தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ஐ கொண்டாட தமிழக அரசுக்கு கி.வீரமணி, சுப.வீ வலியுறுத்தல்
சென்னை: சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியையே தமிழ்நாடு நாள் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக கொண்டாட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: ஆச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநில பிரதமராக இருந்தபோது இந்தித் திணிப்புக் குறித்து வாய் திறந்த நாள் 10.8.1937 - இந்தி அதிகாரப்பூர்வமாகப் புகுத்தப்பட்ட நாள் 21.4.1938. இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற எரிமலை வெடித்து அனல் குழம்புகளை வாரி இறைத்த நாள் 3.6.1938.
இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழர் பெரும் படை திருச்சி உறையூரில், அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்களை படைச் சேனாதிபதியாகக் கொண்டு புறப்பட்ட நாள் 1.8.1938. நூறு இளைஞர்கள் போர்ச் சங்கு ஊதிப் புறப்பட்டனர். 42 நாள்கள் நடந்தனர். கடந்து வந்த தூரமோ 577 மைல்கள் - 234 கிராமங்கள். வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் இந்தி எதிர்ப்புப் போர் முரசம். படை, தலைநகரமாம் சென்னையில் புகுந்தது - செப்டம்பர் 11. ஆம் நாள் அன்று மாலை சென்னை கடற்கரையில் 15,000 தமிழர்கள் திரண்டு வாழ்த்துகளை வானிடிந்து வீழ்ந்ததோ என்று முழக்கமிட்டு வரவேற்றனர். மாலை 5 மணிக்குத் தொடங்கப்பட்ட வரவேற்புப் பொதுக்கூட்டம் இரவு ஒரு மணிவரை நீண்டது. உரை வீச்சுகள் அல்ல அவை - உணர்வின் பிளிறல் - கத்தும் கடலை வாயடைத்த போர்க்குரல்!
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் முழங்கப்பட்ட முதல் குரல்தான் ''தமிழ்நாடு தமிழருக்கே!'' என்பதாகும். அந்தக் குரல் வேறு யார் குரலாக இருக்க முடியும் - தந்தை பெரியார் குரலைத் தவிர! ஆச்சாரியாரின் இந்தித் திணிப்பு - தமிழ் மண்ணில் மொழி உணர்வையும், இன உணர்வையும் தட்டி எழுப்பியது. அன்றைக்குப் பெயர் சென்னை மாநிலம்தான். அதற்கு அதிகாரப்பூர்வமாக ''தமிழ்நாடு'' என்ற பெயர் சூட்டப்பட்ட நாள் 18.7.1967.

மொழிவாரி மாநில பிரிப்பு
தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டவேண்டும் என்று 1955 அக்டோபரில் தந்தை பெரியார் கோரிக்கை விடுத்தார். மொழி வழி மாநிலம் 1956 நவம்பர் முதல் தேதியன்று உருவானது; அப்போது வந்தது 'சென்னை ராஜ்ஜியமே' - மதராஸ் ஸ்டேட் (Madras State) என்ற நிலைதான். 1956 அக்டோபரில் தியாகி சங்கரலிங்கனார் பட்டினிப் போர் நடத்தி, அதற்காகவே உயிர் துறந்தார். அதுபற்றி 'விடுதலை'யில் தொடர்ந்து தந்தை பெரியார் அறிக்கைகள், தலையங்கங்கள்மூலம் வற்புறுத்தியே வந்தார். 1961 இல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பூபேஷ் குப்தா அவர்கள் 'தமிழ்நாடு' என்றே பெயரிட்டு, அம்மாநிலத்தை அழைக்க தனி நபர் மசோதா (Private Member Bill) தாக்கல் செய்தார். மாநிலங்களவைக்குச் சென்ற அறிஞர் அண்ணா, அங்கே எழுப்பிய முதல் முழக்கம் ''Call my State TAMIL NADU'' என்பதாகும். அத்தலைப்பில் விரிவானதோர் முழக்கத்தின்மூலம் கோரிக்கை வைத்தார். எனது மாநிலத்தை ''தமிழ்நாடு'' என்றே அழையுங்கள் என்றார் அண்ணா.

தமிழ்நாடு பெயர் சூட்டிய அண்ணா
அதன் பிறகு ''திராவிட ஆட்சி'' அண்ணா தலைமையில் அமைந்ததின் விளைவாகவே 18.7.1967 இல் முதலமைச்சர் அண்ணாவே தனி மசோதா கொண்டு வந்து, அதை சட்டமாக்கினார் - ஒருமனதாக அச்சட்டம் நிறைவேறியது. ''தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்பட்ட அந்நாள் (18.7.1967) வரலாற்றில் போற்றத்தகுந்த பொன்னாளாகும். ''தமிழ்நாடு'' - என்று முதலமைச்சர் அண்ணா முன்மொழிய, உறுப்பினர்கள் அனைவரும் ''வாழ்க'' என்று மும்முறை வாழ்த்தொலியை எழுப்பினர். ''தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஐ திருவிழா நாளாகக் கொண்டாடுவதுதான் வரலாற்று ரீதியாக பொருத்தமானதாக இருக்க முடியும். நவம்பர் முதல் தேதி என்பது சென்னை மாநிலத்திலிருந்து சில பகுதிகள் பிரிந்து சென்ற நாளாகும்; அது வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள்தான் என்றாலும், சென்னை மாநிலமாக இருந்ததை ''தமிழ்நாடு'' என்று ஆட்சி ரீதியாகப் பெயர் சூட்டப்பட்ட நாள்தான் - நாம் மகிழ்ந்து கொண்டாடுவதற்குரிய வரலாற்றுத் திருநாளாக இருக்க முடியும். இதில் நமக்குள் கருத்து வேறுபாடு - மாறுபாடுகள் கொள்ளவேண்டிய அவசியமில்லை.

ஜூலை 18 ஐ கொண்டாடுவோம்
தமிழ்நாடு அரசே ''தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்பட்ட நாளினை அதிகாரப்பூர்வமாக கொண்டாடவேண்டும் என்று அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம் - வலியுறுத்துவோம்! தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை - நாம் வலியுறுத்தித்தான் இதனைச் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. தி.மு.க. ஆட்சியில் அண்ணா முதலமைச்சராக இருந்து நிறைவேற்றிய ஒன்றை கொண்டாடுவது என்பது தி.மு.க. ஆட்சியின் இயல்பான எண்ணமாகவும், எழுச்சியாகவும் இருக்க முடியும் - இருக்கும்! 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இதிலும் தன்னுடைய வரலாற்று முத்திரையைப் பொறிப்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது - இதனை உறுதியாக நம்புவோம்! இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு சுப.வீ கோரிக்கை
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: மாநில மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கையின்படி, அன்றைய இந்திய ஒன்றிய அரசு, 1956 நவம்பர் 1 ஆம் நாள், இந்தியாவைப் பல்வேறு மொழிவாரி மாநிலங்களகாகப் பிரித்தது. அதன் அடிப்படையில், முந்தைய தமிழ்நாடு அரசு, நவம்பர் ஒன்றாம் தேதியைத் தமிழ்நாடு நாள்" என்று அறிவித்தது! இந்த அறிவிப்பை இன்று புதிதாகப் பதவியேற்றுள்ள நம் தமிழ்நாடு அரசு மறு ஆய்வு செய்திடவேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

எல்லை போராட்ட தியாகிகள்
1956 நவம்பர் 1-ஆம் நாள் உருவாக்கப்பட்ட மொழிவாரி மாநில அமைப்பை நாம் ஏற்கின்றோம். அதுசரியான முடிவே! எனினும், அந்தநாளில் தமிழ்நாடு பெற்றதை விட இழந்ததே மிகுதி! பழைய சென்னைத் தலைமாகாணம் இன்றுள்ள தமிழ்நாட்டை விட மிகவும் விரிந்து பரந்தது. இன்று கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல பகுதிகள் அன்று சென்னைத் தலைமாகாணத்தில் இருந்தன. இன்றைய ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் ஒரு பகுதிகூட அன்று நம்முடன் இருந்தது. எல்லைகள் பிரிக்கப்பட்டபோது, நம் மண்ணின் பல பகுதிகளை அண்டை மாநிலங்களிடம் நாம் இழந்துவிட்டோம். எனவே அந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை என்பதே உண்மை! அந்த நாளில் எல்லைப் போராட்டத் தியாகிகளை நாம் நினைவு கூர்ந்து பாராட்டலாம். அவ்வளவே!

ஜூலை 18தான் பொருத்தம்
அப்படியானால் தமிழ்நாடு நாள் என்னும் பெயரும், கொண்டாடட்டமும் எந்த நாளுக்குப் பொருந்தும்? தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் 1955 அக்டோபர் மாதம் கோரிக்கை விடுத்தார். அதே கோரிக்கையை முன்வைத்து, தியாகி சங்கரலிங்கனார் பட்டினிப் போர் நடத்தி 1956 அக்டோபரில் உயிர் துறந்தார். பெயர் மாற்றத்தை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில், திமுகழகமும் வேறு சில கட்சிகளும் பலமுறை தீர்மானங்களை முன்மொழிந்தன. பிறகு நாடாளுமன்றத்தில், பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் குப்தா அதே தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது, அறிஞர் அண்ணா மகிழ்ந்து வரவேற்று மாநிலங்களவையில் உரையாற்றினார். இறுதியாக, தி.மு.க. ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபின்பு, 1967ஜூலை 18 அன்று, முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் முன்மொழிய அத்தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டவடிவத்தையும் பெற்றது! எனவே தமிழ்நாடு நாள் என்ற பெயரில் நாம் கொண்டாட வேண்டிய நாள் ஜூலை 18 தான்! தாய்க்குத் தலைமகன் பெயர் சூட்டிய திருநாள் அதுதான்! திராவிட இயக்கம், தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டிப் பெருமையடைய வைத்த நாள் அதுதான்! எனவே இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 ஆம் நாளைத் தமிழ்நாடு நாள் என்று தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்த நாள் நமக்கு மகிழ்வூட்டும்! தமிழ் உணர்வூட்டும்!! இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications