பான் மசாலா, ஆன்லைன் ரம்மி மீதான தடை நீங்குகிறதா? தவெக அரசின் ஜிஎஸ்டி உத்தரவால் எழுந்த குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பான் மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு ஏற்கனவே அரசு தடை விதித்துள்ளது. அதேபோல, பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தமிழகத்தில் முழுமையான தடை நடைமுறையில் உள்ளது.

இந்த சூழலில், தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய ஜிஎஸ்டி விதிமுறை அரசாணை பொதுமக்களிடையேயும் வணிகர்களிடையேயும் பெரும் விவாதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. "அரசு தடை செய்துள்ள பொருட்களுக்கும் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் ஜிஎஸ்டி வரி நிர்ணயிப்பது ஏன்? அப்படியென்றால் தமிழக அரசு இந்தத் தடைகளைத் தளர்த்தப்போகிறதா அல்லது நீக்கப்போகிறதா?" என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

TN GST

இந்த உத்தரவின் பின்னணியில் உள்ள அசல் உண்மை என்ன, அரசு உண்மையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதைப் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இங்கே விரிவாகப் பார்ப்போம்.

தடை நீக்கப்படுகிறதா? சட்டம் சொல்வது என்ன?

முதலில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம்: தமிழகத்தில் பான் மசாலாவுக்கோ அல்லது ஆன்லைன் சூதாட்டங்களுக்கோ விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவில்லை. தடை தொடர்ந்து முழு வீச்சில் அமலில் உள்ளது.

வரிச் சட்டம் மற்றும் தடைச் சட்டம் ஆகியவை தனித்தனியானவை. இந்திய வரிச் சட்டங்களின்படி, ஒரு பொருள் அல்லது சேவை தடை செய்யப்பட்டிருந்தாலும், அவை கள்ளச்சந்தையில் விற்கப்பட்டாலோ அல்லது முறைகேடாக நடந்தாலோ அதைக் காரணம் காட்டி அரசுக்குச் சேர வேண்டிய வரியை ஏய்க்க முடியாது.

மத்திய அரசு மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரும்போது, மாநில அரசுகளும் தங்களது மாநில ஜிஎஸ்டி சட்டத்தில் அதற்கேற்ப அரசிதழ் அறிவிப்புகளை வெளியிட வேண்டியது கட்டாயமாகும். தமிழக அரசும் அந்த சட்டப்பூர்வ நடைமுறையைத்தான் தற்போது செய்துள்ளது. எனவே, வரி விதிப்பு விதிகளை அறிவித்ததால் தடை நீக்கப்பட்டுவிட்டது என்று நினைப்பது முற்றிலும் தவறான புரிதலாகும்.

வரி ஏய்ப்பைத் தடுக்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள்

புகையிலை, பான் மசாலா விற்பனை மற்றும் வெளிநாட்டு ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்படுவதைத் தடுக்கவே இந்த புதிய விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்படி திடீரென வரி விதிக்கப்பட்டு இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

1. பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான புதிய கட்டுப்பாடு

அதிகபட்ச சில்லறை விலை கணக்கீடு: பான் மசாலா மற்றும் குறிப்பிட்ட புகையிலைப் பொருட்களுக்கு இனி பில்லில் காட்டப்படும் விலைக்கு மட்டும் வரி போடப்படாது. மாறாக, பாக்கெட்டின் மீது அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விற்பனை விலை அடிப்படையில் வரி கணக்கிடப்படும். உற்பத்தியாளர்களும் சப்ளையர்களும் குறைவான விலையைக் கணக்கு காட்டி வரி ஏய்ப்பதைத் தடுக்க இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிகபட்ச விலையே இறுதியானது: ஒரு பாக்கெட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட விலைகள் அச்சிடப்பட்டிருந்தால், அதில் எது மிக அதிக விலையோ அதுவே வரி கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும். விற்பனைக்கு முன்போ அல்லது விற்பனைக்குப் பின்போ விலை உயர்த்தப்பட்டால், அந்த உயர்த்தப்பட்ட விலையே வரிக்குரியதாக மாறும்.

வெவ்வேறு ஊர்களுக்கு வெவ்வேறு விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அந்தந்தப் பகுதிக்குரிய விலைக்கேற்ப வரி கணக்கிடப்படும்.

2. ஆன்லைன் கேமிங் மற்றும் கேசினோக்களுக்குக் கிடுக்கிப்பிடி

ஆன்லைன் பண விளையாட்டுகளில் ஒரு நபர் செலுத்தும் அல்லது டெபாசிட் செய்யும் மொத்தத் தொகைக்கும் இனி வரி விதிக்கப்படும். இதில் ரொக்கப் பணம் மட்டுமல்லாமல், டிஜிட்டல் சொத்துக்கள் மூலமாகச் செலுத்தப்படும் தொகையும் அடங்கும். கேமிங் நிறுவனங்கள் பயனாளர்களுக்குத் திரும்ப அளிக்கும் பணம் (Refund) அல்லது பயன்படுத்தப்படாத டெபாசிட் தொகையைக் கழித்துக் கொண்டு மீதிக்கு மட்டுமே வரி கட்டுவோம் என்று கூற முடியாது.

கேசினோ போன்ற விளையாட்டுகளுக்குத் தரப்படும் டோக்கன்கள், காயின்கள் அல்லது டிக்கெட்டுகளுக்குச் செலுத்தப்படும் முழுத் தொகையின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்படும். ஆனால், வெற்றி பெற்ற பணத்தை வங்கிக் கணக்கிற்கு எடுக்காமல் மீண்டும் அடுத்த ஆட்டத்திற்குப் பயன்படுத்தினால், அது புதிய டெபாசிட்டாகக் கருதப்படாது.

3. வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கடுமையான விதிமுறைகள்

இந்தியாவிற்கு வெளியே இயங்கும் வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் பலவும் வரி கட்டாமல் தப்பித்து வந்தன. இனி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்யும்போது, தங்களது இணையதள முகவரி (URL), செயலிகளின் விவரங்கள் மற்றும் இந்தியாவில் எப்போது செயல்பாட்டைத் தொடங்கினோம் என்ற முழு தகவலையும் அரசிடம் வெளிப்படையாகப் பதிவு செய்ய வேண்டும். இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது ஜிஎஸ்டி கணக்கை அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்குள் கட்டாயமாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+