வேலம்மாள் பாட்டி நினைவிருக்கா.. டிரெண்டிங் சிரிப்பால் கவர்ந்தவர்.. உடல்நலக்குறைவால் காலமானார்!
சென்னை: கடந்த 2021இல் கொரோனா அலையின் போது தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.2000 நிவாரணத் தொகையைப் பெறும் போது எடுக்கப்பட்ட போட்டோ மூலம் பிரபலமான வேலம்மாள் பாட்டி உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
கொரோனா உச்சத்தில் இருந்த போது அனைவரும் வீடுகளிலேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது ஏழை, நடுத்தர மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக 2021இல் இரண்டாம் அலை சமயத்தில் பாதிப்புகள் ரொம்பவே மோசமாக இருந்தது.

அப்போது திமுக அரசு 4000 ரூபாய் கொரோனா நிவாரண தொகையை அறிவித்திருந்தது. தமிழ்நாடு அரசு கொடுத்த நிவாரணத் தொகை அந்த சமயத்தில் பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவியது.
இந்த நிவாரண தொகை இரண்டு கட்டமாக வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2021 ஜூன் மாதம் நிவாரண தொகை வழங்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் தலா ரூ.2,000 நிவாரணத் தொகையும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த தொகுப்பையும் உதவித் தொகையையும் பெற்ற வேலம்மாள் பாட்டி சிரித்தபடி நின்ற ஃபோட்டோ அப்போது இணையத்தில் டிரெண்டானது. அவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து இருக்கும் கீழக்கருங்குடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் 92 வயதான வேலம்மாள் பாட்டி ஆவர். இந்த ஃபோட்டோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அப்போது தனது ட்விட்டரில் பகிர்ந்து, "ஏழையின் சிரிப்பு, நமது அரசின் சிறப்பு" எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும், தனக்கு வசிக்க வீடு இல்லை எனவும், தமிழக அரசு சார்பில் தனக்கு வீடு வழங்க வேண்டும் என்றும் வேலம்மாள் பாட்டி கோரிக்கை விடுத்திருந்தார். பிறகு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்ற போது, வேலம்மாள் பாட்டியை நேரிலும் சந்தித்திருந்தார். அப்போது முதல்வரிடமும் வேலம்மாள் பாட்டி தனக்கு அரசு வீடு கட்டி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு மறுநாளே அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்படி ஒரே ஒரு ஃபோட்டோ மூலம் வேலம்மாள் பாட்டியின் வாழ்க்கையே மாறியது. அவர் கடைசிக் காலத்தில் நிம்மதியாக இருக்க முடிந்தது. இதற்கிடையே வேலம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.
வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் வேலம்மாள் பாட்டி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் வீட்டுக்கே அழைத்து வந்தும் கவனித்துள்ளனர். இந்தச் சூழலில் தான் நேற்று இரவு 10 மணியளவில் வேலம்மாள் பாட்டி காலமானார். முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய வீட்டிலேயே அவர் காலமானார். இன்று மாலை அவர் வசித்த கீழக்கருங்குடி பகுதியில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications