ஜெயலலிதா நினைவு நாள்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி.. ஓபிஎஸ்- ஈபிஎஸ் உறுதிமொழி
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ஆவது நினைவு நாளையொட்டி இன்றைய தினம் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மரியாதை செலுத்தினார்கள். அது போல் டிடிவி தினகரனும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவாக 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து மரியாதை செலுத்தினார்கள். தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனும் மரியாதை செலுத்தினார். அவர்கள் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தனர். அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். இதையடுத்து இந்த கூட்டத்தில் உறுதிமொழியை ஏற்றனர். அதில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் திட்டங்களை நிறுத்துவோரின் கொட்டங்கள் அடக்கப்படும், நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து என்று பொய் வாக்குறுதியளித்த முதலமைச்சர், இனியும் தமிழர்களை ஏமாற்ற விடமாட்டோம். அதிமுக உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.
இனியும் இதையெல்லாம் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.. சசிகலா ஆக்ரோஷம்!
அது போல் சசிகலாவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தனித்தனியே ஜெயலலிதா நினைவிடம் வந்து மரியாதை செலுத்தினர். சசிகலா தற்போது இரண்டாவது முறையாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். முதல் முறையாக அக்டோபர் 16ஆம் தேதி நினைவிடம் சென்ற சசிகலா அங்கு கண்ணீர் விட்டார்.