"ஒரு தலைவர் என்பவர்.." விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி? பிக்பாஸ் சர்ச்சை.. விஜய் டிவி விளக்கம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி பேசியிருந்தது விவாதமானது. பலரும் அவர் விஜய்யையே விமர்சிப்பதாக சாடி வந்த நிலையில், இது தொடர்பாக விஜய் டிவி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. போட்டியில் இடம்பெறும் கருத்துகள் வெளியாட்களை குறிப்பிடும் வகையில் இல்லை என தெரிவித்துள்ளது.
விஜய் டிவியில் மிகவும் ஹிட் அடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனை நடிகர் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கி வருகிறார். இப்போது பிக்பாஸ் சீசன் 10' நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பிரபலங்கள் மட்டுமின்றி சராசரி நபர்களும் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

விஜய் சேதுபதி
வீக் எண்டில் தான் போட்டியாளர்களுடன் முதல்முறையாக விஜய் சேதுபதி கலந்துரையாடினார். அப்போது விஜய் சேதுபதி போட்டியாளர்களில் ஒருவரான ஷாதிகாவிடம் பேசியது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாந்து. அதாவது இந்த சீசனின் முதல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷாதிகாவிடம் தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி பேசியிருந்தார். அவரது கருத்துகள் அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
விஜய் சேதுபதி பேசுகையில், "தலைவர் என்றால் என்னன்னே தெரியாமல்.. தலைமைத்துவம் என்றால் என்னன்னு புரியாமல்.. வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும், பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழி போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு தலைவருக்கான தரம் இல்லை. அது ஏமாற்று வேலை" என திட்டியிருந்தார்.
விவாதம்
பிக்பாஸ் போட்டியாளரின் தலைமைத்துவத்தை விமர்சிக்கும் வகையில் விஜய் சேதுபதி இந்த கருத்தை தெரிவித்திருந்தாலும், அவரது பேச்சில் இடம்பெற்றுள்ள சில வார்த்தைகள் தற்போது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளன. விஜய் சேதுபதியின் பேச்சு, முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து விஜய் சேதுபதியின் பேச்சு தொடர்பாக ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் விஜய் சேதுபதி கூறுவதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்புகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இந்த பேச்சு அரசியல் விவாதமாகவும் மாறியுள்ளது.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்த கமல்ஹாசன் அரசியல்கட்சி தொடங்கி... தீவிர அரசியல் பேசிய காலத்தில் கூட... திமுக, அதிமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்த காலத்தில் கூட... விஜய் டிவி இப்படியொரு தனிப்பட்ட விளக்கம் கொடுக்கும் நிலை ஏற்படவில்லை... வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
விளக்கம்
சர்ச்சைக்கு மத்தியில் இது தொடர்பாக விஜய் டிவி விளக்கம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் "பிக்பாஸ் தமிழ் சீசன் 10 என்பது ஏற்கனவே கேம் சூழலின் அடிப்படையில் உருவாக்கப்படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழல்கள், உரையாடல்கள், மற்றும் போட்டியாளர்களுக்கு இடையேயான பேச்சுகள் ஆகியவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் எந்தவொரு கருத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்காத தனிநபர், அமைப்பு, நிறுவனம், கொள்கை அல்லது சூழ்நிலையை குறிப்பிடுவது, ஆதரிப்பதாக அல்லது விமர்சிப்பதாக என எடுத்து கொள்ளக்கூடாது.. எங்களின் நோக்கமும் அது அல்ல" என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு வந்தது
கடந்த சில நாட்களாகவே விஜய் சேதுபதியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. விஜய் சேதுபதி யாருடைய பிக்பாஸ் போட்டியாளரை நோக்கியே பேசியிருந்தார். அவர் வேறு யாருடைய பெயரையும் தனது பேச்சில் குறிப்பிடவில்லை என்றாலும் கூட அவர் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் சிலர் பதிவிட்டு வந்தனர். இந்தச் சூழலில் தான் விஜய் டிவி தரப்பில் இருந்தே இப்படியொரு விளக்கம் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications
