ஹோம் லோன் பூகம்பம்.. மாட்டினால் பேரன்கூட கடன் கட்டணும்.. ஈஸியா எஸ்கேப் ஆவது எப்படி! ஆனந்த் சீனிவாசன்
சென்னை: பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கடனில் இருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து விளக்கி வந்துள்ளார். இதற்கிடையே இப்போது அவர் வீட்டுக் கடன் பிரச்சினையில் இருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்பதை எளிமையாக விளக்கியுள்ளார்.
எளிய மிட்டில் கிளாஸ் மக்களும் கடனில் இருந்து தப்பி எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குபவர் ஆனந்த் சீனிவாசன். குறிப்பாக 400 கிராம் தங்கம், 40 ஆயிரம் சம்பளம் எல்லாம் இல்லை என்றால் சென்னையில் திருமணமே செய்து கொள்ள வேண்டும் என்றவர்.
இவர் இதற்கு முன்பு வெளியிட்டிருந்த வீடியோவில் வீட்டுக் கடன் வாங்கினால் எப்படி எல்லாம் மாட்டுவோம் என்று விளக்கியிருந்தார். இப்போது இந்த வீடியோவில் அதில் எப்படித் தப்பிக்கலாம் என்பதை விளக்கியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்
இது குறித்து அவர் இந்த வீடியோவில் கூறுகையில், "ஆப்பு எங்கே இருக்கிறது என்று தேடிப் போய் உட்காருவதே நமது மிடில் கிளாஸ் மக்களுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. வேண்டாம் வேண்டாம் எனப் பல முறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் வீடு கடன் என்ற ஆப்பில் சென்று சிக்கிக் கொள்கிறார்கள். வீடு தான் கவுரவம் என்று நினைத்துத் தானே கடன் வாங்கி வீடுகளை வாங்குகிறார்கள். அப்போது உங்கள் பேரன் வரை கடன் கட்ட வேண்டியிருக்கும். கண்ணதாசன் ஒரு பாட்டை எழுதியிருந்தார். வீடு வரை மனைவி, வீதி வரை உறவு, காடு வரை பையன் கடைசி வரை யாரோ என்று எழுதியிருப்பார். இப்போ சொல்கிறேன் கடைசி வரை பேங்க். கடைசி இஎம்ஐ என்று தான் இருக்கிறது.

முதலில் செய்ய வேண்டியது
மிட்டில் கிளைஸில் பலரும் தங்கள் அடுத்த தலைமுறைக்கு கடனையும் இஎம்ஐயையும் விட்டுச் செல்கிறார்கள். சின்ன மாற்றம் செய்தால் போதும், கடன் திரும்பக் கட்ட வேண்டிய காலம் டக்கு டக்கு டக்குனு குறையும்.. முதலில் ஒவ்வொரு மாதமும் வழக்கமான இஎம்ஐ தொகையைக் காட்டிலும் 10% கூடுதலாகக் கட்ட வேண்டும். ஒரு கோடி ரூபாய்க் கடனுக்கு 74 ஆயிரம் இஎம்ஐ என்றால் அதற்குப் பதிலாகக் கூடுதலாக 1% போட்டு, 84 ஆயிரம் ரூபாயாகக் கட்ட வேண்டும். இப்படி வெறும் 10% கூடுதலாகக் கட்டினாலேயே, சுமார் 30 லட்சம் வரை வட்டி குறையும். வட்டி ஏறாமல் இருந்தால் 20 ஆண்டு கடன் என்பது 15 முதல் 17 ஆண்டு கடனாக மாறிவிடும்.

இரண்டாவது வழி
வெறும் 10% நாம் அதிகமாகக் கட்டி வந்தால், வட்டி 2.5% வரை ஏறினாலும் 100 ஆண்டு திரும்பக் கட்ட வேண்டிய நிலைமைக்கு எல்லாம் போகவே போகாது. இதனால் முதலில் இஎம்ஐ தொகையைக் காட்டிலும் கூடுதலாக 10% தொகையை நாம் முறையாகக் கட்ட வேண்டும். இது முதல் வழியாகும். அடுத்ததாக ஒவ்வொரு ஆண்டும் வரும் போனஸ் தொகையையும் அப்படியே வீட்டுக் கடனுக்குக் கட்ட வேண்டும். இந்த இரண்டையும் செய்து வந்தால் கடன் கட்ட வேண்டிய காலம் பாதியாகக் குறைந்துவிடும். 20 ஆண்டு லோன் 12-13 ஆண்டுகளாகக் குறைந்துவிடும். தேவையில்லாத செலவுகளைக் குறைத்து, அதைச் சேர்த்து வைத்து ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 10% தொகையைக் கட்ட வேண்டும். அதேபோல போனசையும் இந்தாண்டு நமக்கு வரவில்லை என்று நினைத்து அப்படியே கட்டிவிடுங்கள்.

பாதியாகக் குறையும்
இந்த இரண்டையும் செய்தால் கடனை திரும்பச் செலுத்த வேண்டிய காலம் கணிசமாகக் குறையும். அதன் பிறகு வட்டியை ஏற்றினாலும் கூட 13- 14 ஆண்டுகளில் ஹோம் லோன் முடிந்துவிடும். அதேபோல சேல்ஸ் இருப்போருக்கு மூன்று மாதங்களுக்குக் கூட ஒரு முறை ஊக்கத் தொகை, போனஸ் கிடைக்கும். அது அத்தனையையும் அப்படியே ஹோம் லோனுக்கு நாம் கட்டி விட வேண்டும். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு இருக்கும். இந்தாண்டு நமக்கு ஊதிய உயர்வு இல்லை என்று நினைத்து, அந்த பணத்தையும் எடுத்துக் கட்ட வேண்டும். கூடுதல் 10% உடன் சேர்ந்து இந்த ஊதிய உயர்வு தொகையையும் எடுத்துக் கட்டினால் கண்டிப்பாகப் பாதி காலத்தில் ஹோம் லோன் முடிந்துவிடும். 20 ஆண்டு லோன் 10 ஆண்டுகளில் முடிந்துவிடும்.

செலவைக் குறைக்கும் வழி
செலவுகளைக் குறைக்க முடியவில்லைனு சிலர் சொல்வாங்க.. அதுக்கும் வழி இருக்கு.. இப்போதெல்லாம் தனித்தனியாக இருக்கும் நியூக்ளியர் பேமலி பேஷனாகிவிட்டது. எனது காலத்தில் எல்லாம் நான் எனது அப்பா, அம்மா உடன் தான் இருந்தேன். பிரச்சினை இருந்தாலும், சண்டை போட்டாலும் ஒரே வீட்டில் தான் இருந்தோம். வீடு வேண்டும் என்று கவுரவம் பார்ப்போர், பெற்றோரை அழைத்து வந்து கூட வைத்துக் கொள்ளலாம். அப்போது ஒரு வீட்டின் செலவு அப்படியே குறையும். அது சொந்த வீடு என்றால் வாடகை வரும், வாடகை வீடு என்றால் வாடகை மிச்சம். மின்சார பில் முதல் எல்லாவற்றையும் பாதியாக குறைக்க முடியும்.

6,7 ஆண்டுகளில் முடியும்
இப்படி அனைத்தையும் பல்லைக் கடித்துக் கொண்டு செய்தால், 6 - 7 ஆண்டுகளில் ஹோம் லோனை முடித்துவிடலாம். கவுரவத்திற்கு வீடு வாங்குகிறேன் என்று முடிவு செய்துவிட்டால், இதையெல்லாம் செய்ய வேண்டும். அப்போது தான் பிரச்சினை சரியாகும். அதாவது முதலில் 10% தொகை கூடுதலாகக் கட்ட வேண்டும்.. அடுத்து ஊக்கத் தொகை, போனஸ் என்று அனைத்தையும் கட்ட வேண்டும். ஊதிய உயர்வு வந்தால் அதையும் கட்ட வேண்டும். மேலும், பெற்றோரை உடன் கூட்டி வந்துவிட வேண்டும். பெற்றோரை உடன் வைத்துக் கொண்டால் நமக்குச் சொல்லப்போனால் இரண்டு நன்மை. செலவுக்குச் செலவும் குறையும்.

இரட்டை நன்மை
அதேபோல இப்போது அப்பா- அம்மா என இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் பிள்ளைகளைக் கவனிக்க முடிவதில்லை. அதுவே வீட்டில் தாத்தா- பாட்டி இருந்தால் அவர்கள் பிள்ளைகளை ஒழுங்காகப் பார்த்துக் கொள்வார்கள். இப்படி இரட்டை நன்மை. உங்கள் வங்கியில் இருந்து மாதம் எவ்வளவு கட்ட வேண்டும் என்ற டேட்டாவை வாங்கி.. நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள். சர்னு 5, 6 ஆண்டுகளில் உங்களால் ஒட்டுமொத்த ஹோம் லோனையும் குறைக்க முடியும். ஆனால், இதையெல்லாம் நாம் முறையாகச் செய்வோமா என்பதே கேள்வி. வங்கிகள் இதையெல்லாம் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் ஒருவர் கடனை சீக்கிரம் கட்டி முடித்துவிட்டால், வங்கிக்குத் தான் நஷ்டம். வட்டி குறைவாகக் கிடைக்கும்.

தனியார் வங்கிகள்
கூடுதல் தொகையைக் கட்டினால் வங்கிகளுக்கு வரும் வட்டி குறையும். இதனால் சில தனியார் வங்கிகள் கூடுதல் ஈஎம்ஐ கட்டுவதைத் தடுக்க சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர். அதாவது வெறும் 10% மட்டும் கூடுதலாகக் கட்ட முடியாது, குறைந்தது 3 மாதங்கள் கட்ட வேண்டும் என்பார்கள். அப்படி இருந்தால், 10, 10% சேர்த்து வைத்து மொத்தமாகக் கட்டுங்கள். ஆனால், இதை நாம் செய்ய மாட்டோம். ஏனென்றால் நான் சொல்லும் அனைத்தையும் செய்தால் தேவையில்லாமல் வெளியே செல்ல முடியாது.. படங்களுக்கும் செல்ல முடியாது.. இதெல்லாம் பலருக்கும் பிடிக்காது என்பார்கள். இதன் காரணமாகவே நாம் அதிக வட்டியைக் கட்டுகிறோம்.

ஆசையை தள்ளிப்போடுங்கள்
ஆனால், ஆசையைத் தள்ளிப்போட்டு பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தால்.. 6, 7 ஆண்டுகளில் வீடும் கிடைக்கும், கடனையும் கட்டி விடலாம். 20 ஆண்டு கடன் வாங்கி, 100 ஆண்டுகள் கட்ட வேண்டுமா.. அல்லது 5, 6 ஆண்டுகள் செலவுகளைக் குறைக்க வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். என்னைக் கேட்டால் இப்போது இருக்கும் சூழலில் வீடு வாங்காமல் இருப்பதே பெஸ்ட். 20 ஆண்டுகள் கஷ்டப்பட்டு கடனை கட்டியும் வாங்கிய விலைக்குக் கூட வீட்டை விற்க முடிவதில்லை என்று பலரும் கஷ்டப்படுகிறார்கள். இப்போது வேலை செய்யும் இடங்கள் எளிதில் மாறலாம் என்ற சூழலே இருக்கிறது. முன்பெல்லாம் ஒரே இடத்தில் தான் வேலை செய்து ஓய்வு பெறுவார்கள். ஆனால், இப்போது வேலை செய்யும் ஊர் அடிக்கடி மாறும். இதனால் வீடுகளை வாங்கினாலும் அங்கே தான் இருப்போம் என்று 100% உறுதியாகச் சொல்ல முடியாது.

இதுதான் பெஸ்ட்
அதேபோல கடன் வாங்கி வீடு வாங்குவோருக்கும் வேலை செய்யும் இடத்திற்கு அருகே கிடைப்பதில்லை. வேலைக்கு வரவே சில மணி நேரங்கள் பயணிக்க வேண்டி இருக்கிறது. இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், நகரத்திற்கு வெளியே இருந்தால் பசங்களின் படிப்பு தொடங்கி அனைத்திலும் பிரச்சினை இருக்கிறது. இப்போதிருக்கும் சூழலில் வீடு வாங்காமல் இருப்பதே சிறந்தது. வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் வீடு வாங்காமல் இருப்பதே பெஸ்ட். அப்படியே வாங்கினாலும் நான் சொன்ன வழிகளைப் பின்பற்றினால் வெகு விரைவில் கடனை கட்டி முடிக்க முடியும். அப்படியில்லை என்றால் பணத்தை சில ஆண்டுகள் சேர்த்து வைத்து, கடனை தவிருங்கள்.. நேரடியாகப் பணத்தைக் கொடுத்து வீட்டை வாங்குங்கள். அதுவே பெஸ்ட்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications