Karur stampede: தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்ல முடிவு.. போலீசாரிடம் அனுமதி கோர திட்டம்?
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று பரப்புரை முடிந்த பிறகு எங்கும் நிற்காமல் நேராக தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை சென்றடைந்தார். இங்கு மக்கள் 40 பேர் உயிரிழந்து இருந்தாலும் விஜய் 3 மணி நேரம் கழித்தே ஆறுதல் ட்வீட்டை போட்டிருந்தார். இருந்தபோதிலும் விஜய் கரூரில் இருக்காமல் சென்னை சென்றதை பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் விஜய் கரூருக்கு நேரில் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். நாமக்கல்லில் காலை 8.30 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி கொடுத்திருந்த நிலையில் விஜய் 12 மணியளவில் தான் பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து கரூருக்கு 12 மணி என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் விஜய் இரவு 7 மணியளவில் தான் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது. விஜய் வந்ததுமே அங்கு மின் தடை செய்யப்பட்டது. விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சிலர் மயக்கமடைந்ததாகவும் கூறப்பட்டது.
விஜய்யும் அவர்களுக்கு தண்ணீர் கேன் வழங்கினார். பின்னர் விஜய் பரப்புரையை முடித்துக்கொண்டு கிளம்பியதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் என 40 பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மருத்துவமனைக்கு உடனடியாக செந்தில் பாலாஜி விரைந்தார்.
இதேபோன்று திமுக அமைச்சர்களும் கரூர் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதற்கொண்டு தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரும் கரூர் மருத்துவமனைக்கு வரவில்லை. விஜய் கரூரில் மக்களை சந்திக்கவோ.. இரங்கல் தெரிவிக்கவோ.. தொண்டர்களை மருத்துவமனைக்கு அனுப்பி உதவி செய்யவோ நினைக்கவில்லை.. நேராக திருச்சி விமான நிலையம் சென்றார்.
கரூர் மரணத்திற்கு சென்னை செல்லும் வரை ஒரு இரங்கல் போஸ்ட் கூட விஜய் செய்யவில்லை. திருச்சி விமான நிலையதில் செய்தியாளர்களை கூட சந்திக்காமல் சென்றிருந்தார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சென்னை சென்ற பின் விஜய், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.என்று ட்வீட் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேச போலீசாரிடம் அனுமதி கேட்க முடிவு செய்து இருப்பதாகவும், விரைவில் கரூருக்கு நேரில் வர விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications