முதல் வெளிநாடு பயணத்திலேயே.. 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு! மு.க.ஸ்டாலின் போல சாதிப்பாரா விஜய்?
சென்னை: கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முதல் வெளிநாடு பயணத்தின்போது 14,700 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்திருக்கிறார். இந்நிலையில் இன்று முதலமைச்சர் விஜய், முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்கிறார். அவர் மு.க.ஸ்டாலினை போல அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அளவுக்கு முதலீடுகளை ஈர்ப்பாரா? என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது.
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வது ஆகியவை முதல்வர் விஜய்யின் பயண நோக்கமாகும்.

இன்றிரவு சுமார் 10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து, எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக அவர் லண்டன் புறப்படுகிறார். செப்.10-16 வரை லண்டனில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு ஐரோப்பிய நாட்டுத் தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார். செப்.17 அதிகாலை மீண்டும் சென்னை திரும்புகிறார். இதுதான் அவரின் பயண திட்டம்.
எல்லாம் ஓகேதான். ஆனால் அவர் எந்த அளவுக்கு முதலீடுகளை கொண்டு வருகிறார்? வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பங்களுக்கு மத்தியில், இவர் கொண்டுவரும் முதலீடுகள் எவ்வளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்? என்பதும் கேள்வியாக இருக்கிறது.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த காலத்தில், முதன்முறையாக அரசுமுறைப்பயணமாக 2022ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரசு அமீரகத்திற்கு சென்றார். அங்கு துபாய் எக்ஸ்போ நிகழ்வில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தினார். மொத்தமாக இந்த பயணத்தில் அவர் ரூ.6,100 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்தார்.
- லுலு குரூப்: ரூ.3,500 கோடி
- நோபல் ஸ்டீல்ஸ்: 1,000 கோடி
- ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர்: 500 கோடி
- ஷெராஃப் குரூப்: 500 கோடி
- ஒயிட் ஹவுஸ் டெக்ஸ்டைல்ஸ்: 500 கோடி
- டிரான்ஸ்வேர்ல்டு குரூப்: 100 கோடி
இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் அனைத்தும் துபாய் எக்ஸ்போ நிகழ்வின்போது கையெழுத்தாகின. விஜய் பயணத்தில் இதே அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படுமா? அல்லது இதை விட கூடுதலாக முதலீடுகள் ஈர்க்கப்படுமா? என்று பலரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
