அனுமதி பெறாம கொடி கம்பம் வைத்தோம்.. பாஜக கரு.நாகராஜன் பேட்டியால் அமர் பிரசாத்துக்கு மேலும் சிக்கல்?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு முன்பாக அனுமதி பெறாமல்தான் கொடி கம்பம் நட்டோம்; அனுமதி பெற்ற பின்னர் கொடி ஏற்றலாம் என காத்திருந்தோம் என தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னையை அடுத்த பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பாக பிரம்மாண்ட கொடி கம்பம் நடப்பட்டிருந்தது. அனுமதி இல்லாமல் நடப்பட்டிருந்த இந்த கொடி கம்பத்துக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜக கொடி கம்பம் அகற்றப்பட்டது.

அமர் பிரசாத் ரெட்டி கைது: இந்த கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் தமிழ்நாடு பாஜகவினர் மோதினர். இது தொடர்பான வழக்கில் பாஜக மாநில் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அண்ணாமலை வீடு முன்பாக 'அனுமதி பெறாமல்தான்' கொடி கம்பம் வைத்தோம் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் பகிரங்கமாக தெரிவித்திருப்பது அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரின் கைது சரிதான் என்பதை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாக பாஜகவினர் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பொறாமையால்தான்.. : கொடி கம்பம் சம்பவம் தொடர்பாக கரு. நாகராஜன் கூறியதாவது: மிக மிக சாதாரண ஒரு சம்பவத்தை பெரிதாக்கி, வேண்டுமென்றே பாஜகவின் வளர்ச்சியையும் அண்ணாமலையின் வளர்ச்சியையும் கண்டு பொறாமையும் காழ்ப்புணர்ச்சியோடு எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தமிழக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது. அவர்கள் போட்டிருக்கும் பிரிவுகள் எல்லாமே எந்தவித தொடர்புமே இல்லாதவை. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிப்பதாக செக்சன் 3 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளன.
ஜேசிபி கண்ணாடி உடைஞ்சது உண்மை: சம்பவம் நடந்த இடத்தில் எந்த ஒரு பொதுச்சொத்துமே இல்லை. எந்த ஒரு பொதுச்சொத்துக்கும் சேதம் விளைவிக்கப்படவில்லை என்பது கண்கூடான ஒன்று. இதே பத்திரிகையாளர்கள் அங்கே இருந்தீர்கள். ஒரு ஜேசிபி வாகனத்தை ஒரு தம்பி கண்ணாடியை பிடித்து தள்ளினார். அப்போது கூட கல்லால் அடிக்கவில்லை. கம்பால் அடிக்கவில்லை. அதுவும் அந்த ஜேசிபிகாரங்ககிட்ட கண்ணாடியை போட்டு கொடுத்துவிடுகிறோம் அப்படின்னு சொன்னோம். ஒரு தனியாரின் ஜேசிபி பொதுச் சொத்து அல்ல.
இதனால் பாஜக நிர்வாகிகளை அச்சுறுத்தி விடலாம், மாநில தலைவர் அண்ணாமலையின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என நினைப்பது மிக மிக தவறான கண்ணோட்டம். சரி இந்த பகுதியில் ஒன்று கூடியவர்களுக்கு நீங்கள் இன்று தண்டனை கொடுத்தீர்கள். இதை சட்டப்படி சந்திப்போம். இதெல்லாம் எங்களுக்கு ஒரு தடைக்கல் இல்லை.

கொடி ஏற்றுவது இஸ்டம்சார்: நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். நவம்பர் 1-ல் இருந்து நவம்பர் 15-க்குள் 10,000 கொடி ஏற்றுவோம் என அண்ணாமலை அறிவித்துள்ளார். இதனால் எங்களுக்கும் பொதுமக்களுக்கும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இஸ்லாமிய சகோதரர்கள் இருக்கிற இடங்களில் எல்லாம் பாஜக கொடி இருக்கக் கூடாதா? அதிமுக கொடி இருக்க கூடாதா? கம்யூனிஸ் கொடி இருக்க கூடாதா? காவல்துறை அனுமதி பெற்ற எத்தனை லட்சம் கொடி தமிழ்நாட்டில் இருக்கு? அரசாங்கத்தை ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்க சொல்லுங்க பார்ப்போம்.. ஒன்னும் கிடையாது.. ஒரு மண்ணும் கிடையாது. அவங்க அவங்க இஸ்டம்னா கொடி ஏத்திக்குவாங்க சார்..இதுதான் சார் தமிழ்நாட்டில் அரசியல் வழக்கம்.
அனுமதி பெறவில்லை: கடந்த 2 ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் கொடி கிராமங்கள் வரை பறந்து கொண்டிருக்கிறது.. கொடி ஏற்றுவது தொடர்பாக எங்களுக்கு எல்லாம் தெரியும். நாங்க அண்ணாமலை வீடு முன்பாக கொடி ஏற்றவில்லை. நல்லா புரிஞ்சுக்குங்க.. கொடி கம்பம்தான் வைத்திருக்கிறோம். நாங்கள் அனுமதி பெற்ற பிறகு கொடி ஏற்ற காத்திருந்தோம். அதற்குள் தடுக்க காவல்துறை துணை போனது எங்களுக்கு வேதனை. நீங்க (பத்திரிகையாளர்கள்) ஆரம்பத்திலேயே அனுமதி கேளுங்க என்கிறீர்கள். அனுமதி இல்லாமலேயே பல ஆயிரம் கொடிகள் பறக்கின்றன. இவ்வாறு கரு.நாகராஜன் கூறினார்.
யார் யாருக்கு யார் மீது என்ன கோபமோ?












Click it and Unblock the Notifications