கர்நாடகாவில் ஓய்ந்து போன மோடி அலை! 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்! வெளியான அதிரடி சர்வே!
சென்னை: கர்நாடகாவில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்பது சர்வே மூலம் தெரியவந்துள்ளது.
தென் இந்திய மாநிலங்களில் பாஜகவின் கோட்டை என்றால் அது கர்நாடகாதான். வேறு எந்த மாநிலத்தைவிடவும் பாஜகவின் வலதுசாரி அரசியல் என்பது மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போய் உள்ளது.

இந்த மாநிலத்தில் மிகப் பெரும்பான்மையான சமூகமாக லிங்காயத்துகள் உள்ளனர். அதைப்போல் ஒக்கலிகர் இவர்கள்தான் மெஜாரிட்டி. இந்த இரண்டு சமூகமும் பாஜகவின் அசைக்க முடியாத ஓட்டு வங்கியாக இருந்துள்ளது.
அதனால்தான் இங்கே எடியூரப்பா எத்தனை பிரச்சினைகளில் மாட்டினாலும் அவரது கை ஓங்கி நிற்கிறது. அவரை பாஜக விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதற்கு அதுவே காரணம்.
கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தம் 25 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றது.
தென் இந்திய மாநிலங்களில் பாஜக இந்தளவுக்கு அதிகமான சீட்டுகளை வேறு எந்த மாநிலத்திலும் பெற்றதில்லை. தமிழ்நாட்டில் கூட ஒரு சில தொகுதிகளில்தான் பாஜக வென்றுள்ளது.

ஆனால், கேரளாவில் அதுகூட இதுவரை பலிக்கவில்லை.
இப்படி பாஜகவின் இரும்புக் கோட்டையாக இருந்து வந்த கர்நாடகாவின் நிலைமை இந்த முறை தலைகீழாக மாறியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 'ஈ தினா' நடத்திய சர்வேவில் இந்த முறை பாஜகவைவிட அதிக இடங்களைக் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது.
கடந்த 2023 கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் 132 முதல் 136 வரையான தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்று கருத்துக் கணிப்பை இந்த ஈ தினா வெளியிட்டிருந்தது. அதை அப்போது யாருமே நம்பவில்லை.
அதற்குக் காரணம், இவர்கள் சர்வே களத்திற்குப் புதிது. ஆகவே, இவர்கள் குரல் எடுபடவில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஈ தினாவை பலரும் தேட ஆரம்பித்துவிட்டனர்.
ஏன் என்கிறீர்களா? அவர்களின் சர்வே மிகச் சரியாக அப்படியே நடந்தது. காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

அதேபோல பாஜக 59 முதல் 65 வரும் என்று சொல்லி இருந்தது ஈ தினா. சரியாக 65 சீட்டுகள்தான் பாஜகவுக்குக் கிடைத்தது. 19 முதல் 25 சீட்டுகளை ஜேடிஎஸ் கைப்பற்றும் என்றார்கள். 19 சீட்டுக்களைதான் அந்தக் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் கைப்பற்றியது.
அதனால் மக்கள் மத்தியில் இன்று ஈ தினாவுக்கு பயங்கரமான செல்வாக்கு நிலவுகிறது.
இந்த முறையும் ஒரு சர்வே வெளியிட்டுள்ளது ஈ தினா. அதில் 13 முதல் 18 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது.
இந்த சர்வேவில் இடம்பெற்றிருந்த அசோக்குமார் ஒரு டியூடியூப் தளத்திற்கு மிக விரிவாகப் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், "மோடியும் அமித்ஷாவும் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அடிக்கடி சொல்லி வருகிறார்கள். அவர்கள் சொல்வதற்கும் தொலைக்காட்சிகளில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளுக்கும் ஒத்துப் போகவே போகாது. அந்தளவுக்கு வேறுபாடுகள் உள்ளன.
இப்படி வெளியாக சர்வே எல்லாம் இவர்களே 'குக்' பண்ணிச் சொல்பவை. ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு சொல்லும் செய்திகள். அதில் உண்மை இல்லை. எங்களது சர்வே அப்படி இல்லை.

நாங்கள் 2022 இல் இந்த அமைப்பை உருவாக்குவதற்கு கிரவுட் ஃபண்ட் மூலம் தான் தொடங்கினோம். இதற்கு உதவியவர்கள் எல்லாம் ஏழை எளிய மக்கள். கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள், பொதுமக்கள் மாதம் தரும் 100, 50 ரூபாய் நன்கொடைகளைக் கொண்டுதான் நாங்கள் சர்வே செய்வதற்கான நிதியைப் பெற்றுள்ளோம்.
ஆகவே நாங்கள் கார்பரேட் நிறுவனம் இல்லை. நாங்கள் மக்களிடம் போய் சாதிவாரியாக, பாலினம் ரீதியாக, வர்க்க ரீதியாக சர்வே செய்து வெளியிடுகிறோம்.
நாங்கள் 2024 கர்நாடகா மக்களவைத் தேர்தல் சர்வேக்காக 56 ஆயிரம் பேரிடம் நேரடியாகப் பேசி கருத்துக் கணிப்பை எடுத்து இருக்கிறோம். இந்த முறை 20க்கும் மேலான தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என்று பல ஊடகங்கள் பேசி வருகின்றன.
2014 முதல் 2019 வரை கர்நாடகாவில் மோடி அலை வீசியது. அது உண்மை. அன்று பலரும் மோடிக்குத்தான் ஓட்டு போடுவோம் என்று வெளிப்படையாகச் சொல்வதைக் கேட்க முடியும்.
ஆனால், அந்த நிலைமை 2024இல் இல்லை. நாளைக்கே தேர்தல் நடந்தால் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கர்நாடக மக்களைக் கேட்டிருந்தோம். அதற்கு 47% மக்கள் காங்கிரஸ் என்று பதிலளித்துள்ளனர்.
பாஜகவுக்கு லிங்காயத்து சமூகத்தினர் வாக்குகள் தான் பலமாக இருந்தது. அதைப் போல ஒக்கலியா சமூகம். இந்த இரண்டு சமூகத்தினரும் அதிகம் உள்ள தொகுதிகளில் பாஜக லட்சக்கணக்கான வாக்குகளைப் பெறும். ஆனால், இந்த 2024 தேர்தலுக்காக நாங்கள் எடுத்த சர்வேயில் இந்த இரண்டு சமூக மக்களும் பாஜகவுக்கு வாக்களிப்பதற்குத் தயக்கம் தெரிவித்துள்ளார்கள்.
அதேபோல் பாஜகவும் ஜேடிஎஸ் கூட்டணி 10 முதல் 13 தொகுதிகளில் வெல்லும். இதுதான் எங்கள் சர்வே முடிவுகளாக இருக்கிறது" என்கிறார்
காங்கிரஸ் கடந்த சட்டசபைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைக் கிட்டத்தட்ட இந்த 10 மாதங்களில் அதை போதிய அளவு நிறைவேற்றி உள்ளது.
இந்த ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்ட இலவச பேருந்து பயணம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் தாக்கத்தைச் செலுத்தி உள்ளது. சுமார் நான்கரை கோடி பெண்கள் பேருந்தில் இலவசமாகப் பயணித்துள்ளனர்.
எப்போதுமே காங்கிரஸ் 9 எம்பிகள் என்ற எண்ணிக்கையைத் தாண்டியதே இல்லை. ஆனால், பாஜகவுக்கு 15க்கு மேல் என்பது ஒரு உத்தரவாதம் இருந்துள்ளது. இதுதான் கடந்த 20 ஆண்டுகால தேர்தல் கள நிலவரம்.
ஆனால், இப்போது பாஜக மற்றும் ஜேடிஎஸ் ஆகிய இரண்டு கட்சிகள் கூட்டணி அமைத்து 43% என்ற அளவைத் தாண்டவில்லை. எங்கள் சர்வே அதைத்தான் சொல்கிறது. ஆனால் காங்கிரஸ் வாக்குவங்கி என்பது இந்தமுறை கிட்டத்தட்ட 45%த்தை நெருங்கி உள்ளது. எங்கள் சர்வே படி 18 தொகுதிகளில் இந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்" என்கிறார்











Click it and Unblock the Notifications