ஒரு வாரத்திற்கு மளிகை, காய்கறி கடைகள் இயங்காது.. அரசு மறுபரிசீலனை செய்ய பொதுமக்கள் கோரிக்கை
சென்னை: ஒரு வாரத்திற்கு மளிகை, காய்கறி கடைகள் இருக்காது என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மளிகை, காய்கறி கடைகள் அடைக்கப்பட்டால் அத்தியாவசிய தேவைக்கு கூட எதுவும் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் சூழல் ஏற்படாலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கடந்த மே 10ம்தேதி முதல் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 2.74 லட்சமாக உள்ளது. தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை தொட்டுள்ளது. உயிரிழப்பும் 500ஐ நெருங்கி உள்ளது

முக ஸ்டாலின்
இந்நிலையில் முழு ஊரடங்கு வரும் 24ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்படுதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசின் புதிய அறிவிப்பின் படி 24ம் தேதி முதல் ஒரு வாரத்திற்க மளிகை கடைகளும், காய்கறி கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் வாகனங்கள்
அதற்கு பதில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வேண்டிய காய்கறிகளை தோட்டக்கலை மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகிக்க அரசு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

அரசு அனுமதி
அதாவது பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம் ஆகியவற்றுக்கு அனுதி அளிக்கப்பட்டுள்ளது.

பார்சல் சேவை
இதேபோல் உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

காய்கறி விநியோகம்
அரசின் அறிவிப்பின் தோட்டக்கலை மூலமாக சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் காய்கறிகள் விநியோகம் செய்துவிட முடியாது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் காய்கறிகளை எல்லா இடங்களுக்கும் தேவைக்கு ஏற்ப விநியோகிப்பது கடினமானது. எனவே ஒரு வாரத்திற்கு மளிகை, காய்கறி கடைகள் இருக்காது என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவகங்களுக்கு சிக்கல்
மளிகை கடைகள் ஒரு வாரத்திற்கு அடைக்கப்பட்டால் இதனால், நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் ஹோட்டல்கள் கூட செயல்பட முடியாத நிலை ஏற்படும். ஏனெனில் அன்றாடம் ஓடும் காசில் தான் பல உணவங்கள் இயங்குகின்றன. மொத்தமாக பொருட்களை வாங்கி வைக்க இயலாது. ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வைக்கும் நிலையில் பொதுமக்களில் பலர் இல்லை.

கூலி வேலை செய்பவர்கள்
கூலி வேலைக்கு சென்றவர்கள், வேலை இல்லாததால் பிறரிடம் கடன் வாங்கி வாழ்க்கையை நகர்த்தி வரும் மக்கள் நாளை ஒரு நாளில் வீட்டிற்கு ஒரு வாரத்திற்கு தேவையான மளிகைகளை வாங்கி வைக்க முடியாது. எனவே தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி மளிகை, காய்கறி கடைகளை குறைந்தபட்ச நேரமாவது இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications