கேப்டன் இல்லாத கப்பல்... நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்... யாருடன் கூட்டணி.. நெருக்கடியில் தேமுதிக!
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கூட்டணியா? தனித்துப் போட்டியா என திக்கு தெரியாமல் தடுமாறுகிறது தேமுதிக. இதுஒருபுறம் இருக்க நடப்பது நடக்கட்டும் என்ற பாணியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் தன்னிச்சையாகவே தேமுதிக நிர்வாகிகள் இறங்கிவிட்டனராம்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் மற்றும் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழக சரித்திரத்தில் இல்லாத வகையில் அதிமுக, திமுக இரு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு என்கிற பேரம் பேசிய ஒரே கட்சி தேமுதிக. இதனால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது தேமுதிக.
அதேநேரத்தில் திமுக, அதிமுக இரு கட்சிகளையும் விமர்சனம் செய்யவும் தேமுதிக தவறவில்லை. இதுவும் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இப்படி மாறி மாறி தொகுதி பங்கீட்டு பேரம் பேசியதால் தேமுதிக தனது வலிமையையும் இழந்தது.

எதிர்காலம் கேள்விக்குறி
2019 லோக்சபா தேர்தலில் வேறுவழியே இல்லாமல் அதிமுக கொடுத்த இடங்களை வாங்கியது. கடந்த சட்டசபை தேர்தலில் கடைசிநேரத்தில் தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்தது. இந்த இரு தேர்தல்களிலும் தேமுதிக படுதோல்வி அடைந்தது. இதனால் தேமுதிகவின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியானது.

தேமுதிக சிதறியது
தமிழக சட்டசபை எதிர்க்கட்சியாக இருந்த கட்சி, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்கிற கதையாக கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போனது. தேமுதிக தலைமையின் தேர்தலுக்கான கூத்துகளால் அந்த கட்சியே சிதறு தேங்காய் போல சிதறிப் போனது. அக்கட்சியில் 2-ம் கட்ட தலைவர்கள் என யாரும் இல்லாத நிலை உருவானது.

திமுகவின் திடீர் பாசம்
இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிவடைந்த பின்னர் திமுக தரப்பு, தேமுதிகவை அரவணைத்து கொண்டது. திமுக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி, விஜயகாந்த் வீட்டுக்குப் போய் வாழ்த்துப் பெற்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும் மைத்துனர் சுதீஷும் சந்தித்தனர். இதனையடுத்து யாருமே எதிர்பார்க்காத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் வீட்டுக்குப் போய் நலம் விசாரித்தார். அப்போதிருந்தே தேமுதிகவுக்கு திமுக உயிர் கொடுத்து வருகிறது என்கிற பேச்சுகள் எழுந்தன. அதாவது தேமுதிக, திமுகவுடன் கை கோர்க்கப் போகிறது; எதிர்காலமே சூனியமாகிப் போய் இருந்த நிலையில் தேமுதிக நிர்வாகிகளுக்கும் இது பெரும் நம்பிக்கையை கொடுத்தது. இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் என்ன நிலைப்பாடு?
இப்படியான பின்னணியில் உள்ளாட்சி தேர்தலும் நெருங்கிவிட்டது. அவரை கவனித்துக் கொள்ள விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பரபரப்பாக இயங்குவதால், நாம் என்ன செய்வது என்று தேமுதிக மா.செ.க்கள் பலரும் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகளை தொடர்புகொண்டு கேட்டு வருகின்றனர். இந்த நச்சரிப்பை பிரேமலதாவுக்கு பாஸ் செய்தபடி இருக்கிறார் சுதீஷ். பிரேமலதாவோ, கூட்டணி வைக்கிறோமா ? தனித்துப் போட்டியா ? என்பதை தமிழகம் திரும்பியதும் முடிவு செய்யலாம். இப்போதைக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் 9 மாவட்டங்களின் நிர்வாகிகளும் ஒவ்வொரு பகுதியிலும், வார்டு வாரியாக வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணியை கவனிக்க சொல்லுங்கள் என்று கேட்டுகொண்டிருக்கிறாராம் பிரேமலதா.












Click it and Unblock the Notifications