முழு பொறுப்பை ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்.. கடைசி நேரத்தில் இடைத்தேர்தல் ஆட்டத்தை மாற்றிய திமுக!
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக இடைத்தேர்தல் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக பரந்தாமனையும், தாராபுரம் தொகுதி வேட்பாளராக சுகன்யாவையும் திமுக களமிறக்கியுள்ளது. முதலில் திமுக தேர்தலை புறக்கணிப்பதாக பேச்சுகள் எழுந்த நிலையில், கடைசி நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் காய்களை நகர்த்தி ஆட்டத்தை மாற்றி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்து திமுக பந்தயத்தை தொடங்கி வைத்திருக்கிறது. மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக பரந்தாமனையும், தாராபுரம் தொகுதி வேட்பாளராக சுகன்யாவையும் திமுக அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்கலாமா என்று ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியது. திமுக புறக்கணித்தால், தவெக vs அதிமுக என்று போட்டி உருவாகும். பாஜகவை நேரடியாக விமர்சிக்க வேண்டிய தேவை விஜய்க்கு வரும்.. அதேபோல் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை சாட வேண்டிய சூழலும் தவெகவுக்கு உருவாகும் என்று பார்க்கப்பட்டது.
திமுகவுக்கு இந்த தேர்தலில் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் இப்படியான ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியான நிலையிலேயே, உதயநிதி ஸ்டாலின் கொந்தளித்திருக்கிறார். இந்த தேர்தலை புறக்கணித்தால் ஒரே தேர்தலில் திமுக அஞ்சி நடுங்கிவிட்டது என்று ஊர் ஊராக பேசுவார்கள். புறக்கணிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை என்று நேரடியாகவே கூறியுள்ளார்.
இதன்பின் மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக விசிகவில் இருந்து அண்மையில் திமுக பக்கம் வந்த பனையூர் பாபுவையும், தாராபுரம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரை நிறுத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால் பனையூர் பாபு இப்போதுதான் கட்சிக்குள் வந்துள்ளார். உடனடியாக அவருக்கு வாய்ப்பு அளிப்பது தொண்டர்களிடையே விரக்தியை ஏற்படுத்தும்.
அதனால் சட்டசபைத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பரந்தாமன் பெயரை உதயநிதி ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். இதற்கு திமுக தலைமையும், நிர்வாகிகளும் ஒப்புதல் கொடுத்துள்ளனர். மறுபக்கம் கயல்விழி செல்வராஜ்க்கு கட்சியில் இருக்கும் எதிர்ப்பு காரணமாக, மகளிரணி நிர்வாகியான சுகன்யாவை நிறுத்தலாம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் ஆதரவாளர் என்பதால், அவர் தரப்பிலும் எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்கப்படவில்லை. உதயநிதி ஸ்டாலின் இவ்வளவு வேகம் காட்டியதோடு மட்டுமல்லாமல், இடைத்தேர்தல் பொறுப்பையும் கேட்டு பெற்றுள்ளார். இந்த தேர்தலில் தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஆனால் திமுக வென்றால், உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய பூஸ்ட் அக்கட்சியினருக்கு கிடைக்கும். அதேபோல் மறுசீரமைப்பில் இளைஞரணி நிர்வாகிகளை உதயநிதி ஸ்டாலினால் அதிகளவில் பதவிக்கு கொண்டு வர முடியும். இதனால் உதயநிதி ஸ்டாலின் இந்த இடைத்தேர்தலை தனக்கான வாய்ப்பாக பார்ப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications
