அந்த 15 நிமிடம்.. "சசிகலா" கையிலிருந்த பாக்ஸ்! எடப்பாடிக்கு எதிராக "வைத்தி" பிள்ளையார் சுழி.. அமோகம்
சென்னை: அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில்தான் இன்று நடந்த சந்திப்பு ஒன்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி.. எது நடக்கும் என்று எதிர்பார்த்தாரோ.. எது நடக்க கூடாது என்று நினைத்துக்கொண்டு இருந்தாரோ அது நடப்பதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு காரணமாக எடப்பாடி பழனிசாமி ஏக குஷியில் இருக்கிறார். இந்த நிலையில்தான் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்முறையாக, அதிக இடைக்கால பொதுச்செயலாளராக அவர் நேற்று சென்றார்.
72 நாட்களுக்கு பின் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். தொண்டர்கள் வெள்ளம் சூழ, பெரும் வரவேற்பிற்கு இடையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் வந்தார்.

ஆதரவு
நேற்று எடப்பாடியை சந்திக்க 63 எம்எல்ஏக்கள் வந்தனர். இதன் மூலம் தனக்கு முழு எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது என்பதை எடப்பாடி நிரூபித்து இருக்கிறார். அதேபோல் 66 மாவட்ட செயலாளர்கள் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். இதன் மூலம் கட்சியில் தனக்குத்தான் பெரும்பான்மை உள்ளது என்று அவர் நிரூபித்து இருக்கிறார். நிர்வாகிகள் எல்லோரும் தன் பக்கம்தான் இருக்கிறார்கள். தனக்கே கட்சிக்குள் ஆதரவு அதிகம் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு எடப்பாடி காட்டி உள்ளார்.

ஓ பன்னீர்செல்வம்
ஆனால் இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் சுணக்கம் அடையாளம் குஷியாகவே இருக்கிறது. தீர்ப்பு எதிராக வந்தாலும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு நம்பிக்கையுடன்தான் இருக்கிறது. ஓ பன்னீர்செல்வம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு நம்புகிறது. இதற்கு இடையில்தான் ஓ பன்னீர்செல்வம் பெரும்பாலும் சசிகலாவை சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எடப்பாடி எந்த சந்திப்பு நடக்க கூடாது என்று நினைத்தாரோ அதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.

ஒரத்தநாடு
இன்று ஒரத்தநாட்டில் சசிகலா - ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் இடையே சந்திப்பு நடந்தது. இதன் மூலம் முதல் முறையாக ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஒருவர் சசிகலாவை நேரடியாக சந்தித்து இருக்கிறார். ஓபிஎஸ் - சசி இருவருக்கும் இடையிலான சந்திப்பின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் மீண்டும் சசிகலா - டிடிவி தினகரன் இணைய வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.

என்ன சொன்னார் ?
எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர்கள். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்காக பணிகளை செய்தவர்கள் யாராக இருந்தாலும் மீண்டும் அதிமுகவிற்குள் வர வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இதற்காக யாரையும் சந்தித்து பேச நான் தயார் என்று ஒபிஎஸ் கூறியுள்ளார்.இதை இன்னும் சசிகலா வெளிப்படையாக ஏற்கவில்லை. இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் இதை வரவேற்றுள்ளார். தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள், என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சசி சந்திப்பு
சசிகலாவை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் தயாராக உள்ள நிலையில்தான்.. இன்று வைத்தி - சசிகலா இடையிலான சந்திப்பு நடந்துள்ளது. இது வெறும் டீசர்.. விரைவில் மெயின் பிக்சர் நடக்கும் என்கிறார்கள் ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்கள். வைத்தியலிங்கம் ஒரு நிகழ்ச்சிக்காக செல்லும் போதும்.. சசிகலா திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற போதும் ஒரத்தநாட்டில் சந்தித்துக்கொண்டனர். இவர்கள் சந்திப்பு 15 நிமிடம் நீடித்தது.

அன்பான பேச்சு
இரண்டு பேருமே அன்பாக பேசிக்கொண்டனர். அதோடு அதிமுக விவகாரங்கள் குறித்தும் பேசிக்கொண்டனர். இன்று வைத்தியலிங்கம் பிறந்தநாள். இதை பற்றி சசிகலாவிடம் வைத்தியலிங்கம் கூறினார். உடனே சசிகலா காரில் இருந்த ஸ்வீட் பாக்ஸை எடுத்து வைத்தியலிங்கத்திடம் கொடுத்தார். இதன்பின் அவர்கள் இருவரும் எதிர் எதிர் திசையில் சென்றனர். சசிகலாவை சந்தித்ததன் மூலம் எடப்பாடிக்கு எதிராக வைத்தியலிங்கம் முக்கியமான பிள்ளையார் சுழியை போட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications