அதிமுகவுடன் தவெக செல்லாது.. விஜய் தலைமையில் கூட்டணி.. டிடிவி தினகரன் செல்வார்.. சொல்வது தராசு ஷ்யாம்
சென்னை: தவெக தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு அமமுக செல்லும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். விஜய் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று விரும்புவதால், அதிமுக கூட்டணிக்குள் செல்ல மாட்டார் என்றும், டிசம்பருக்கு பின் விஜய் முடிவு தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி இணக்கமாக இருந்து வரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் அடுத்தக் கட்டமாக பாமக இணையும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாஜக பொறுப்பாளர் பாண்டா சென்னையில் உள்ள அன்புமணியின் வீட்டில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைந்தால், அவர்களுக்கு குறைந்தது 25 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் தவெகவை கொண்டு வர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அமமுக விலகி இருக்கிறது.
இதன் காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டும் என்பதில் டிடிவி தினகரன் தீவிரமாக இருந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை பற்றி பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என்று கூறி வருகிறார். இதனால் தவெக உடன் கூட்டணி அமைக்க அமமுக ஆர்வம் காட்டி வருவதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என்று, எந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்பது விரைவில் தெரியும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், தவெக உடன் அமமுக கூட்டணி அமைக்கும் என்றுதான் தெரிகிறது. விஜயகாந்த் முதல் சட்டசபைத் தேர்தலில் தனித்துதான் போட்டியிட்டார். 2வது தேர்தலில் தான் கூட்டணிக்கு சென்றார்.
அவரின் வாக்கு வங்கியை உணர்ந்து, கூட்டணிக்கு சென்றார். தங்களின் வாக்கு வங்கியை அறிய சினிமா நட்சத்திரங்கள் விரும்புவார்கள். அதனால் விஜய் எந்தக் கூட்டணிக்கும் செல்ல மாட்டார் என்று கருதுகிறேன். அதற்கு காரணம் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் இருக்கிறார். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு கட்சியின் நோக்கம்.
விஜய்க்கு தற்போதைய சூழலில் சில பிரச்சனைகள் உள்ளது. ஆனால் அடுத்த 6 மாதத்தில் என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியாது. அதனால் விஜய் தலைமையில் அமமுக போட்டியிடும் என்பதாகவே டிடிவி தினகரனின் கருத்து அமைந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணிக்குள் விஜய் செல்ல மாட்டார் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் பாஜக இரட்டை இலக்கத்தில் வெல்ல வேண்டும் என்று கூறி வருகிறது.
அப்படியென்றால் கடந்த முறையை காட்டிலும் இம்முறை கூடுதல் இடங்களில் போட்டியிட பாஜக விரும்புகிறது. குறைந்தபட்சம் 30 முதல் 40 தொகுதிகளை கோருவார்கள். பாமகவும் இணைந்தால், 25 முதல் 30 தொகுதிகளை எதிர்பார்ப்பார். அதனால் தவெகவை இணைத்தால், அதிமுகவால் 150 தொகுதிகளுக்கும் குறைவாகவே வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications