உங்களுக்காக உங்கள் குடும்பம் வெளியே காத்திருக்கிறது! சிறைவாசிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்!
சென்னை: உங்களுக்காக உங்கள் குடும்பத்தினர் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை மனதில் நிறுத்தி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என சிறைவாசிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ் வழங்கியுள்ளார்.
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் சிறை வாசிகளுக்கான விளையாட்டு பயிற்சிகள் தொடக்க விழா மற்றும் காவலர்களுக்கான மின் மிதி வண்டிகள் வழங்கும் விழா புழல் சிறையில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுக்கள் வழி சீர்திருத்தம் செய்யும் நோக்கில் சிறை வாசிகளுக்கு உள் மற்றும் வெளி விளையாட்டு உபகரணங்களை வழங்கி, கைப்பந்து, இறகுப்பந்து ஆகிய போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் சிறையில் பாதுகாப்பு சுற்று வருவதற்கு சிறைக்காவலர்களுக்கு மின் மிதி வண்டிகளை வழங்கினார்.
அதேபோல் சிறையில் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில் விரிவாக்கப்பட்ட சிறை நூலகத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். சறைவாசிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபட அமைச்சர் நாசர் இசைக்கருவிகளை வழங்கினார்.

இதனிடையே அந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சிறைக்குள்ளே ஏதோ சில காரணங்களால் வந்துள்ளீர்கள் என்றும் உங்களுக்காக உங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மனதில் நிறுத்தி நீங்கள் ஒழுக்கத்துடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என சிறைவாசிகளுக்கு அட்வைஸ் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, சிறை வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.












Click it and Unblock the Notifications