ஆர்ஐ இல்லாமல் அபராதமா? தட்டிக்கேட்ட மப்டி போலீசை தாக்கிய போக்குவரத்து காவலர்.. சென்னை மெரினாவில் ஷாக்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஆர்.ஐ மற்றும் எஸ்.எஸ்.ஐ இல்லாமல் வாகனங்களுக்கு அபராதம் விதித்ததை தட்டி கேட்ட மஃப்டியில் இருந்த போலீஸ்காரரை போக்குவரத்து காவலர் கன்னத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாதாரண உடையில் வந்த காவலர், "ஆர்.ஐ மற்றும் எஸ்.எஸ்.ஐ இல்லாமல் நீங்கள் எப்படி செலான் மெஷின் வைத்து அபராதம் விதிக்கிறீர்கள்.. மெரினா நீச்சல் குளம் அருகே உள்ள இடம் பார்க்கிங் பகுதிதானே இங்கு ஏன் அபராதம் விதிக்கிறீர்கள்" என்று கேட்டதால் ஏற்பட்ட தகராறில் இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை மெரினா கடற்கரை
சென்னை மெரினா கடற்கரை மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும் இடங்களில் ஒன்றாகும். பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து சற்று இளைப்பாறவும் கடலோர அழகை ரசிக்கவும் பொதுமக்கள் இங்கு எப்போதும் வருகை தருவார்கள். அதிகாலை முதல் இரவு வரை வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகவும் காமராஜர் சாலை உள்ளது.
அங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து காவலர்களும் ஆங்காங்கே பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, மெரினா கடற்கரை உள்புறசாலையில் விதிகளை மீறி நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதையும் பார்க்க முடிகிறது.
ஆர்.ஐ மற்றும் எஸ்.எஸ்.ஐ இல்லாமல் எப்படி?
இந்த நிலையில்தான், வாகனத்திற்கு அபராதம் விதிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சாதாரண உடையில் இருந்த காவலர் ஒருவரை போக்குவரத்து போலீஸ் அடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்த விவரம் வருமாறு:-
சென்னையில் மெரினா கடற்கரை சாலையில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அப்போது அந்த வழியாக மப்டியில் வந்த காவலர் ஒருவர் ஆர்.ஐ மற்றும் எஸ்.எஸ்.ஐ இல்லாமல் நீங்கள் எப்படி செலான் மெஷின் வைத்து அபராதம் விதிக்கிறீர்கள்..
கன்னத்தில் பளார் விட்ட போக்குவரத்து போலீஸ்
மெரினா நீச்சல் குளம் அருகே உள்ள இடம் பார்க்கிங் பகுதிதானே இங்கு ஏன் அபராதம் விதிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக போக்குவரத்து போலீசாருக்கும் சாதாரண உடையில் இருந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த போக்குவரத்து போலீசார், சாதாரண உடையில் இருந்த காவலரை தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான காவலர் டி 1 அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் ரத்தினம் என்பது தெரியவந்துள்ளது. ஆர்.ஐ மற்றும் எஸ்.எஸ்.ஐ இல்லாமல் செல்லான் மெஷின் வைத்து அபராதம் விதிக்க கூடாது என்ற விதி இருந்தும் ஏன் விதிக்கிறீர்கள் என்று கேட்டதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடியோ வெளியாகி பரபரப்பு
சென்னை மெரினா கடற்கரை அருகே காவலர்கள் இடையே நடைபெற்ற இந்த மோதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வரும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், காவலருக்கே இந்த நிலை என்றால், போலீசார் விதிகளை மீறும் பட்சத்தில் சாதாரண பொதுமக்கள் கேள்வி கேட்டால் என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நெட்டிசன்கள் கேள்வி
அதேபோல, காவல்துறையினராகவே இருந்தாலும் பொறுப்புடனும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும் என்றும் எனவும் விதியை மீறுபவர்கள் மீது அபராதம் விதிப்பது தவறு இல்லை. ஆனால், சில காவலர்கள் அடாவடியாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. எனவே உயர் அதிகாரிகள் இதுபோன்று நடக்கும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications