ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை நிறுத்தம்-ஆண்டுக்கு ரூ20,000 கோடி இழப்பு: முதல்வர் ஸ்டாலின் கடும் அட்டாக்!
சென்னை: மத்திய பாஜக அரசின் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிறுத்தத்தால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ரூ20,000 கோடி இழப்பு ஏற்படுகிறது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதையும் உள்ளடக்கி 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற 'திராவிட மாடல்' கொள்கையை உருவாக்கி, அதன் தடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியானது செயல்பட்டு வருகிறது.

நியூயார்க் டைம்ஸ்: அதனால்தான் இந்தியாவின் முன்னணி பத்திரிக்கைகள் மட்டுமல்ல, உலகளாவிய பத்திரிக்கைகளின் கவனத்தையும் ஈர்த்து அவர்களது பாராட்டையும் பெறும் அரசாக கழக அரசு இயங்கி வருகிறது.தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை, 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை முதல் பக்கத்தில் பாராட்டி உள்ளது. 2015-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைவிட, 2023-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி சிறப்பாகக் கையாண்டது என்று 'தி இந்து' ஆங்கில நாளேடு பாராட்டியது. பசுமை, சுற்றுச்சூழல் திட்டங்களைச் சிறப்பாகக் கையாண்டு வருவதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' புகழ்ந்துள்ளது.
ஊடகங்கள் பாராட்டு: புத்தாக்க நிறுவனங்கள் மூலமாக 'பெஸ்ட் பெர்பாமென்ஸ்' செய்கிறது தமிழ்நாடு என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா' சொல்கிறது. மிக்ஜாம் புயலின்போது அரசு இயந்திரம் துரிதமாகச் செயல்பட்டதை 'டெக்கான் கிரானிக்கல்' பாராட்டியது. காலை உணவுத் திட்டத்தை பாராட்டிய 'தினத்தந்தி' நாளிதழ், 'அன்று காமராசர்- இன்று மு.க.ஸ்டாலின்' என்று தலையங்கம் தீட்டியது. மக்களைத் தேடி வரும் அரசு என்று பாராட்டியது 'தினகரன்'. முதலீட்டாளர்கள் மாநாட்டை பாராட்டி தலையங்கம் தீட்டியது 'தினமணி'.கேலோ இந்தியா - சாதித்துக் காட்டிய தமிழ்நாடு என்று எழுதியது 'இந்து தமிழ் திசை'. இப்படி முன்னணி பத்திரிகைகள் பாராட்டி இருக்கின்றன.
முதல்வர்களே போராடும் அவலம்: பேரவைத் தலைவர் அவர்களே! இவை அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையில் சாதிக்கப்பட்டவை. மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை, விரும்பவுமில்லை. மாநில முதலமைச்சர்களே டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தும் அவலத்தைப் பார்க்கிறோம்.நாம் இரண்டு பெரிய இயற்கை பேரிடர்களைச் சந்தித்தோம். அதற்குக்கூட நிவாரணத் தொகை தரவில்லை.
ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை: 30-06-2022 முதல் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை நிறுத்தி விட்டார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்புத் திட்டங்களைத் தருவதில்லை. தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
மெட்ரோ ரயில் திட்டம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். மெட்ரோ ரயில் வேண்டாம் என்று கூறி, மோனோ ரயிலுக்குக் கொடி பிடித்தவர்கள் இன்று மெட்ரோ ரயிலுக்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு உங்களது ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும், அதனைச் செயல்படுத்துவதற்குத் நீங்கள் ஆட்சியில் இருந்தவரை முனைப்புக் காட்டவில்லை. எங்களது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், பணி ஆணைகள் வழங்கப்பட்டன; ஒப்பந்தங்கள் அனைத்துப் மேற்கொள்ளப்பட்டன; அனைத்துப் பணிகளும் தொடங்கப்பட்டன. நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், பிரதமரைச் சந்திக்கும் போதெல்லாம் மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்கிறேன். ஆறு நாட்களுக்கு முன்பு கூட பிரதமருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். இதற்கான ஒன்றிய அரசின் நிதியை இதுவரை தராததால், இந்த முழுத்தொகையையும் மாநில அரசின் நிதியில் இருந்தும், மாநில அரசு வாங்கும் கடனிலிருந்து மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்தபோது பேசாமல் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இப்போதாவது பேசுகிறாரே என்ற அளவில் ஆறுதல் தருகிறது. இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எங்களுடன் இணைந்து ஒன்றிய அரசிடம் நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என தங்கள் வாயிலாகக் நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications