பாகிஸ்தான் வான்வெளி மூடல்.. பயண நேரம், எரிபொருள், மாற்றுப்பாதை.. இந்திய விமானங்களுக்கு பெரிய சிக்கல்
சென்னை: இன்று முதல் பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமான நிறுவனங்களுக்கு மூடியுள்ளதால், விமான நிறுவனங்கள் நீண்ட நேரம் பயணிப்பதையும், வட இந்தியாவில் இருந்து புறப்படும் மேற்கு நோக்கிய சர்வதேச விமானங்களுக்கு அதிக எரிபொருள் இழப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் வான் எல்லையை இந்திய விமானங்களுக்கு மூடியதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
காஷ்மீரின் பஹல்காம் தாக்தலை தொடர்ந்து இந்தியா வாகா எல்லையை மூடியது. மேலும் சிந்து நதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவிட்டது. இதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான், இந்தியாவில் இருந்து செயல்படும் விமான நிறுவனங்களின் விமானங்கள் அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்படும் மத்திய ஆசியா, காகசஸ், மேற்கு ஆசியா, ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவிற்கு செல்லும் ஏராளமான இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களை பாகிஸ்தானின் பழிவாங்கும் நடவடிக்கை பாதிக்க உள்ளது.
கட்டணம் உயர்வு
விமான நிறுவனங்களின் கூற்றுப்படி, விமான பயணங்களுக்கான எரிபொருள் செலவுகள் அதிகரிக்கும் மற்றும் விமானக் கட்டணங்கள். அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம் இந்தியாவை தவிர பிற நாடுகளின் விமான நிறுவனங்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து பறக்கக்கூடும் என்பதால், பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் இந்திய விமான நிறுவனங்களை விட அவர்களுக்கு செலவு குறைவாக இருக்கும.
2019ல் 700 கோடி இழப்பு
பாகிஸ்தான் கடைசியாக தனது வான்வெளியை 2019ம் ஆண்டில் மூடியது . பாலகோட் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து வான்வெளியை மூடியது. இதன் காரணமாக அதிக எரிபொருள் செலவுகள் மற்றும் நீண்ட வழித்தடங்களுடன் விமானங்கள் பயணித்து வந்ததன் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் சுமார் ₹700 கோடி அளவிற்கு இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியாவுக்கு பாதிப்பு
2019ம் ஆண்டு பாகிஸ்தான் வான் எல்லையை மூடிய போது, ஏர் இந்தியா விமான நிறுவனம் தான் மிகவும் பாதிக்கப்பட்டது. ஏனெனில் ஏர் இந்தியா நிறுவனம் தான், மற்ற விமான நிறுவனங்களை விட மேற்கு நோக்கி அதிக சர்வதேச விமானங்களை இயக்கி வந்தது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு நீண்ட தூர மற்றும் மிக நீண்ட தூர விமானங்களை இயக்கும் ஒரே இந்திய விமான நிறுவனமாக ஏர் இந்தியா அப்போது இருந்தது.இன்னும் ஏர் இந்தியா தான் அப்படி பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
ஏர் இந்தியா விளக்கம்
இந்நிலையில் டாடாவிற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "அனைத்து இந்திய விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தான் வான்வெளியில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக, வட அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் சில ஏர் இந்தியா விமானங்கள் மாற்று வழித்தடத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கள் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள இந்த எதிர்பாராத வான்வெளி மூடலால் எங்கள் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ஏர் இந்தியா வருந்துகிறது. ஏர் இந்தியாவை பொறுத்தவரை, எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கே முதல் முன்னுரிமை அளிக்கிறது என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம் "என்று பதிவிட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம்
அதேபோல் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, பயணிகளுக்கு ஒரு பயண ஆலோசனை அறிவிப்பை வெளியிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இண்டிகோ மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவின் எல்லையில் உள்ள காகசஸ் பகுதிக்கு விமானங்களை இயக்கி வருகிறது. காகசஸ் பகுதியில் உள்ள பல இடங்கள் இந்தியர்களுக்கான பிரபலமான சுற்றுலாத் தலங்களாக மாறி வருவதால் இண்டிகோ விமானங்களை அதிக அளவில் இயக்கி வருகிறது.
டிக்கெட்டை ரத்து செய்யலாம்
இண்டிகோ வெளியிட்ட அறிவிப்பில், "பாகிஸ்தானின் விமானப் பாதை மூடல் குறித்த திடீர் அறிவிப்பால், எங்கள் சில சர்வதேச விமானங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்படக்கூடிய சிரமத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தின் இலக்கை விரைவில் அடைய எங்கள் இண்டிகோ குழுக்கள் தங்களால் இயன்றதைச் செய்கின்றன. சமீபத்திய விமான நிலையைச் சரிபார்க்க வேண்டுகிறோம். ஒரு வேளை நீங்கள் வேறு எங்காவது பிடிக்க வேண்டிய விமானங்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு ஏற்ப மறு முன்பதிவு விருப்பங்களை பாருங்கள் ...அல்லது எங்கள் வலைத்தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு பணத்தைத் திரும்பப் பெறலாம்" என்று கூறியுள்ளது.
பயண நேரம் அதிகரிப்பு
இண்டிகோ வியாழக்கிழமை மாலை டெல்லியில் இருந்து பாகு மற்றும் திபிலிசிக்கு செல்லும் விமானங்களின் கால அளவை சுமார் ஒன்றரை மணி நேரம் நீட்டித்திருக்கிறது. மேலும் டெல்லி-அல்மாட்டி விமானத்தையும் ரத்து செய்துள்ளது. அதேநேரம் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் ஏற்படக்கூடிய நிதி பாதிப்பு குறித்து இந்திய விமான நிறுவனங்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
மாற்றுப்பாதை என்ன
விமான நிறுவன வட்டாரங்களில் வரும் தகவலின் படி, இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் பாகிஸ்தானின் நடவடிக்கையால் ஏற்பட உள்ள ஆரம்ப கட்ட தாக்கத்தை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் தற்போது பாதிக்கப்படும் பாதைகளில் இருந்து வேறு பாதையில் விமானங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன. டெல்லி, லக்னோ மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட வட இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் விமான நிறுவனங்கள் இப்போது குஜராத் அல்லது மகாராஷ்டிராவிற்கு மாற்றுப்பாதையில் சென்று ஐரோப்பா, வட அமெரிக்கா அல்லது மேற்கு ஆசியாவிற்கு வலதுபுறம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான் வழியாக போகாமல், மும்பை வழியாக குஜராத்தை கடந்து அப்படியே அரபிக்கடல் வழியாக சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏற்படப் போகும் தாக்கம் மற்றும் முழு விவரம் அடுத்த சில நாட்களில் தெரிய வரலாம்.
பாகிஸ்தான் வழியாக இயக்கம்
இந்தியாவின் அனைத்து முக்கிய விமான நிறுவனங்களுமே நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து மேற்கு நாடுகளில் உள்ள இடங்களுக்கு சர்வதேச விமானங்களை இயக்குகின்றன. மேலும் இந்த விமானங்களில் பல வழக்கமாக பாகிஸ்தான் வழியாகவே பறக்கின்றன.
ஏர் இந்தியா விமானங்கள்
ஏர் இந்தியா நிறுவனத்தை பொறுத்தவரை மேற்கு ஆசியா, ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது, அதே நேரத்தில் இண்டிகோ மேற்கு ஆசியா, துருக்கி, காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவிற்கு விமானங்களை இயக்கி வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்ளும் மேற்கு ஆசியாவில் உள்ள இடங்களுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன.
எத்தனை நாட்கள் மூடல்
முன்னதாக பாலகோட்டில் இந்திய விமானப்படையின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தான் தனது வான்வெளியை முழுமையாக மூடியது.அதன்பின்னர் 2019 ஜூலை மாதம் தான் தனது வான்வெளியை முழுவதுமாகத் திறந்தது. ஜூன் மாதம் வரை, பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ₹550 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய டேட்டாவில் உள்ளது. ஆனால் சுமார் ₹700 கோடி அளவிற்கு பாதிப்பு இருந்ததாக விமான நிறுவனங்கள் கூறின. எனினும் 2019 ஜூலையில் பாகிஸ்தான் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கியது.
80 நிமிடம் அதிகரிப்பு
2019 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் வான்வெளியை மூடியதால், பெரும்பாலான இந்திய விமானங்களின் பயண நேரம் குறைந்தது 70-80 நிமிடங்கள் அதிகமானது. டெல்லியில் இருந்து சிகாகோவிற்கு செல்லும் ஏர் இந்தியாவின் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஐரோப்பாவில் நிறுத்த வேண்டிய நிலை அப்போது ஏற்பட்டது. மேலும் டெல்லியில் இருந்து இஸ்தான்புல்லுக்கு செல்லும் இண்டிகோவின் விமானம் தோஹாவில் எரிபொருள் நிரப்ப வேண்டிய நிலையும் அப்போது ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications