’1000 ரூபாய்’ பொங்கல் பரிசு காத்திருக்கிறது! 2023-ல் ரொக்கமாக வழங்கும் தமிழக அரசு! என்ன காரணம்?
சென்னை : பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொருட்களாக அல்லாமல் ரொக்கமாக வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக உணவு வழங்கல் மற்றும் நிதித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது.

பொங்கல் பரிசு
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களோடு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில், ரொக்கப் பணத்திற்கு பதிலாக அரிசி, நெய், ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி, கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

குற்றச்சாட்டு
அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமற்றதாக இருந்ததாகவும், வெல்லம் போன்றவை உருகிய நிலையில் இருந்ததாகவும், ஒரு பரிசு தொகுப்பில் இருந்த வெல்லத்தில் பல்லி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது.

விமர்சனம்
இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் இது குறித்து பேசியிருந்தனர். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது.இதில் அதிக குளறுபடி நடந்ததாக சமூக வலைதளங்களின் மூலமாகவும் கடும் விமர்சனம் செய்யப்பட்டது. மேலும் இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் பாஜக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தது.

இந்தாண்டு ரொக்க பரிசு
இந்த நிலையில் தான், 2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இந்த முறை எந்த பரிசு பொருளும் தராமல் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.1000 பணம் தர முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்?
கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்புகளாக வழங்கப்பட்ட போது பல பிரச்சினைகள் எழுந்தது. மேலும் சில பொருட்களை கொள்முதல் செய்வதிலும் நடைமுறை பிரச்சினைகள் எழுந்தன. இதனால் முதலமைச்சரே நேரடியாக தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த முறை தேவையற்ற சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க ரொக்கமாகவே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக உணவு வழங்கல் மற்றும் நிதித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications