தலைமை காதை எட்டிய திமுக தொண்டர்கள் குமுறல்.. டக்கென பறந்த ஆர்டர்! அவங்கதான் ஃபர்ஸ்ட்! கண்டிப்பு!
சென்னை : திமுக அடிமட்டத் தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்கள் என தலைமைக்கு புகார் சென்றதையடுத்து, உடனடியாக முதல்வரிடமிருந்து உத்தரவு பறந்துள்ளதாம். கிராம உதவியாளர் பணிகளை கட்சிக்காரர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என கண்டிப்பான உத்தரவு சென்றிருக்கிறதாம்.
திமுக கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதலே அடிமட்டத் தொண்டர்களை லோக்கல் நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்வதில்லை என தலைமைக்கு புகார்கள் பறந்து வந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் இப்பணிக்கான தேர்வு நடைபெற்றது. இதற்கிடையே இந்த வேலை பெற்றுத்தர, சிலர் பணம் வாங்கியதாக புகார் தலைமைக்குச் சென்றதால், கட் அண்ட் ரைட்டாக உத்தரவு வந்திருக்கிறதாம்.
2 பேர் யார்.. அமைச்சரவை திடீர் மாற்றம்?.. 10வது கேட் வாசலில்.. 2வது மாடி ரூமில்.. பூரிப்பில் திமுக

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு
திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், திமுக தொண்டர்களின் குமுறல் அடங்கவில்லை எனக் கூறப்படுகிறது. பல பகுதிகளிலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் திமுக தொண்டர்கள் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதே இல்லையாம். இதனால், ஒன்றிய, கிளை அளவில் உள்ள பொறுப்பாளர்கள் அடிமட்டத் தொண்டர்களை சந்திக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாம். திமுக தொண்டன் கேட்கும் சிறு சிறு உதவிகளை கூட செய்ய முடியாவிட்டால், நாளை தேர்தல் வரும்போது யாரை வைத்து வேலை செய்வது என அவர்களும் குமுறி வருகிறார்களாம்.

தொண்டர்களின் குமுறல்
முந்தைய திமுக ஆட்சி காலங்களில், கட்சிக்காரர்களுக்கு வேலைகள் வழங்கப்படும். போட்டித்தேர்வு இல்லாத கடைநிலை பணிகளுக்கு, திமுக தொண்டர்களின் குடும்பத்தினருக்கோ, தெரிந்தவர்களுக்கோ வேலைகள் வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் பொருளாதார அடிப்படையில் தன்னிறைவைப் பெறுவார்கள். கட்சி மீதான பிடிமானம் எந்தக் காலத்திலும் அகலாது. கருணாநிதி ஆட்சிக் காலத்தில், கட்சிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நோக்கத்துடனே 'மக்கள் நலப் பணியாளர்' என்ற பதவி கொண்டு வரப்பட்டது. அந்தப் பதவி திமுகவினருக்கே வழங்கப்பட்டது.

மக்கள் நலப் பணியாளர்
அதனால் தான், அதிமுக ஆட்சி அமைந்ததுமே மக்கள் நலப் பணியாளர்கள் அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா. அதுபோக, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், கட்சிக்காரர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தக்க வைத்துக்கொள்வார்கள். இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் திமுக தொண்டர்கள், பணி மாறுதலுக்கு கூட லட்சங்களை இறக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக திமுகவினரே குமுறுகிறார்கள்.

தொண்டன் இல்லாமல்
திமுக தொண்டர்களின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றாமல், தேர்தல் வரும்போது மட்டும் பூத் கமிட்டிக்கு ஆள் வேண்டும் என்று போய் கேட்டால் எப்படி மதிப்பார்கள் என திமுக கிளை, ஒன்றிய நிர்வாகிகள் குமுறுகிறார்கள். இந்த விவகாரம் தலைமைக்கே கொண்டு செல்லப்பட்டது. அடிமட்டத் தொண்டர்கள் சிலர் அறிவாலயத்துக்கே சென்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். அறிவாலய நிர்வாகிகள் இதனை முதல்வர் ஸ்டாலினிடமும் தெரியப்படுத்தினர். அதை வைத்துத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது சாட்டையைச் சுழற்றினார் ஸ்டாலின்.

சாட்டை வீசிய ஸ்டாலின்
திமுக தொண்டர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும், தொண்டர்கள் உழைக்காமல் நாம் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது, நாளைக்கே தேர்தல் வந்தால், அதே தொண்டன் வீட்டுக்குத்தான் நீங்கள் போயாக வேண்டும். தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் செய்திதான் இனி எனக்கு வர வேண்டும் என மா.செக்களுக்கு அதிரடியாக உத்தரவு போட்டார் ஸ்டாலின். கடைக்கோடித் தொண்டன் தலைமைக்கு புகார் கொண்டு வரும் நிலை இருக்கிறது என்றால் அங்கு பணிபுரியும் நிர்வாகிகள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என விளாசினார் ஸ்டாலின்.

சி.எம். ஆர்டர்
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினுக்கு சமீபத்தில் இன்னொரு தகவல் சென்று சேர்ந்திருக்கிறது. சமீபத்தில், தமிழ்நாடு முழுவதும் 2,748 தலையாரி (அ) கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடத்தின. இந்த வேலைக்காக, திமுக தொண்டர்களிடம் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் சிலர் பணம் வாங்கியதாக தலைமைக்கு புகார் பறந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அனைத்து அமைச்சர்களுக்கும் ஓர் அவசர உத்தரவு பறந்திருப்பதாக கூறப்படுகிறது.

சீறிய முதல்வர்
தலையாரி வேலையை அந்தந்த பகுதியில் உள்ள திமுக தொண்டர்கள், நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கோ, தெரிந்தவர்களுக்கோ தான் கொடுக்க வேண்டும் என முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஆர்டர் பறந்திருக்கிறதாம். நம் கட்சி ஆட்சிக்கு வந்தால் நமக்கு எந்த வகையிலாவது பிரயோஜனப்படும் என திமுக தொண்டன் நினைக்க வேண்டும். பணத்தை வாங்கிக்கொண்டு யாருக்காவது வேலை போட்டுக் கொடுத்தால், தொண்டன் எப்படி நம்மை நம்பி கட்சிக்காக உழைப்பான் என சில அமைச்சர்களிடமும் சீறியிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

சைலண்டாக லிஸ்ட்
இதனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் ஆடிப்போயிருக்கிறார்களாம். இனி நம் மீது தலைமைக்கு புகார் சென்றால் சிக்கல் தான் என்பதை உணர்ந்து, வேலை கேட்கும் கட்சிக்காரர்களின் லிஸ்ட்டை எடுத்து வையுங்கள் என கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறார்களாம். இதையடுத்து, கிளை, பகுதி கழக நிர்வாகிகள், வேலை கேட்கும் கட்சிக்காரர்களின் குடும்ப உறுப்பினர்களின் பட்டியலை சைலண்டாக ரெடி செய்து வருகிறார்களாம்.