விஜய் அமைச்சரவையின் "பவர் சென்டர்" இவர்தானா? ஓய்வுபெற்ற டிஜிபி ரவியை வட்டமிடும் ஐபிஎஸ் அதிகாரிகள்
சென்னை: தமிழக தேர்தல் முடிவு, வெறும் ஆட்சி மாற்றத்தோடு நின்றுவிடாமல், தமிழகக் காவல் துறையின் அதிகார அடுக்குகளையும் ஆட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்க உள்ள நிலையில், விஜய்யின் வெற்றியை அன்றே துல்லியமாகக் கணித்த ஓய்வுபெற்ற டிஜிபி ரவி இப்போது அதிகாரிகளால் அதிகம் தேடப்படும் நபராக மாறியுள்ளார். குறிப்பாக, முக்கியப் பதவிகளைக் குறிவைக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ரவியின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ள திரைமறைவில் காய் நகர்த்தி வருகிறார்களாம். இது உண்மையா?
நடந்து முடிந்த இந்தத் தேர்தல் முடிவு, தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்ல, மாநில நிர்வாகத்திலும் இப்போது நேரடி மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

யாரும் எதிர்பாராத ஒரு சூழலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்க உள்ள நிலையில், அதிகார மட்டத்தில் புதிய சலசலப்புகள் ஆரம்பமாகியுள்ளன. குறிப்பாக, தேர்தலுக்கு முன்பே விஜய்யின் வெற்றியைத் துல்லியமாகச் சொன்ன ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ரவியை நோக்கி இப்போது பல அதிகாரிகளின் கவனம் திரும்பியிருக்கிறது.
42% துல்லியமாக சொன்ன ரவி
ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ரவி, தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட ஒரு வீடியோதான் இப்போது பேசுபொருளாக இருக்கிறது. சுமார் 2 லட்சம் பேரிடம் கள ஆய்வு செய்து, தவெக 41 சதவீத வாக்குகளுடன் தனிப் பெரும்பான்மை பெறும் என்று கூறியிருந்தார்.
அதேசமயம் "திமுகவில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் பேசுகிறார்", "கட்சி நிர்வாகியின் உறவினர் என்பதால் இப்படிச் சொல்கிறார்" என்றெல்லாம் ரவி மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால், தேர்தல் முடிவு வந்த பிறகு பார்த்தால், அவர் சொன்ன அந்தப் புள்ளிவிவரங்கள் கிட்டத்தட்ட கணக்குப்படி வந்திருக்கின்றன. இதன் காரணமாக, புதிய ஆட்சியின் அதிகார மையங்களுக்கு நெருக்கமான ஒருவராக ரவி இப்போது பார்க்கப்படுகிறார்.
ஐபிஎஸ் ஆபீசர்ஸ் ஏன் ரவியை நாடுகிறார்கள்
ஒரு புதிய ஆட்சி அமையும்போது, காவல்துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நடப்பது வழக்கம்தான். குறிப்பாக, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக அதிகாரிகளுக்குப் பதில், புதிய அரசுக்கு இணக்கமாக செயல்படக்கூடிய அதிகாரிகளை நியமிக்க முதல்வர் தரப்பு ஆலோசித்து வருகிறது. சென்னை, தாம்பரம் கமிஷனர்கள் தொடங்கி மாவட்ட எஸ்.பி-க்கள் வரை பெரிய லிஸ்ட் தயாராகி வருகிறதாம்.
இப்படிட்ட சூழலில், விஜய்யின் நம்பிக்கைக்குரிய வட்டாரத்தில் யாருடைய வார்த்தைக்கு மதிப்பு இருக்கும் என்று அதிகாரிகள் கணக்குப் போடுகிறார்கள். ரவியின் கணிப்பு உண்மையானதால், புதிய அரசின் காவல்துறை நியமனங்களில் அவருடைய ஆலோசனைகள் இடம்பெற வாய்ப்பிருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது.
அதனால்தான், முக்கியப் பொறுப்புகளை எதிர்பார்க்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இப்போது ரவியை அணுகுவதும், அவரோடு தொடர்பில் இருக்க முயற்சிப்பதுமாக ஒரு புதிய வட்டம் உருவாகி வருகிறது.
ஆட்சி மாற்றம் - அதிகாரிகள் மாற்றம்
ஒரு முன்னாள் அதிகாரி தேர்தல் முடிவுகளை இவ்வளவு துல்லியமாகக் கணித்தது, தற்போதைய அதிகாரிகளிடையே அவர் மீதான பார்வையை மாற்றியுள்ளது. பொதுவாக ஆட்சி மாற்றத்தின் போது அதிகாரிகளின் இடமாற்றம் என்பது நிர்வாக ரீதியானது என்றாலும், இந்த முறை ஒரு முன்னாள் உயர் அதிகாரி வழியாகப் பரிந்துரைகளைப் பெற முயற்சிப்பது விசித்திரமான சூழலை உருவாக்கியிருக்கிறது.
இது அதிகாரிகளிடையே இருக்கும் ஒருவித பதற்றத்தையும், தங்களுக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் தேவையையுமே பளிச்சென காட்டுகிறது.
விஜய் ஆட்சி
இருந்தாலும், ஒரு புதிய மாற்றத்தை நோக்கி வரும் அரசு, இதுபோன்ற தனிப்பட்ட நபர்களின் பரிந்துரைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது கேள்விக்குறிதான்.
அதுமட்டுமல்ல, நிர்வாகத் திறமை மற்றும் நேர்மையின் அடிப்படையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் மட்டுமே, தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை புதிய அரசால் நிறைவேற்ற முடியும். அதிகாரிகளின் இந்த திடீர் நகர்வுகள், புதிய ஆட்சியில் எத்தகைய மாற்றங்கள் வரப்போகின்றன என்பதற்கான ஒரு முன்னோட்டமாகவே தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!!












Click it and Unblock the Notifications