பிரியங்கா போனது தெரியும்? பிரஜ்வல் தப்பியோடியது மோடிக்கு தெரியாதா? ஆனந்த் சீனிவாசன் கேள்வி
சென்னை: ஆனந்த் சீனிவாசன் பிரஜ்வல் ரேவண்ணா தப்பித்துப் போனது பிரதமர் மோடிக்குத் தெரியாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கில் திடுக்கிட வைக்கும் பல அதிரடி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிரஜ்வல் ரேவண்ணா மீது ஹாசன் மாவட்டம் முன்னாள் பெண் கவுன்சிலர் பரபரப்பான புகாரை அளித்திருந்தார். அதனையடுத்து பிரஜ்வல் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான தேவகவுடாவின் மூத்த மகன்தான் ரேவண்ணா. இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா. ரேவண்ணா ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹொலேநரசிப்புரா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.
ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ஜேடிஎஸ் சார்பில் ஹாசன் தொகுதியின் எம்பியாக உள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக பிரஜ்வல் போட்டியிட்டுள்ளார்.
கடந்த மாதம் 26ம் தேதி இந்தத் தொகுதிக்குத் தேர்தல் நடந்தபோது பிரஜ்வல்லின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் தலைப்பு செய்தியானது. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார் எனச் சொல்லப்படுகிறது.
பிரஜ்வல் 300 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து 2,976 ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரஜ்வல் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறைத் தலைவர் ஆனந்த் சீனிவாசன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
பிரஜ்வல் பாலியல் விவகாரம் குறித்து ஆனந்த் சீனிவாசன் பேசுகையில், "உபியில் 2 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. யாரை அங்கே நிறுத்த போகிறது காங்கிரஸ் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. அந்த நேரத்தில்தான் ராகுல் போட்டியிடுவார் எனக் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
உபியில் உள்ள அமேதி தொகுதியும் ரேபலேலி தொகுதியும் காந்தி குடும்பத்தின் செல்வாக்கு மிக்கவை. அதை நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள்.

பலரும் அமேதியில் ராகுல் போட்டியிடுவார் என்றும் ரேபரேலியில் பிரியங்கா காந்தி நிற்பார் என்றும் எதிர்பார்த்து இருந்தார்கள்.
ஆனால், அது நடக்கவில்லை. மேல்மட்ட செய்திகள் என்ன சொல்கின்றன என்றால், பிரியங்கா காந்தி பிரச்சாரத்துடன் தனது பணியை முடித்துக் கொள்வார். அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்கிறது.
காங்கிரஸ் மேல்மட்ட கூட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட்டு என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆகவே, காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பமே 2 சீட்டுகளை எடுத்துக் கொண்டால், மற்றவர்களும் அதை எதிர்பார்ப்பார்கள்.
அப்படி என்றால் வேறு யாருக்கும் சீட்டு அதைப்போல் வழங்கப்படவில்லையா? என்றால் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
ஆனால், ஒரு முன்மாதிரியாக நாமே இருக்க வேண்டும் என்று சோனியா காந்தி குடும்பம் நினைக்கிறது. அந்த முடிவை எடுக்கத்தான் இந்தக் காலதாமதம் ஏற்பட்டது.
கட்சிக்குள் உள்ள தலைவர்கள் இரண்டு பேரையும் போட்டியிடுங்கள் எனச் சொன்னார்கள். அதற்கு ராகுல் சம்மதிக்கவில்லை.
'காந்தி' குடும்பத்தின் பரம்பரைத் தொகுதி ரேபரேலியா? அமேதியா என ஒப்பிட்டுப் பார்த்தால், ரேபரேலிதான் என்ற உண்மை விளங்கும். அங்கே இந்திரா காந்தி போட்டியிட்டுள்ளார்.
அவருக்கு முன் அவரது கணவர் ஃபரோஸ்காந்தி போட்டியிட்டுள்ளார். அதன்பின்னர் சோனியா காந்தி நின்றிருக்கிறார்.
அமேதியைவிட அதிகமாகக் காங்கிரஸ் கட்சி முன்னோடிகள் போட்டியிட்டுள்ள தொகுதி ரேபரேலிதான். அங்கே இந்த முறை சோனியா காந்தி நிற்கவில்லை. ஆகவே அதைக் கைவிடமுடியாது.
அமேதிக்கு ராகுல் போய்விட்டால், ரேபரேலியில் காந்தி குடும்பத்தைச் சேராதவரை அங்கே வேட்பாளராக நிறுத்த வேண்டும்.
அதற்காகத்தான் ராகுல் ரேபரேலியை தேர்வு செய்துள்ளார். அங்கு ராகுலுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சொல்லப் போனால் மோடியே அதிகமாகக் காங்கிரஸ் பற்றித்தான் பேசுகிறார். அவர் கட்சியைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டுவிட்டார். அவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் என்ன உள்ளது என்று பேசுகிறார்.
பாஜக தேர்தல் அறிக்கையைப் பற்றி அவர் பேசுவதே இல்லை. 400க்கு மேல் வெல்வோம் என்ற முழக்கத்தை மோடி கைவிட்டுவிட்டார். அதற்குப் பதிலாகக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு பப்ளிசிட்டி கொடுத்து வருகிறார்.
கர்நாடகாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களுக்கு மேல் பலரையும் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். காட்டுமிராண்டித் தனத்தின் உச்சமாக அந்த ஆபாசங்களை அவரே வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.
தான் பிரஜ்வல் ரேவண்ணாவை முன்பே எச்சரித்து இருந்தேன் என்று பாஜக தலைவர் ஒருவரே வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னிடமே அந்த வீடியோக்கள் இருந்தன என்றும் கூறியுள்ளார்.
அவ்வளவும் தெரிந்த பிறகு அவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளனர் பாஜக கூட்டணி தலைவர்கள்.
பிரமர் மோடி, 'பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டுப் போட்டால் எனக்கு ஓட்டுப் போட்ட மாதிரி' என்று பேசியுள்ளார். தாலியைப் பற்றிப் பேசும் பிரதமர் ஏன் இந்த பாலியல் வன்முறை பற்றிப் பேசுவதில்லை?
'பேட்டி படாவ், பேட்டி பச்சாவ்' என்று சொல்கிறார் மோடி. அப்படி என்றால் பெண் குழந்தைகளைப் படிக்க வையுங்கள். பெண் குழந்தைகளைப் பாதுகாப்பு தாருங்கள் என்று அர்த்தம்.
ஆனால், பாஜக கூட்டணியில் உள்ளவர் இப்படி ஒரு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அது குறித்து வாய் திறக்க மறுக்கிறார் மோடி.
எங்கள் தலைவி, அவரது மகளைப் பார்க்க அமெரிக்கா போனதை பற்றி மோடி அறிந்து வைத்திருக்கிறார். பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு ஓடிப் போய்விட்டார் என்ற செய்தி அவருக்குத் தெரியாமல் இருக்குமா?
விமான நிலையங்கள் முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அங்கே உள்ளவர்கள் அனைவரும் மத்திய அரசின் அதிகாரிகள். அவர்களுக்குத் தெரியாமல் பிரஜ்வல் எப்படி நாட்டைவிட்டு வெளியேறி இருக்க முடியும்" என்கிறார்












Click it and Unblock the Notifications