எஸ்பிபி குரலில் ‛ஆயிரம் கவி சொன்னேன்’.. வைரமுத்துவின் நாட்படு தேறல் 2ம் பருவ பாடல்! இன்று வெளியீடு
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2 பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 ல் துவங்கியது. மகன் மீதான தாய்ப்பாசம் குறித்த வைரமுத்துவின் வரிகளில் எஸ்பிபி குரலில் ‛ஆயிரம் தான் கவி சொன்னேன்' பாடல் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் சிறந்த கவிஞர், பாடலாசிரியராக திகழ்பவர் தான் கவிப்பேரரசு வைரமுத்து. இவர் நாட்படு தேறல் என்ற பெயரில் வாரம் ஒரு பாடல் வீதம் 100 பாடல்கள் உருவாக்கி வெளியிட முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தார்.
அதன்படி 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்துவின் 100 பாடல்கள் வெளிவர உள்ளது. நாட்படு தேறல் ஒன்று பாட்டுத்தொடர் முடிவடைந்த நிலையில் நாட்படு தேறல் 2 பாட்டுத்தொடர் பணிகள் நடந்து வந்தன. இந்த நாட்படு தேறல் பருவம் 2க்கான பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் கலைஞர், இசையருவி சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 2வது பாடல்
கடந்த வாரம் முதல் பாடல் வெளியான நிலையில் இன்று 2வது பாடல் வெளியாக உள்ளது. மகன் மீதான தாய்ப்பாசம் குறித்த ‛ஆயிரம் தான் கவிசொன்னேன்' எனும் பாடல் வெளியாகிறது. இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இனியவன் இசையமைத்துள்ளார். பாடலை இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

பாடல் வரிகள்
இதுகுறித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்த பாடலுக்கான வரிகளை அவர் வெளியிட்டு இருந்தார். பாடல் வரிகள் வருமாறு:
ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய்சொன்னேன்
பெத்தவளே உன்பெருமை
ஒத்தவரி சொல்லலையே
காத்தெல்லாலாம் மகன் பாட்டு
காகிதத்தில் அவனெழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
உன்கீர்த்தி எழுதலையே
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய் பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ
கதகதன்னு களிகிண்டிக்
களிக்குள்ளே குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கந்து தருவாயே
தொண்டையில அது இறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா
வறுமையில நாமபட்ட
விதாங் மாட்டாம
பேனா நான்எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்
கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போனபின்னே
அஞ்சாறு வருஷம் - உன்
ஆசை முகம் பாக்காம
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே
பாசம் உள்ள வேளையிலே
காசு பம் கூடலையே
காசு வந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே
வைகையில் ஊர்முழுக
வலலூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரை சேர்த்து விட்டவளே
எனக்கொண் ஆனதுன்னா
உனக்கு வேற பிள்ளை உண்டு
உனக்கேதும் ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா?
என இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளது.

பாடல்கள் என்னென்ன
ரோஜாவே தமிழ் பேசு..., அன்னம்மா பெத்தவளே ஆடு மேய்க்க போனவளே அந்தி மசங்கும் முன்னே ஆட வந்த மாயம் என்ன..., கனா கண்டேன்.., என்னைக்கு பொண்டாட்டி என்னை விட்டு போனாலே அன்னைக்கே என்படுக்கை திண்ணைக்கு வந்திடுச்சி..., ஆயிரம் தான் கவி சொன்னேன் அழகழகா பொய் சொன்னேன்... ஒவ்வொரு நாளும் உலகை திறக்கும் உதய கதிரே வணக்கம்.., கூந்தல் மேகம் ஒன்று கொண்டை ஏறி நின்று என பாடல்கள் அமைந்துள்ளன. இந்த பாடல்களில் தாய்ப்பாசம், காதல், மனைவியின் பிரிவு உள்பட பல்வேறு கருப்பொருட்களுடன் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலாக தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.

இயக்குனர்கள் யார் யார்
முன்னதாக இந்த நாட்படுத்தேறல் 2ம் பருவத்தை பொறுத்தமட்டில் ஏற்கனவே பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாடல் காட்சிகளை இயக்குனர் சிம்புதேவன், ‛மதயானைக்கூட்டம்' விக்ரம் சுகுமாறன், ‛பைரவா' பரதன், ‛சிட்டிசன்' சரவண சுப்பையா, ‛க/பெ ரண சிங்கம்' விருமாண்டி, இயக்குனர் தளபதி பிரபு, ரமேஷ் தமிழ்மணி, சரண், காந்தி கிருஷ்ணா, நடன இயக்குனர் ராதிகா, தேன்கணேஷ் விநாயகன், ‛காக்கா முட்டை' மணிகண்டன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.

இசையமைப்பாளர்கள் யார் யார்
பாடல்களுக்கு இசையமைப்பாளர்களாக வித்யாசாகர், யுவன் சங்கர்ராஜா, ஜிவி பிரகாஷ், ரமேஷ் விநாயகம், அனில் சீனிவாசன், சைமன் கே கிங், நவ்பல் ராஜா, அவ்கத், ரமேஷ் தமிழ்மணி, ஜெரார்ட் பெலிக்ஸ், வாகு மசான், இனியவன் உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர். மேலும் எஸ்பி பாலசுப்பிரமணியம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிணி, கல்பனா, வைக்கம் விஜயலட்சுமி, விஜய் யேசுதாஸ், ஹரிசரண், பென்னிதயாள் உள்ளிட்டவர்கள் பாடல்களை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் வாழ்த்து
மேலும் இன்னொரு பதிவில் கவிஞர் வைரமுத்து, அவ்வைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில், ‛‛இன்று அறிவுப்பெருந்தகை அவ்வைக்கு அகவை 87. அண்ணா நகரில் சந்தித்தேன். அவர் தம் தமிழ் பற்றில் தங்கத்தின் வலிமை தமிழ்ப் பொழிவில் பட்டின் மென்மை இரண்டின் குறியீடாய் பொன்னும் பட்டும் பூட்டி மகிழ்ந்தேன்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications