1,200 ஏக்கர் தண்ணீர்... ரன்வேயாக மாறும் ஏரிகள்: பரந்தூர் திட்டத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்து?
சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் சுமார் 26 சதவீதப் பகுதி நீர்நிலைகள் என்பது இப்போது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 1,200 ஏக்கர் பரப்பளவிலான ஏரி, குளங்களை மறித்து ரன்வே அமைப்பது, சென்னையை மீண்டும் ஒரு பெருவெள்ள அபாயத்திற்குள் தள்ளுமோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. தொழில்நுட்ப விளக்கங்களைத் தாண்டி, மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கையையும் காக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தத் திட்டம் இப்போது மீண்டும் ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பரந்தூர்... இந்தப் பெயரைச் சொன்னாலே காஞ்சிபுரம் மண்ணில் இப்போது ஒருவித படபடப்பு தொற்றிக்கொள்கிறது. வெறும் விமான நிலையம் வருவது பற்றிய செய்தியல்ல இது, சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவில் அமையப்போகும் இந்த 'மெகா' புராஜெக்ட், அந்தப் பகுதியில் இருக்கும் ஏரி, குளம், குட்டை என நீர்நிலைகளின் தலையெழுத்தையே மாற்றப்போகிறது.

பரந்தூர் விமான நிலையம்
வரைபடத்தில் ரன்வே போடும் இடங்களில் எல்லாம் இன்று ஏகனாபுரம் மக்களின் நம்பிக்கையான ஏரிகள் விரிந்து கிடக்கின்றன. இது வெறும் இன்ஜினியரிங் சவால் மட்டுமல்ல, இயற்கையோடு மனிதன் செய்யும் ஒரு ஆபத்தான பரிசோதனை.
"மழை பெய்ஞ்சா எங்க ஊரு தண்ணி இந்த ஏரிக்குத்தான் வரும், இதை மூடிட்டா நாங்க எங்கே போவோம்?" - இது ஏகனாபுரம் பெரியவர் ஒருவரின் வெற்றுப் புலம்பல் கிடையாது. 2015 மற்றும் 2023 சென்னை வெள்ளத்தை ரத்தமும் சதையுமாகப் பார்த்தவர்களுக்குத் தெரியும், நீரின் பாதையை மறித்தால் அது என்ன செய்யும் என்று. கம்பன் கால்வாய் போன்ற முக்கிய நீர் வழித்தடங்களை மடைமாற்றுவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.
சிமென்ட் கால்வாய்
காகிதத்தில் ஹைட்ராலிக் மாடலிங் எல்லாம் பக்காவாகத் தெரியலாம். ஆனால், வானம் பொத்துக்கொண்டு ஊற்றும் மழையை மனிதன் கட்டிய சிமெண்ட் கால்வாய்கள் மட்டும் கட்டுப்படுத்திவிடுமா என்பதுதான் சந்தேகமே என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
விமான நிலையம் அமையப்போகும் தளம் உயரமாக இருக்கும். அப்படி தரைமட்டத்தை உயர்த்தும்போது, அந்தத் தண்ணீரெல்லாம் பக்கத்து கிராமங்களுக்குள் புகுந்துவிடாதா? இதற்கு அரசு சொல்லும் வடிகால் திட்டங்கள் இன்னும் கிராமத்து மனிதர்களுக்குப் புரியவில்லை.
"மரங்களை நட்டு ஈடு செய்வோம், பசுமை விமான நிலையம் கட்டுவோம்" என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சமாதானங்கள், மண்ணை நம்பி வாழும் விவசாயிக்கு வெறும் டெக்னிக்கல் வார்த்தைகள் மட்டுமே. இங்கே இழப்பீட்டுத் தொகை என்பது 2ம்பட்சம்தான். தலைமுறை தலைமுறையாகப் பார்த்த ஏரியும், வயலும் ரன்வேயாக மாறப்போவதை மக்கள் இன்னும் ஜீரணிக்கவில்லையாம்.
கையகப்படுத்தப்படும் நிலங்கள்
சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் இன்னும் பகீர் ரகம். கையகப்படுத்தப்படும் ஒட்டுமொத்த நிலத்தில் சுமார் 1,200 ஏக்கர், அதாவது 26 சதவீதம் முழுக்க முழுக்க நீர்நிலைகள்தான்.
4-ல் ஒரு பங்கு நிலம் தண்ணீராக இருக்கும்போது, அதை ரன்வேயாக மாற்றுவது என்பது சென்னையைத் தானாகவே ஒரு வாட்டர் டேங்கிற்குள் தள்ளுவதற்குச் சமம். 2015 பெருவெள்ளத்தில் பாடம் கற்ற பிறகும், மீண்டும் அதே தவறைப் பரந்தூரில் செய்வது தற்கொலைக்குச் சமமான முயற்சி என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.
விஜய் என்ட்ரி
இந்தச் சூழலில்தான், தவெக விஜய்யின் எண்ட்ரி பரந்தூர் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. ஏற்கனவே மக்கள் போராட்டக் களத்தில் இருக்கும் நிலையில், "மக்களின் நிலமே அவர்களுக்கு முக்கியம்" என விஜய் ஒரு அதிரடி முடிவை எடுத்தால், அது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுக்கும்.
விஜய் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போடுவாரா அல்லது மக்களின் கோரிக்கைக்கு இணங்க இடத்தை மாற்றுவாரா என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக். வெறும் டெக்னிக்கல் ரிப்போர்ட்டுகளை மட்டும் காட்டி இனி மக்களைச் சமாளிக்க முடியாது. மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறினால், பரந்தூர் கனவு எப்போதுமே ஒரு போராட்டக் களமாகத்தான் இருக்கும்.













Click it and Unblock the Notifications