"எல்லை மீறுது.." இந்த வருஷத்துலேயே முதல்முறை இப்படி.. சென்னைக்கு மிக பெரிய வார்னிங் தந்த வெதர்மேன்
சென்னை: தமிழ்நாட்டில் சில நாட்களாகக் கோடை வெயில் நம்மை வைத்துச் செய்து வரும் நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் இரு துருவங்களிலும் இருக்கும் பனிப்பாறைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக உருகி வருகிறது.
இதனால் ஏதோ உலகின் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே பாதிப்பு என்று இல்லை. உலகின் அனைத்து பகுதிகளும் இந்த பருவநிலை மாற்றம் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

வெப்பம்: பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் அனைத்து பகுதிகளிலும் வெப்பம் தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.. இதனால் இத்தனை ஆண்டுகள் பனி படர்ந்த இடங்களிலும் கூட இப்போது பனி உருகத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கே புதைந்திருந்த ஆபத்தான வைரஸ் கிருமிகளும் கூட நமக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்படி வெப்பம் அதிகரிப்பதால் நாம் பல வித பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறேம்.
இந்தாண்டும் இந்தியாவில் கோடைக் காலத்தில் வெப்பம் வைத்துச் செய்து வருகிறது. பல பகுதிகளில் வெப்ப அலை மோசமாக இருக்கிறது. இந்தாண்டு வெப்பம் கடுமையாக இருக்கும் என்று ஆய்வாளர்களும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தனர். கடந்த பிப். மாதம் வெப்பமே இந்தியாவில் உச்சம் தொட்டது. கடந்த 100 ஆண்டுகளில் பிப். மாதம் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் இந்தாண்டு பதிவானது.

உச்சம் தொடும் வெப்பம்: அதன் பின்னர் மார்ச் தொடங்கி வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் தொடர்ந்து சதமடித்து வந்தது. நேற்று கூட தமிழ்நாட்டில் மொத்தம் 16 இடங்களில் வெப்பம் சதமடித்திருந்தது. அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன்: சென்னையில் வெப்பம் இப்படித் தொடர்ந்து உச்சமடைந்து வரும் நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய வார்னிங்கை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பல ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில், "பெரிதாக ஒன்றும் மாறவில்லை.. தமிழ்நாட்டிற்கு மற்றொரு அதிகபட்ச வெப்பநிலை கொண்ட நாள் வரும். சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்னும் 40C (104 பாரன்ஹீட்) வெப்பத்தைத் தாண்டி இருக்கிறது.
வேலூரில் நேற்று ஓரளவு மழை பெய்ததால், மீண்டும் 42+ செல்சியஸ் வெப்பம் வராது. நேற்றை விட 2C குறைவாக இருக்கும். தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் 38-39 C வெப்பநிலை இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

தலைநகர் சென்னை: அதேபோல மற்றொரு ட்வீட்டில் நகரில் பதிவான வெப்பம் எவ்வளவு என்பதையும் பகிர்ந்துள்ளார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 40.7 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கிண்டி 41 C, தரமணி 40.2 C வெப்பம் பதிவாகியுள்ளது. கிண்டி 41, தரமணி 40.3, எம்ஆர்சி நகர் 39.1, எண்ணூர் 39.1, நந்தனம் 39 வெப்பம் பதிவாகியுள்ளது. புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை மேற்குத் தாம்பரம் 39.8, பொத்தேரி 39.6, வானகரம் 39.4, திரூர் 39 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
அதேபோல தமிழ்நாடு வெதர்மேன் மற்றொரு ட்வீட்டில், "மே 2020 க்குப் பிறகு முதல் முறையாக நுங்கம்பாக்கத்தில் 41 Cஐ தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெப்பம் மேலும் மேலும் உயரும். இது 42 Cஐ தாண்டுமா? கடைசியாக 2017இல் நுங்கம்பாக்கத்தில் 42 செல்சியஸ் வெப்பத்தைத் தாண்டி இருந்தது.

உச்சம் தொடும்: கடல் காற்று நகருக்குள் வருவதற்கான அறிகுறி இன்னும் இல்லை. கடலுக்கு அருகில் உள்ள பகுதிகள் முதலில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. அதன் பின் நகரின் உட்புறத்திலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது.
நுங்கம்பாக்கத்தில் இப்போது வெப்பம் 42 Cக்கு அருகில் உள்ளது. ஆண்டின் வெப்பமான நாள், இது ஒரு பிரேக்அவுட் ஸ்டாக் போல இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடையவே முயல்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இன்று சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூரில் வெப்பம் மிக அதிகமாக இருக்கிறது. அதிகபட்சமாக வானகரத்தில் 42.9 டிகிரி, தாம்பரத்தில் 42.8 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications