கூடங்குளத்தை டார்க்கெட் செய்த புதின்.. 3வது அணு உலைக்காக ரஷ்யாவில் இருந்து வந்த எரிபொருள்.. பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் உள்ள பெரிய அணுமின் நிலையத்தில் மீதமுள்ள 4 அணுஉலைகளை விரைவில் கட்டமைத்து தருவோம் என்று இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கூறினார். இதற்கிடையே தான் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3வது அணு உலைக்கான எரிபொருளை ரஷ்யா அனுப்ப தொடங்கி உள்ளது. மொத்தம் 7 ராட்சத விமானங்களில் அணு உலைக்கான எரிபொருள் வர உள்ள நிலையில் முதற் தொகுப்பு வந்திறங்கி உள்ளது. இதனால் விரைவில் கூடங்குளத்தில் 3வது அணுஉலை செயல்பாட்டுக்கு வர உள்ளது .
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடன்குளம் அணுஉலை உள்ளது. இங்கு மொத்தம் 6 அணு உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும் எதிர்ப்பையும் மீறி அணுஉலைகள் அமைக்கப்பட்டது.

கூடன்குளத்தில் தற்போது 2 அணு உலைகள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. முதல் அணு உலை கடந்த 2013ம் ஆண்டிலும், 2வது அணுஉலை 2016ம் ஆண்டிலும் நடைமுறைக்கு வந்தது. இந்த அணுஉலைகளில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஒவ்வொரு அணுஉலையும் 1000 மெகாவாட் திறன் கொண்டவையாகும். தற்போது 2 அணுஉலைகளில் இருந்து 1800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, மற்ற நான்கு அணுஉலைகள் கட்டுமானத்தில் உள்ளன. இந்த கட்டுமான பணிகளை ரஷ்யாவின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவின் ரோசோட்டமின் நிறுவனம் தான் இந்த பணிகளை செயல்படுத்தி வருகிறது. தற்போது 3வது அணுஉலையை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி பார்த்தால் ரஷ்யாவில் இருந்து கூடங்குளம் 3வது அணுஉலைக்கான எரிபொருள் சப்ளை தொடங்கி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று வந்தார். இந்நிலையில் தான் ரஷ்யாவில் இருந்து தற்போது முதற்கட்டமாக அணுஉலைக்கான எரிபொருள் சப்ளை தொடங்கி உள்ளது. மொத்தம் 7 விமானங்களில் இந்த பொருட்கள் இந்தியா வரும் நிலையில் முதல் தொகுப்பு வந்துள்ளது.
ரஷ்யாவின் ரோசாட்டமின் நிறுவனம் சார்பில் நோவோசிபிர்ஸ்க் கெமிக்கல் கான்சென்ட்ரேட்ஸ் பிளான்டால் தயாரிக்கப்பட்ட அணு உலைக்கான எரிபொருள் முதற்கட்டமாக இந்தியா வந்துள்ளது. இதுதொடர்பாக 2024ம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இப்போது முதல் தொகுப்பு கிடைத்துள்ளது. 7 தொகுப்பும் இந்தியா வரும் பட்சத்தில் கூடங்குளத்தில் செயல்பாட்டு வர உள்ள 3வது மற்றும் 4வது அணு உலையின் ஆயுட்காலத்துக்கு தேவையான அணு எரிபொருள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications