கரூர் வழக்கு.. டெல்லிக்கு கூப்பிடும் சிபிஐ! விஜய் ஆஜராவது சந்தேகம்தான்
சென்னை: கரூர் நெரிசல் பலி வழக்கில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விஜய், ஆஜராக மாட்டார் என்று தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். இதில் முக்கியமானதுதான் கரூர் நெரிசல் பலி சம்பவம். இது தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கெனவே சிபிஐ விசாரணைக்கு டெல்லியில் ஆஜராகியிருந்தார். தற்போது மீண்டும் விசாரணைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

என்ன நடந்தது?
கரூர் வேலூச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றிருந்தார். அவரை பார்க்க மக்கள் கூட்டம் அதிக அளவில் திரண்டதாலும், குறிப்பிட்ட நேரத்தை விட சில மணி நேரம் கழித்து தாமதமாக விஜய் வந்ததாலும் நெரிசல் ஏற்பட்டு மக்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், விஜய்யின் செயல்பாடுகள் குறித்து சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது.
விசாரணைக்கு அழைப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், பாஜக-அதிமுக தலைமையிலான கூட்டணி ஒருபுறம், திமுக தலைமையிலான கூட்டணி மற்றொரு புறம் என, களம் இரு துருவங்களாக பிரிந்திருக்கிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இதில் எதிலும் சேரவில்லை. இப்படி இருக்கையில்தான் சிபிஐ விசாரணயை டைட் செய்தது. டெல்லியில் இரண்டு நாட்கள் விஜய் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
பாஜக-அதிமுக தலைமையிலான கூட்டணியில் விஜய்யை இணைக்கவே, சிபிஐ விசாரணையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆஜராக மாட்டார்
இருப்பினும் இந்த விசாரணையில் விஜய் ஆஜராக மாட்டார் என்று தவெக தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், நாளை முதல் தவெக வேட்பாளர் நேர்காணல் தொடங்க உள்ளதால் விஜய் ஆஜராக மாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆஜராவதிலிருந்து விலக்கு பெற வழக்கறிஞர் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
என்ன காரணம்?
சமீபத்தில்தான் தவெக விருப்பமணு விநியோகம் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை தவெக வெளியிட உள்ளது. இந்த பட்டியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும், தொழிலதிபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் தவெக வேட்பாளர் நேர்காணல் நாளை முதல் நடைபெறுகிறது. எனவே விஜய் நாளை ஆஜராக மாட்டார் என நிர்வாகிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications