மேடம் இது ஆக்சன் மேடம்.. ’ஸ்டார்ட் கேமரா’ அரசியல் செய்கிறார் விஜய்? நல்லகண்ணு மரணத்தில் பாலிடிக்ஸா?
சென்னை: தொடர்ந்து விமர்சன வளையத்துக்குள் சிக்கி தவித்து வருகிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் மலேசியாவில் நடனமாடி விட்டு வேலூரில் திடீரென கண்ணீர் வடித்த விஜய், இப்போது நல்லகண்ணுவின் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியிருக்கிறார். ஆனால் 41 பேரின் குடும்பங்களை சந்திக்க விஜய் நேரில் செல்லாதது ஏன்? என கேள்வி எழுப்பும் அரசியல் பார்வையாளர்கள், விஜய் முழுக்க முழுக்க 'சினிமா அரசியல்' செய்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு தனது 101வது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் பொதுமக்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று நல்ல கண்ணுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னதாக ட்விட்டரில் இரங்கல் செய்தியும் வெளியிட்டிருந்தார்.

விஜய் அரசியல் விமர்சனம்
இந்த நிலையில் தான் ட்விட்டர் செய்திக்கு விமர்சனங்கள் வந்த நிலையில் அதனை சமாளிக்கவே விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதாக விமர்சனக் கணைகள் தொடுக்கப்படுகிறது. சமீபத்தில் வேலூரில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்ற போது உணர்ச்சி பிளம்பாக வெடித்து பேசினார் விஜய். 'நான் உங்கள் நண்பர் என்றால் கரூர் சம்பவத்தில் என் மீது ஏன் பழியை தூக்கி போட்டீர்கள்' என எமோஷனலாக பேசிய விஜய். 'எனக்கும் மக்களுக்கும் இருக்கும் உறவை பிரிக்க முடியாது' என ஆவேசமானார்.
நல்லகண்ணு மறைவு
மேலும் சில நொடிகள் பேச முடியாமல் நிற்பது போல் நின்று கண்ணில் கண்ணீர் வடிய போஸ் கொடுத்தார். செப்டம்பர் மாதம் கரூர் துயர சம்பவம் நடைபெற்ற நிலையில் 41 பேரின் உயிர்கள் பறிபோனது. ஆனால் அதற்குப் பிறகு மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடனமாடி பக்கம் பக்கமாக வசனம் பேசிய விஜய், கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு வேலூரில் திடீரென கண்ணீர் வடிப்பது சினிமா அரசியல் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சினிமா அரசியல்
விஜயகாந்த், நல்லகண்ணு ஆகியோரின் மரணத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த விஜய், அவர்கள் உடல் நலக்குறைவோடு சிகிச்சை பெற்று வந்தபோது ஏன் நேரில் சந்திக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். நல்லகண்ணு மரணத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த விஜய், அவரை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி சிதைந்து மூச்சு திணறி பலியான பிஞ்சுக் குழந்தைகள் உள்ளிட்டோரின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்காமல் அவர்கள் அனைவரையும் அவரது வீட்டுக்கு வரவழைத்து ஆறுதல் சொன்னார். அதுவும் மிகவும் தாமதமாக என்ற விமர்சனத்தையும் முன்வைக்கின்றனர்.
ஊடக கவனம்
தன்னைப் பற்றி ஊடகங்கள் பேச வேண்டும், தன்னை பற்றி மட்டுமே ஊடகங்கள் பேச வேண்டும் என விஜய் நினைக்கிறாரா என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. சினிமாவில் அரசியலை கலக்கலாம் ஆனால் அரசியலில் சினிமா தனத்தை கலப்பது விஜயின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. 'ஆக்சன் கட்' அரசியலை விட்டுவிட்டு கள அரசியலுக்கு விஜய் திரும்ப வேண்டும். நல்லது கெட்டது என எது இருந்தாலும் முழு மனதோடு மக்களைச் சந்திக்க வேண்டும் என்ற உணர்வோடு விஜய் வரும்வரை அவரது சினிமா பயணம், அரசியலிலும் தொடர்வதாகவே கருதப்படும் என்று குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications