ஆகா.. ஒன்னு கூடிட்டாங்களே! விஜய்க்காக விட்டுக் கொடுத்த அன்புமணி! முஸ்தபா முஸ்தபா பாடும் பாமக - தவெக!
சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைய இருப்பதாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியும் அமையலாம் என ஒரு சில யூகங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. விஜய்க்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இணக்கமான சூழல் நிலவுகிறது என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அன்புமணி ராமதாஸ், விஜய்க்காக தேதியை விட்டுக் கொடுத்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதனை உண்மையாக்கும் வகையில் இருக்கிறது. விஜய்க்காக விட்டுக் கொடுத்த அன்புமணி என சமூக வலைதளங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினரும் தமிழக வெற்றிக் கழகத்தினரும் அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரச் சுற்றுப்பயணம், மக்கள் சந்திப்பு என விதவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அரசு முறைப் பயணமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதோடு, திமுக நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட 130 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துவிட்டார். நான்காம் கட்டமாக அவரது சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிறது. இதேபோல தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் பிரச்சாரம்
பாஜக தரப்பில் அடுத்த மாதத்தில் இருந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்படி தலைவர்கள் அனைவரும் சூறாவளிச் சுற்றுப்பயணத்தைத் தற்போது தொடங்கி இருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம், காவல்துறையினருக்கும் தான் நெருக்கடி அதிகரித்துள்ளது. ஒரே நாளில் இரு தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டால் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும். பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாவார்கள் என்பதால் அனுமதி வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் காவல்துறை விதித்து வருகிறது.
கரூர் பிரச்சாரம்
இது ஒருபுறம் இருக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மூன்றாவது வாரமாக இந்த சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்ளத் தேர்ந்தெடுத்திருப்பது கரூரை. வேலூரில் அவர் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கரூரில் முப்பெரும் விழா திமுக சார்பில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கரூரில் விஜய் பிரச்சாரம்
திருவாரூரில் கூட்டத்தை கூட்டிய விஜய், கரூரில் இதே போல கூட்டத்தை கூட்ட முடியுமா என திமுகவினர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், திடீரென விஜய் தனது சுற்றுப்பயண திட்டத்தை மாற்றி இருக்கிறார். அதன்படி, திமுக முப்பெரும் விழாவை நடத்திய கரூரில் 27ஆம் தேதி விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்தனர்.
அன்புமணி ராமதாஸ்
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அதே நாளில் அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் 'உரிமையை மீட்க, தலைமுறையை காக்க' முழக்கத்துடன் நடைபயணத்திற்கு அனுமதி பெற்று இருந்ததால், ஒரே நாளில் கரூர் மாவட்டத்தில் இரு முக்கிய தலைவர்கள் நிகழ்ச்சி நடைபெறுவதால் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் விஜயின் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
விட்டுக்கொடுத்த அன்புமணி
இந்த நிலையில், திடீர் திருப்பமாக விஜயின் பிரச்சாரத்திற்காக தனது நடைபயணத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார் அன்புமணி. விஜய்க்கு அனுமதி வழங்க காவல்துறை தாமதிப்பதை தெரிந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் தனது நடைபயணத்தை 27ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிக்கு அதாவது சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி உள்ளதால், விஜயின் பிரச்சாரத்திற்கு வழிவிடும் நோக்கிலேயே அன்புமணி ராமதாஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்கின்றனர். 'விஜய்க்கு விட்டுக்கொடுத்த அன்புமணி' என தமிழக வெற்றிக்கழகத்தினர் சமூக வலைத்தளங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications