விரைவில் முதல் ஆண்டு கொண்டாட்டம்... அமைச்சர் உதயநிதி செய்த டாப் 10' சம்பவங்கள்!
சென்னை: உதயநிதிக்கு இன்று 46-வது பிறந்தநாள். அவரது வாழ்க்கையில் இந்தப் பிறந்தநாள் பலவகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று; அவர் அமைச்சராகப் பதவியேற்று வரப்போகும் டிசம்பர் மாதத்துடன் சரியாக ஒரு வருடம் நிறைவடையப் போகிறது.
இரண்டாவது; திமுக-வின் மிக முக்கியமான அணியான இளைஞரணியின் 2-வது மாநாட்டை வருகின்ற டிசம்பர் 17 அன்று இளைஞரணி செயலாளராக இருந்து உதயநிதி நடத்த இருக்கிறார்.

கடந்த டிசம்பர் 14-ல் அமைச்சராகப் பதவியேற்ற உதயநிதி, இந்த வருடம் டிசம்பர் 17-ல் திமுக இளைஞரணி சார்பாக மிகப் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்த இருக்கிறார்.
இவருக்கு முன்னதாக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது 2007-ம் ஆண்டு திமுக இளைஞரணியின் முதல் மாநாடு திருநெல்வேலியில் நடந்தது. அதற்குப் பின் 16 வருடங்கள் கழித்து இந்த இளைஞரணி மாநாடு உதயநிதியை மையமாக வைத்து நடக்க உள்ளது.
திமுகவில் இளைஞரணி என்ற ஒரு தனி அணியை உருவாக்கிய மு.க.ஸ்டாலின், சுமார் 35 வருடங்கள் அதன் செயலாளராக இருந்து அமைப்பை வழிநடத்தினார். இன்று அந்தப் பொறுப்பு உதயநிதியின் கைக்கு மாறி இருக்கிறது.

'திமுக இளைஞரணியில் 25 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட வலுவான படையாக' உள்ளதாகக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அந்தப் படையின் இன்றைய 'முகம்' உதயநிதிதான். இந்தப் பதவியில் அவர் 2019 ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அவர் அந்தப் பொறுப்புக்கு வந்து 4 ஆண்டுகள் விரைந்தோடிவிட்டன.
அவர் உள்ளே வந்தபோது '30 லட்சம் இளைஞர்களை புதியதாக இணைப்போம்' என்று வாக்குறுதி அளித்தார். அதைச் சொன்ன சில மாதங்களுக்குள் தென் சென்னையில் மட்டும் 1,20,000 பேரை இணைத்து புதிய நம்பிக்கையைக் கட்சிக்குள் பாய்ச்சினார்.

இந்தக் கட்டுரையில் நாம் அவரது அரசியல் வாழ்க்கை பற்றி அலசப்போவதில்லை. அவரது அமைச்சர் பதவிக்காலத்தை மையமாக வைத்தே சில விசயங்களை அலசப்போகிறோம்.
அதற்குக் காரணம், அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைய உள்ளது. உண்மையில் இந்த ஒரு ஆண்டுகாலத்தில் இந்தத் துறை வரலாறு காணாத அளவுக்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. அதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சொல்லலாம்.
முதலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு தரமான சம்பவத்தைச் செய்தார். இதுவரை அப்படி ஒரு செயலை எந்த அமைச்சரும் செய்ததில்லை.

சம்பவம் 1: தான் ஒரு விளையாட்டுத்துறை அமைச்சர் என்பதால், அவரது தொகுதிக்குள் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் மேட்சை பார்க்க, அவர் தொகுதி ஏழை எளிய குழந்தைகளை நேரடியாக அந்தப் போட்டியைப் பார்க்க அழைத்துச் சென்றார். அதுவரை சேப்பாக்கம் ஸ்டேடியம் வெளியே என்றாவது ஒருநாள் இந்த மைதானத்திற்குள் நாமும் போக முடியாதா எனக் கனவு கண்டுகொண்டிருந்த பிள்ளைகளை அழைத்துச் சென்றது அதிரடியான செயல் மட்டுமல்ல; சமூகநீதிக்கான சான்று.
சம்பவம் 2: அதைத் தொடர்ந்து உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராகச் செய்த அடுத்த சம்பவம் என்ன தெரியுமா? 16 ஆண்டுகள் கழித்து சென்னையில் சர்வதேச ஹாக்கி தொடரை நடத்தியதுதான்.
இந்தத் துறை கடந்த 10 ஆண்டுகளாக எப்படித் தூங்கிக் கொண்டிருந்தது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே சாட்சி. விளையாட்டுத்துறை என்பது விளையாட்டுப் போட்டிகளே நடைபெறாத துறை என்ற அளவில்தான் இருந்துவந்தது. அதை முறியடித்து ஹாக்கி தொடரை நடத்தியதோடு, அந்தப் போட்டிகளைக் காண சேப்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் வசிக்கும் குழந்தைகளை அழைத்துச் சென்றார்.

அந்தக் குழந்தைகளுடன் அரங்கத்தில் அமர்ந்து சம்சா, பஜ்ஜி சாப்பிட்டு போட்டிகளைக் கண்டு ரசித்தார். ஹாக்கி போட்டிக்குள்ளாகவும் சமூகநீதி செயல்பட்டது.
சம்பவம் 3: இவர் அமைச்சராக வருவதற்கு முன்னால், விளையாட்டு என்றால் அது கிரிக்கெட். அதைவிட்டால் ஹாக்கி. அதையும் மீறி வேறு போட்டிகள் என்றால் ஸ்குவாஷ், பேட்மிண்டன், நீச்சல் போட்டி என்று எல்லாம் பணம் உள்ள விளையாட்டுகளில்தான் கவனத்தைக் குவித்தார்கள்.
ஆனால், உதயநிதி அதற்கு மாறாக 'முதலமைச்சர் கோப்பை 2023' போட்டிகளில் சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய தமிழர் வீர விளையாட்டு இணைத்து அதற்கும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தித் தந்தார். இதனால், சிலம்பாட்டம் கற்பவர்களின் எண்ணிக்கை சென்னையை போன்ற நகரங்களில் அதிகரித்துள்ளது.

சம்பவம் 4: சரிப்பா... இவையெல்லாம் உள்ளூர் திறமைகளுக்கானது. சர்வதேச அளவில் என்ன சாதித்தார்? இப்படியும் சிலர் கேள்வி எழுப்பலாம். அதற்கு அமைச்சர் உதயநிதியிடம் பதில் இருக்கிறது.
அவர் அமைச்சராகப் பதவிக்கு வந்த பிறகுதான் 'Asian Cup Games 2023' சீனாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 107 பதக்கங்களை வென்றது. அதில் 27 பதக்கங்களைத் தமிழ்நாட்டு வீரர்கள் வென்றது என்பது மிகமிக முக்கியமான செய்தி. இதை எல்லாம் சர்வதேச சாதனை இல்லை என்று யாரால் சொல்ல முடியும்?
சம்பவம் 5: இவரது ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி எவரெஸ்ட் மலையை ஏறி சாதனைப் படைத்துள்ளார். அவருக்கு உடனடியாக 10 லட்சத்திற்கான ஊக்கத்தொகையை அளித்தார் உதயநிதி. இது மட்டுமல்ல; வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதே ஊக்கத்தொகைதான்.
ஆகவே தேசிய அளவில் மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்லும் சீனியர், ஜூனியர் வீரர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று அதற்கு ஒரு கால வரம்பை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டது இவர் அமைச்சரானதற்குப் பின்னர்தான். அதைப்போல் ஊக்கத்தொகையை 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை உயர்த்தியது இவரது காலகட்டத்தில்தான்.

சம்பவம் 6: விளையாட்டு வீரர்களுக்கு மிக மிக முக்கியமானது ஸ்பான்சர்ஷிப். அது இல்லை என்றால் எந்தச் சாதனையும் வெளி உலகத்திற்குத் தெரியாது. விளையாட்டுத்துறையில் நிதிப் பற்றாக்குறை உள்ளது.
ஆகவே, அதன் அளவைப் பெருக்க வேண்டு என்பதற்காகத் தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளை என்ற ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் கார்பரேட் நிறுவனங்களிடம் நிதிபெற்று பலரை இன்று சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளச் செய்திருக்கிறார் உதயநிதி.
சம்பவம் 7: அடுத்தது பாராலிம்பிக் வீரர்கள். உதயநிதி அளித்த உதவித்தொகைகளைப் பெற்றுப் பல மாற்றுத்திறனாளி பாராலிம்பிக் வீரர்கள் ஜெர்மன், ஆஸ்திரேலியா வரை சென்று சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி என்று பதக்கங்களைப் பெற்றுத் திரும்பி உள்ளனர்.
இவர் அமைச்சராகும் வரை பாராலிம்பிக் வீரர்களைப் பாரா முகம் கொண்டே விளையாட்டுத்துறை அணுகிவந்தது என்று நாம் சொல்லவில்லை... அந்த வீரர்களே கண்ணீர் மல்கப் பேட்டி அளித்துள்ளனர்.

சம்பவம் 8: மாற்றுத்திறனாளி வீரர்கள் பதக்கங்களை வென்று சாதித்ததற்காக அரசு வேலை வாய்ப்பும் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் 9: சைக்கிளிங் போட்டியில் கலந்துகொள்வதற்காக வீராங்கனை தபித்தா, அமைச்சர் உதயநிதியைச் சந்தித்து உதவிக் கோருகிறார். சைக்கிள் என்றால் சும்மா இல்லை. 14 லட்ச ரூபாய் சைக்கிளை வாங்கி பரிசாக வழங்கினார் உதயநிதி.
அடுத்து ஒரு நிகழ்வு. சாதிக்கத் துடிக்கும் சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த சாய் பிரஜன் கனவை நிறைவேற்றுவதற்காக 2,20,000 ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிறார். International Track Cycling போட்டியில் கலந்துகொள்ள இருந்த கெளரி மிஸ்ராவுக்கு 10 லட்ச ரூபாய்க்குக் காசோலை வழங்கினார்.

சைக்கிளிங் வீராங்கனை பூஜா ஸ்வேதா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக Carbon Frame, Carbon Wheel வாங்குவதற்கு ரூ.12,30,000-க்கான காசோலையை வழங்கினார்.
வெறும் விளையாட்டுத்துறை சார்ந்த பட்டியல்கள்தான் இவை. இன்னும் இளைஞர் நலன் இருக்கிறது.
சம்பவம் 10: இவர் அமைச்சராக வந்த பிறகு சுய உதவிக்குழு பெண்கள் புதிய சாதனைகளைப் படைத்துள்ளனர். இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி, கார் ஓட்டுநர் பயிற்சி போன்றவற்றுக்கு ஆறே மாதங்களில் 10.44 ஆயிரம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது.

எந்த ஆட்சியில் ஒரு அமைச்சர் இந்த மாதிரியான உதவியைச் செய்திருக்கிறார்? இப்படி முன்மாதிரிகளே இல்லாத ஒரு முன்னோடியாக உதயநிதி செய்த சாதனைகள் இந்த ஒரு ஆண்டில் பல.
இன்றைக்கு எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாடு என்பது ஆல் ரவுண்டர் ஸ்டேட் ஆக மாறி இருக்கிறது. அதற்கு ஒரே காரணம், மனம் உடைந்து கிடந்த விளையாட்டு வீரர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை உருவாக்கி உள்ள உதயநிதி ஸ்டாலின்தான்!












Click it and Unblock the Notifications