டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வு.. ஒரு இடத்திற்கு 579 பேர் போட்டி! மையங்களில் குவிந்த தேர்வர்கள்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதல் நிலை தேர்வு இன்று தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை மொத்தம் 4,89,885 பேர் எழுத இருக்கிறார்கள். இதில் ஆண்கள் 1,84,131 பேரும், பெண்கள் 3,5,719 பேரும் அடங்குவர். மாற்று பாலினத்தவர் 35 பேர் அடங்குவர். சென்னையில் 173 தேர்வு மையங்கள் உள்பட தமிழகம் முழுக்க மொத்தம் 1,647 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. பணியிடங்களுக்கு தகுந்தபடி உரிய அறிவிப்புகள் வெளியிட்டு தேர்வுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், குரூப்-2 பதவிகளில் 41 காலியிடங்களும், குரூப்-2 ஏ பதவிகளில் 780 காலியிடங்களுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. உதவி தொழிலாளர் ஆய்வாளர், சார்-பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி, தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நன்னடத்தை அலுவலர், துணை பதிவாளர், ஜெயிலர், மூத்த வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த குரூப் 2 , 2 ஏ தேர்வுகள் வாயிலாக நிரப்ப பட உள்ளன.
மொத்தம் 846 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வை எழுத 4 லட்சத்து 89 ஆயிரத்து 897 பேர் விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
விண்ணப்பித்தவர்களில் 12 பேர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 4,89,885 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 1,84,131 பேரும், பெண்கள் 3,5,719 பேரும் அடங்குவர். மாற்று பாலினத்தவர் 35 பேர் ஆவர். தமிழ்நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தம் 1,647 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 173 தேர்வு மையங்கள் உள்ளன. பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்லப்பட்டது. இன்று நடைபெறும் தேர்வு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெற உள்ளது. காலை 8.30 மணியில் இருந்தே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இன்று நடைபெறும் முதல் நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள், மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
846 பணியிடங்களுக்கு சுமார் 4.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், ஒரு பணியிடத்துக்கு 579 பேர் போட்டி என்ற அளவுக்கு கடும் போட்டி தேர்வர்களிடையே உள்ளது.


Click it and Unblock the Notifications
