சற்று அதிகரிக்கும் கொரோனா.. முதல்வரிடம் இருந்து பறந்த உத்தரவு.. மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர கடிதம்!
சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா இரண்டாம் அலையில் தள்ளாடியது. தமிழகத்தின் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் 31,000-ஐ கடந்து சென்றது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
சென்னையின் முக்கிய மருத்துவமனைகள் முன்பு ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நின்றன. ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு போடப்பட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டது. மேலும் மக்களின் ஒத்துழைப்பு காரணமாக 31 ஆயிரத்துக்கும் மேல் சென்ற தினசரி பாதிப்பு 2,000-க்கும் கீழ் வந்து விட்டது.

பாதிப்பு சற்று அதிகரிப்பு
அதன்பிறகு ஏராளமான தளர்வுகள் கொடுக்கப்பட்டன. பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தியேட்டர்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதே வேளையில் மக்கள் கூடுவதை தவிர்க்க சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்களுக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் வேளையில் பொது இடத்தில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊரவலமாக கொண்டு செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. அதாவது நேற்று முன்தினம் 1,587 பேருக்கு தினசரி பாதிப்பு உறுதியானது.
நேற்று இந்த எண்ணிக்கை அதிகரித்து 1,596 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கோவையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் 179 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று சென்னையில் 186 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இது மட்டுமில்லாது கொங்கு மண்டலத்தின் சில மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் அக்டோபர் 31-ம் தேதி வரை அரசியல், மத கூட்டங்கள், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் பண்டிகை களை கூட்டம் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். நமது அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் 25,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
கேரள கொரோனா தாக்கம் காரணமாகவும், தமிழகத்தில் விடப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாகவும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா மேலும் அதிகரிக்காத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கொரோனா சற்று அதிகரித்துள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
Recommended Video
வரும் காலங்களில் பாதிப்பு உயரலாம் என்று கூறப்படுவதால் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம்தோறும் தடுப்பூசிகள் போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வருகிற 18-ம் தேதி மெகா தடுப்பூசி முகாமில் கூடுதல் தடுப்பூசி செலுத்தும் இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications