனாதனவாதிகளால் தாக்கப்படும் தமிழக அரசு! பாஜக-திமுக இடையே எந்த உறவும் இல்லை! முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: திமுக, பாஜக இடையே எந்த உறவும் இல்லை. திமுக தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக உள்ளது. இதில் குறைந்தபட்ச சமரசம் கூட செய்து கொள்ளாது. இதனால் தான் சனாதனவாதிகள், வகுப்பு வாதிகளால் இந்த அரசு அதிகப்படியான தாக்குதலுக்கு உள்ளாகிறது. சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்'' என தொல் திருமாவளன் பிறந்தநாள் விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவராக இருப்பவர் தொல் திருமாவளவன். எம்பியாக உள்ள இவர் 60 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
இந்நிலையில் தான் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஏராளமான கடமை-பொறுப்பு
தந்தை பெரியாராக இருந்தாலும், கருணாநிதியாக இருந்தாலும் சரி 95 வயது வரை வாழ்ந்தனர். தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்காகவும் தான் இவர்கள் வாழ்ந்தார்கள். அதேபோல் தான் தொல் திருமாவளவன் தமிழ் சமூகத்துக்காக நீண்டகாலம் வாழ்வார். வாழ வேண்டும். அவருக்கு பிறந்நதாள் வாழ்த்துக்கள். திருமாவளவனுக்கு இன்னும் ஏராளமான கடமையும், பொறுப்பும் உள்ளது.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
திருமாவளவன் சட்டக்கல்லூரி மாணவராக, மாணவர் திமுகவில் இணைந்து பணியாற்றிய காலம் முதல் ஓரளவுக்கு அவரை பற்றி அறிவேன். கல்லூரி மேடைகளிலும், கட்சி மேடைகளிலும் துடிப்பான காளையாக இருந்தார். இப்போதும் முழங்கி வருகிறார். அப்போது கழகத்துக்குள் இருந்து முழங்கினார். இப்போது கழக கூட்டணிக்குள் இருந்து முழங்கி வருகிறார். எப்போதும் எந்த சூழலிலும் எங்களுடன் இருப்பவரே நீங்கள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல் எங்களுக்கு பலமாக இருப்பவர் தான் தொல் திருமாவளவன்.

கொள்ளை ரீதியானது
இது அரசியலுக்காக பேசவில்லை. திமுகவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையேயான நட்பு கொள்கை ரீதியானது. கருத்தியல் சார்ந்த கூட்டணியாக தான் எங்களின் நட்பு உள்ளது. இதனை யாராலும் பிரிக்க முடியாது. தேர்தல் கூட்டணி என்றால் தேர்தலுக்கு பிறகு முடிந்துவிடும். ஆனால் நாங்கள் தேர்தலுக்கு பிறகும் ஒன்றாக இருக்கிறோம். ஒருதாய் பிள்ளையாக இருக்கிறோம். ஒரே கொள்கையை இரு கட்சியாக நிறைவேற்ற உள்ளோம். தேர்தல் வரும் போகும். ஆனால் இயக்கங்கள் இருக்கும். கொள்கைகள் இருக்கும். கருத்தியல் இருக்கும். இலக்குகள் இருக்கும்.

ஆரியத்துக்கு எதிரானது தான் திராவிடம்
ஆரியத்துக்கு எதிரான அனைத்தும் திராவிடம் தான் என சமீபத்திய பேட்டியில் திருமாவளவன் கூறியுள்ளார். இந்த ஆட்சியை பார்த்தால் பலருக்கும் கசப்பது இதற்காக தான். பெரியாரை எதிர்க்ககூடிய சக்திகள் திமுகவையும் தொடர்ந்து எதிர்ப்பதாக அந்த பேட்டியில் திருமாவளவன் கூறியுள்ளார். நாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதால் தான் பெரியாரை எதிர்க்கும் சக்திகள் திமுகவை எதிர்ப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.

திமுகவின் கொள்கை மாறாது
இந்த ஆட்சி இருப்பதே பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திராவிட கருத்துகளை நிலைநிறுத்துவதற்காக தான். கோட்டையில் இருந்தாலும் அறிவாலயத்தில் இருந்தாலும் திமுகவின் கொள்கை ஒன்று தான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். அந்த பேட்டியில் திருமாவளவன் ஒன்றை குறிப்பிட்டுள்ளது. அதுபற்றி பேச அவருக்கு முழு உரிமை உள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் குறைந்தபட்ச சமரசத்தை கையாண்டால் கூட திமுக அணியில் பாஜக எதிர்ப்பு மெல்ல மெல்ல நீர்த்து போய்விடும் என்பதை சொல்லி இருக்கிறார். திமுக தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக உள்ளது. திமுக தனது கொள்கையில் குறைந்தபட்ச சமரசம் கூட செய்து கொள்ளாது. திமுகவின் கொள்கையை எந்த சூழலிலும் விட்டு கொடுக்காது.

காவடி தூக்கவா..
நான் இரண்டு பொறுப்புகளில் உள்ளேன். ஒன்று கட்சி தலைவர் பொறுப்பு. மற்றொன்று தமிழக மக்களுக்கான முதல் அமைச்சர் பொறுப்பு. இது உங்களால் உருவாக்கப்பட்டது தான். உங்களால் தான் இந்த பொறுப்பில் அமர்ந்து உள்ளேன். டெல்லிக்கு காவடி தூக்கவா போறேன். கைகட்டி, வாய் பொத்தி உத்தரவு என்ன? என்பது பற்றி கேட்கவா போகிறேன். கலைஞரின் மகன் நான். தமிழ்நாடு முதல் அமைச்சர் என்ற முறையில் ஒன்றிய அரசிடம் பேசி தமிழகத்துக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தேவையான திட்டங்களை பெற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

திமுக பாஜக உறவு இல்லை
இந்திய மாநில அரசுக்கு இடையே தான் உறவு இருக்கிறதே தவிர, திமுகவுக்கும், பாஜகவுக்கு இடையே உறவு இல்லை. திமுகவின் கொள்கைக்கும், பாஜகவின் கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது. ஆகவே திருமாவளன் கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டும். எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் திமுகவின் கொள்கைகளை ஸ்டாலின் விட்டு கொடுக்க மாட்டான். இந்த விஷயத்தில் குறைந்தபட்ச சமரசம் கூட செய்து கொள்ள மாட்டேன். ஏனென்றால் நான் உங்களின் சகோதரன்.

தொடரும் முழக்கம்
தமிழக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறுகிறோம். இது திராவிட ஆட்சியின் கொள்ளை முழக்கம் தான் இது. இந்த முழக்கம் தொடர்ந்து ஒலித்து கொண்டு இருக்கும் என கூறுகிறேன். பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் போட்டதும், பெண்களும் அர்ச்சகர் ஆக்கியதும், இடஒதுக்கீடு எனும் சமூக நீதி கொள்கையில் உறுதியாக இருப்பதும், இந்தியா என்பது மாநிலங்களில் ஒன்றியம் தான் என திரும்ப திரும்ப எடுத்து சொல்வதும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் போட்டது என பலவற்றை எடுத்து கூற முடியும்.

சனாதன வாதிகளால் தாக்குதல்
இதனால் தான் சனாதனவாதிகள், வகுப்பு வாதிகளால் இந்த அரசு அதிகப்படியான தாக்குதலுக்கு உள்ளாகிறது. குறிப்பாக நான் அவர்களால் அதிகப்படியாக விமர்சிக்கப்படும் சூழ்நிலைக்கு வந்திருக்கறேன். சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம். ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என்ற முழக்கத்தை திருமாவளவன் பிறந்தநாளில் நானும் வழிமொழிகிறேன். நாம் உருவாக்க நினைப்பது ‛யாதும் ஊரே யாவரும் கேளீர்' ‛பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கு' என சங்ககால தமிழகத்தை தான் நாம் உருவாக்க நினைக்கிறோம். இதை நிறைவேற்றுவோம். இதுதான் திருமாவளவனுக்கு நான் வழங்கும் கொள்கை பரிசு'' என கூறியள்ளார்.












Click it and Unblock the Notifications