மக்களின் உடல்நலன் முக்கியம்.. போலி குளிர்பான தொழிற்சாலைகள் மீது உடனடி ஆக்ஷன்.. அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் போலி குளிர்பான தொழிற்சாலைகள் இயங்குவது கண்டறிப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வந்தவர்கள் சதீஷ் -காயத்ரி தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் தரணி(13). கல்பாக்கத்தைச் சேர்ந்த இவர்கள், கடந்த சில மாதங்களாக காயத்ரியின் தாய் வீடான பெசன்ட் நகரில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை காயத்ரி வேலைக்கு சென்று விட்ட நிலையில் சிறுமி சிறுமி தரணியின் வாழ்க்கையில் விதி விளையாடியது. மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அருகில் உள்ள மளிகை கடையில் Togito Cola என்ற குளிர்பானத்தை வாங்கியுள்ளார்.

குளிர்பானம் குடித்த சிறுமி
10 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த குளிர்பானத்தை வாங்கி குடித்த சிறுமி தரணி ஆசையுடன் அதனை குடித்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமியின் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகமாக வாந்தி எடுத்த சிறுமி மயங்கி கீழே விழுந்தார். மேலும், சிறுமி தரணியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. இதனை பார்த்த அவரது சகோதரி அஸ்வினி துடிதுடித்து போனார்.

பரிதாப உயிரிழப்பு
இதனை தொடர்ந்து தகவலின் பேரில் அக்கம்பத்தினர் ஓடி வந்து மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுமியின் உடல் நீல நிறமாக மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது. குளிர்பானத்தை குடித்த சிறுமியின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அதிகாரிகள் அதிரடி ஆய்வு
சிறுமி குளிர்பானம் வாங்கிக் குடித்த கடையிலுள்ள பொருட்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அங்கு இருந்த போலி குளிர்பான பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு போலி குளிர்பான தொழிற்சாலைகள் செயல்படுவதாகவும், இதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

கடும் நடவடிக்கை
இந்த நிலையில் குளிர்பானம் குடித்து சிறுமி இறந்தது தொடர்பாக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, '' உயிரிழந்த சிறுமி குடித்த குளிர்பான மாதிரியை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் போலி குளிர்பான தொழிற்சாலைகள் இயங்குவது கண்டறிப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் உடல்நலன் முக்கியம்
இதில் எந்தவித சமரசமும் கிடையாது. போலி குளிர்பான தொழிற்சாலைகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகள் தயாரிக்கும் உணவு பொருட்கள் மக்களின் உடல்நலனுக்கு ஆபத்தில்லாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications