இனிதான் கதையே ஆரம்பிக்குது..100 தொகுதிகளை தட்டித் தூக்கும் தவெக? முதல்வர் முகமாக விஜய்! பரபர கணிப்பு
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக திமுக ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தின் புதிய வரவாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் குதித்துள்ளது. இந்த நிலையில் வரும் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிட்டால் 100 தொகுதிகள் வரை கைப்பற்றுவார் என தனியார் நிறுவனம் ஒன்று கூறியதாக கருத்துக் கணிப்புகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும், இந்த சர்வே உண்மையா என்று கள ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் திமுக அதிமுக அந்த தேர்தலை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதுகின்றன. திமுக தலைவராக தான் சந்தித்த முதல் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான மு.க.ஸ்டாலின், முதல் முறையாக திமுக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறார்.
ஜெயலலிதா இருந்தபோது இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சந்தித்த 2021 தேர்தலில் தோற்றது. மேலும் அவர் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்ததால் அதற்கு முற்றுப்பள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணியில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும் நிலையில் பாமக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க சீமானுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்ம் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் ஒரு சில சிறிய கட்சிகள் இருக்கின்றன.
இதனால், இந்த கூட்டணி நூற்றுக்கு நூறு உறுதி செய்யப்பட்டது போல தான்.. நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இறுதி நேரத்தில் சீமான் எப்படி முடிவெடுப்பார் என்பது தான் தற்போது கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசியலில் புது வரவான விஜய் 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனக் கூறி அதனை நோக்கி பயணித்து வருகிறார். கட்சி மாநாடு, மாவட்ட செயலாளர் நியமனம் என இருந்த அவர் தற்போது மண்டல வாரியாக பூத் கமிட்டி கூட்டங்களை நடத்த முடிவு செய்திருக்கிறார்.
கோவை கொடுத்த வரவேற்பு விஜயை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து மதுரை நெல்லை, சென்னை என தமிழக முழுவதும் பயணம் செய்ய இருக்கிறார். அதற்குப் பிறகு தொகுதி வாரியாக விஜய் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் விஜயின் கட்சி 100 தொகுதிகள் வரை வெல்லும் என 'போல் மித்ரா' என்ற தனியார் நிறுவனம் நடத்தியதாக கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் பல்வேறு வகைகளில் கேள்விகள் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் ஆகிய 4 முனைப் போட்டியை மனதில் வைத்து கேள்விகள் எழுப்பப்பட்டு இருக்கிறது. பாலின ரீதியாக, மண்டல ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக என பல்வேறு வகைகளில் கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த அடிப்படையில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டால் 95 முதல் 15 தொகுதிகளில் வெல்லும் எனக் கூறியுள்ளது. திமுக கூட்டணி 75 முதல் 85 இடங்களிலும், அதிமுக கூட்டணி 55 முதல் 65 இடங்களிலும் நாம் தமிழர் மற்றும் இதர கட்சியினர் ஐந்து முதல் பத்து இடங்களில் வெல்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை தமிழக வெற்றிக்கழகம் 35 சதவீதமும், திமுக கூட்டணி 30.20%, அதிமுக கூட்டணி 27.85% ,நாம் தமிழர் கட்சி 4.43 சதவீத வாக்குகளை பெறுவார்கள் என கூறியுள்ளது.
தமிழகத்தை வழிநடத்தும் முதல்வர் வேட்பாளராக யாரை பார்க்கிறீர்கள்?என்ற கேள்விக்கு 39.4 சதவீதம் பேர் விஜயை தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். மு.க.ஸ்டாலினை 27.8% பேரும், எடப்பாடி பழனிச்சாமி 18.6% பேரும் சீமானை 5.1% பேரும், அண்ணாமலையை 4.7 சதவீதம் பேரும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் 2026 தேர்தலில் முக்கிய பிரச்சனைகளாக பெண்கள் பாதுகாப்பு 27.3%, மது மற்றும் போதைப்பொருள் பழக்கம் 27.18 சதவீதமும், வேலை வாய்ப்பின்மை 17.6 சதவீதமும், ஊழல் 14.2%, மொழி கலாச்சார அடையாளம் 9.5 சதவீதமும், வேலை வாய்ப்பின்மை & விலைவாசி உயர்வு 6.4% என கூறியுள்ளது.
சாதி ரீதியாக முக்குலத்தோர் அதிமுக 44 சதவீதமும், தமிழக வெற்றிக் கழகம் 34 சதவீதமும், திமுக 17 சதவீதமும் பெறும். வன்னியர் வாக்குகளை தமிழக வெற்றிக்கழகம் 39 சதவீதமும், அதிமுக 36 சதவீதமும், திமுக 19 சதவீதமும் பெறும் என்றும், கவுண்டர் இன வாக்குகளை அதிமுக 35 சதவீதமும், தமிழக வெற்றி கழகம் ஐந்து சதவீதமும், திமுக 20 சதவீதமும் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை தமிழக வெற்றி கழகம் 29 சதவீதமும், திமுக 53 சதவீதமும், அதிமுக 17 சதவீதமும் பெறும் என்றும், பிராமணர்கள் மற்றும் உயர் வகுப்பினரின் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு 46 சதவீதமும், அதிமுக 31 சதவீதமும், திமுக 14 சதவீதமும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர், மேற்கு மண்டலம், தென்மண்டலம், மத்திய மண்டலம், வடமண்டலம் ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முதல் இடத்திலும், திமுக - அதிமுக இரண்டாவது மூன்றாவது இடங்களுக்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் திமுக வலுவாக இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
மத ரீதியான வாக்குகளில் இந்து வாக்குகள் 36 விஜய்க்கு செல்லும் எனவும், இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாக்குகள் 359 சதவீதம் திமுகவுக்கும், கிறிஸ்தவ சமுதாய வாக்குகள் திமுகவுக்கு 47 சதவீதம் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 29 சதவீதம் மற்றும் 41% இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ வாக்குகள் விஜய்க்கு செல்லும் என்கிறது அந்த கருத்து கணிப்பு.
18 வயது முதல் 24, 25 வயது முதல் 41, 42 வயது முதல் 60, 60 வயதுக்கு மேல் என பிரிக்கப்பட்டதில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையாக வாக்குகளை பெரும் என்கின்றது அந்த கருத்து கணிப்பு.
பாலின ரீதியாக பெண்களின் வாக்குகள் 42 சதவீதம் விஜய்க்கும், 28% அதிமுகவுக்கும், 26 சதவீதம் திமுகவுக்கு செல்லும் என்றும், ஆண் வாக்காளர்களை 33 சதவீத வாக்குகள் விஜய்க்கு செல்லும் என்றும், 31 சதவீத வாக்குகள் திமுகவுக்கு சென்றும், 29 சதவீத வாக்குகள் அதிமுகவுக்கு செல்லும் எனவும் விரிவாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் இதனை அசாதாரணமாக கருதுகிறது. பொதுவாக ஒரு நடிகர் அரசியலுக்கு வரும் போது மாற்றங்கள் இருந்தாலும் இவ்வளவு பெரிய மாற்றம் இருக்குமா என்பது கேள்விக் குறி தான். அதே நேரத்தில் எந்த விதமான கருத்துக்கணிப்பையும் புறம் தள்ளி விடக்கூடாது என நினைக்கும் இரு கட்சிகளும் இது தொடர்பாக கள ஆய்வு நடத்த தங்கள் நியமித்திருக்கும் தேர்தல் வியூக நிபுணர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications