அடுத்த லெவலுக்கு பாயும் தமிழகம்.. அமைச்சரவை கூட்டத்தில் மேஜர் முடிவு.. தங்கம் தென்னரசு பளிச் பேச்சு
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த அமைச்சரவை கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டம்: குறிப்பாக புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் நீண்ட நாள் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ஈசிஆர் சாலை விரிவாக்கம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். நிதியமைச்சர் பேசுகையில், "தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் மிகப் பெரியளவுக்கு முன்னேறி இருக்கிறது. புதிய தொழில் நிறுவனங்களுக்குத் தொகுப்பு சதவீத சலுகை வழங்குவது தொடர்பாக இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேஜர் முடிவுகள்: மேலும், தொழில் வளர்ச்சிக்கு எப்போதும் சிறந்த துறைமுக கட்டமைப்பு அவசியம்.. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி தமிழ்நாட்டில் தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக எட்டு நிறுவனங்களுக்குத் தொழில் தொடங்க அனுமதி அளிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7 ஆயிரம் கோடி முதலீட்டில் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் விண்வெளி ஆராய்ச்சி, மின் வாகனம் தொழிற்சாலைகள் நமது மாநிலத்திற்கு வர இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், திருச்சி, சேலம் மாவட்டங்களில் இருக்கும் செய்தியாளர்களுக்கு நிலம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications